செல்வாக்கை இழக்கும் கலை நிகழ்ச்சிகள்
பத்தாண்டுகளுக்கு முன்னர் கோவில் திருவிழாக்களில் வைக்கப்படும் கலை நிகழ்ச்சிகளைக் காண பக்கத்து ஊர்களில் இருந்து ஆட்கள் எல்லாம் வருவார்கள். நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் கூட்டம் அலைமோதும். காபி, டீக்கடைகள், இனிப்புக் கடைகள், சுக்கு மல்லி காபி என சுற்றிலும் கடை விரித்திருப்பார்கள். ஆனால் இன்றைக்கு நிலமையே வேறு. உள்ளூர்க்காரர்கள் கூட உட்கார்ந்து பார்ப்பதில்லை.
திருவிழா என்றாலே என்ன நிகழ்ச்சி வச்சிருக்கீங்க என்றுதான் கேட்பார்கள். நாடகம் என்றால் என்ன நாடகம், பபூன் யார்... ராஜபார்ட் யார் என்றெல்லாம் கேட்டு வள்ளி திருமணம் என்றால் அவரைப் போட்டிருக்கலாமே... போன வாரம் அங்க வந்தாரு... சும்மா கலக்கிட்டாருல்ல... கூட்டம் எந்திரிச்சே போகலை என்பார்கள்... அரிச்சந்திர மயானகாண்டம் என்றால் காமராஜ்தாம்பா என்பார்கள். கரகாட்டம் என்றால் துர்க்காவா? மல்லிகாவா? அப்படின்னு கேட்டு வாய் பிளப்போர் ஏராளம். நாடகம் நடக்கும் மேடைக்கு எதிரே பாய் விரித்து அமர்ந்து ரசிப்பார்கள். ஒரு சில ஊர்களில் மேடையை மையமாக வைத்து கயிறு கட்டி பாதை போட்டு ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக அமர வைப்பார்கள். கரகாட்டம் என்றால் நான்கு பக்கமும் கம்பு ஊன்றி, அதில் விளக்குகள் கட்டி வைத்திருப்பார்கள். ஒரு சில இடங்களில் நான்கு கம்பையும் சுற்றி கயிறு கட்டி வைத்திருப்பார்கள். பல இடங்களில் கயிறெல்லாம் கட்டமாட்டார்கள், குதிக்கும் குறத்தி கூட்டத்துக்குள் ஓடி வர வேண்டும் அல்லவா?.
இப்போதெல்லாம் நாடகம், கரகாட்டம், ஆடல்பாடல் என எல்லாமே இரட்டை அர்த்த வசனங்களுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கின்றன. நாடகம் என்றால் பபூனும் டான்ஸூம் பேசும் இரட்டை அர்த்த வசனம் முடிந்ததும் கூட்டம் கலைந்து விடும். கரகாட்டத்துக்கு கூட்டம் குறைவதில்லை... காரணம் குறவன் குறத்தியின் இரட்டை அர்த்த வசனங்களும் கேவலமான ஆட்டமுந்தான். பெரும்பாலான இடங்களில் கரகாட்டம், ஆடல்பாடல் எல்லாம் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளன... காரணம் அருவெறுக்கத்தக்க ஆபாசம்.
மேலும் முன்பு போல் பெரும்பாலானோர் விரும்பிப் பார்க்க நினைப்பதில்லை. பக்கத்து ஊரில் நாடகம் என்றால் கூட ஆமா இதைப் போயி பாரு என்று படுத்து விடுகிறார்கள். உள்ளூர்க்காரன் கூட கொஞ்ச நேரம் நின்றுவிட்டு நமக்கு சரி வராது... தூக்கம் வருதுன்னு கிளம்பிடுறான். இரட்டை அர்த்த வசனம் வந்த பிறகு நாடகம், கரகாட்டம் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மக்களிடம் இருந்த வரவேற்ப்பை இழந்து விட்டது. ஒயிலாட்டம் என்று ஒரு நிகழ்ச்சி, இராமாயணக் கதையை அழகாய்ச் சுருக்கி நடிப்பார்கள். அதெல்லாம் இப்போது போன இடம் தெரியவில்லை. நாடகத்தையாவது பெண்கள் பார்க்கிறார்கள். கரகாட்டத்தை பெண்கள் பார்ப்பதே இல்லை... இப்ப பார்க்கும்படியாகவும் இல்லை...
எங்கள் பகுதியில் கரகாட்டம், ஆடல் பாடல் போன்றவற்றிற்கு அனுமதியில்லை. எங்கள் ஊர் திருவிழாவில் கரகாட்டம், ஆடல் பாடல், நாட்டுப்புறப்பாடல் கச்சேரி என எல்லாம் யோசித்து நாடகம் வைத்தால் பாக்க நாலு பேர் கூட இருக்கமாட்டான்னு இந்த வருடம் புதுமையாக தேவகோட்டை ராமநாதன் தலைமையில் பட்டிமன்றம் வைத்தோம். எங்கள் பகுதி கிராமப்புறங்களில் முதல் முதலில் எங்க ஏரியாவில் பட்டிமன்றத்தைக் கொண்டு வந்த பெருமை எங்கள் ஊரையே சேரும். ஆனால் பட்டி மன்றம் பட்டி மன்றமாக இருந்தா என்றால் முழுமையாக இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
பசங்க அடித்திருந்த பேனர்களில் எல்லாம் சாதியும் அதற்கு அடையாளமான படங்களும் இருக்க, அதை வைத்து இடையிடையே சாதிப் பெருமை பேசி கைதட்டல் வாங்கப் பார்த்தார் நடுவர். மேலும் கிராமத்தில்தானே பட்டிமன்றம் என்பதால் பத்திரிக்கை நகைச்சுவைகளை அள்ளித் தெளித்தாலும் இவர்களுக்கா தெரியப் போகுது என்ற மதர்ப்பிலும்... யார் பேசினால் என்ன எப்படியோ ஆறு பேர் பேசி நடுவர் தீர்ப்பென்று ஒன்றைச் சொன்னால் போது என ஆட்களை முன்னுக்குப் பின் மாற்றி பேச வைத்ததில் இருந்த எவன் கண்டுக்கப் போறான் என்ற அலட்சியத்திலும்... யாரை மேடையேற்றி கொடி நாட்ட நினைத்தார்களோ அவரைப் பேச வைத்து அழகு பார்த்து நாந்தான் முதலில் மேடையில் ஏற்றினேன் என்று சொல்லாமல் சொன்ன கொக்கரிப்பிலும்... சிக்கி பட்டிமன்றம் ஏதோ ஒரு பேச்சு மன்றமாக இருந்தாலும் நறுக்கென்று பேசிய அந்த நால்வரால் கீழே விழாமல்... குறைந்த கூட்டமே இருந்தாலும் வீட்டிற்குப் போகாமல்... ரசிக்கத்தான் வைத்தது. ராமநாதனின் பேச்சு குறித்து முன்பொரு பதிவில் சொல்லிவிட்டேன். எத்தனை நாளைக்குத்தான் அரைத்த மாவையே அரைப்பது?
சரி விஷயத்துக்கு வருவோம்... இனி வரும் காலங்களில் திருவிழாக்களில் பட்டிமன்றங்களைப் போல மூன்று நான்கு மணி நேரத்துக்குள் முடியக்கூடிய நிகழ்ச்சிகள்தான் இடம் பிடிக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. சொல்ல மறந்துட்டேன்... சில இடங்களில் இப்ப கேரள செண்டை மேளம் கொண்டு வந்து விடுகிறார்கள். அரைமணி நேரம் அடித்து ஆடுகிறார்கள். அப்புறம் கொஞ்ச நேரம் ஓய்வெடுக்கிறார்கள்.... பிறகு மீண்டும் இசை. மாலை முதல் இரவு பனிரெண்டு மணி வரை இசைக்கிறார்கள்... மிகவும் அற்புதமாக இருக்கிறது. ஆண் பெண் என பனிரெண்டு பேர் கொண்ட குழு மனைவியின் ஊரில் அம்மன் கோவில் கும்பாவிஷேகத்திற்கு வந்திருந்தார்கள்... அதில் ஒரு சின்னப் பெண் ஆட்டத்தில் கலக்கி எல்லார் மனதிலும் இடம் பிடித்துவிட்டது. அப்படி ஒரு அற்புதமான ஆட்டம். இனி பெரும்பாலான ஊர்களில் இந்தக் குழுவைப் பார்க்கலாம்.
வீரபாண்டிய கட்டப்பொம்மன், பவளக்கொடி, தூக்குத்தூக்கி, அரிச்சந்திர மயானகாண்டம், அர்சுணன் தபசு, சத்தியவான் சாவித்திரி போன்ற நாடகங்கள் இப்பொழுதெல்லாம் அரிதாகிவிட்டன. பெரும்பாலும் வள்ளி திருமணம் மட்டுமே எல்லா இடங்களிலும் நடத்தப்படுகிறது. அதற்கும் காரணம் இருக்கு... பபூனில் ஆரம்பித்து முருகன், வள்ளி, நாரதர் என எல்லோரும் சினிமாப் பாடல்களையும் இரட்டை அர்த்த வசனங்களையும் பேசுவதால் மட்டுமே கரகாட்டம் போல் இதுவும் இன்னும் வாழ்கிறது. இப்பொழுதெல்லாம் கரகாட்டத்தில் குறத்தி யார் என்பதைப் பொறுத்தே கூட்டம் கூடுகிறதாம். எங்க அக்கா ஊரில் புதுமையாய் ஒரு நாடகம் வைத்தார்கள்... மிக அருமையாக இருந்ததாம்... ஆனால் மீண்டும் இது போன்ற நாடகங்கள் அந்தப் பகுதியில் வைக்கப்படுமா தெரியவில்லை.
பெரும்பாலான ஊர்களில் ஆபாசமாக ஆடிப்பாடும் கலை நிகழ்ச்சிகள் தேவையா என்று யோசிக்க ஆரம்பித்து விட்டார்கள்.
எங்க ஊர்ல பட்டிமன்ற மேடைக்கு முன்னால் அதிகம் ஆட்கள் உட்காரவில்லை. நிலச்சூட்டுல ஏன் உக்காரணும் என ஆங்காங்கே நாற்காலி போட்டு அமர்ந்து பார்த்தோம். ஓரளவுக்கு கூட்டமும் இருந்தது. சின்னக் கிராமம்... பெரும்பாலான சொந்தங்கள் இரவு உணவுக்கு வந்து சாப்பிட்டதும் கிளம்பிவிட உள்ளூர்வாசிகள் மட்டுந்தானே பாக்கணும். எனவே ஏக கூட்டம் இல்லை என்றாலும் ஏதோ கூட்டம் இருந்தது. பட்டிமன்றம் ஆரம்பிக்கும் முன்னரே மேடைக்கு முன்னே விழுந்து படுத்த நம்ம மச்சான் வீட்டுக்கு வந்த நண்பர்... ஆழ்ந்து உறங்கி பட்டிமன்றம் முடிவுக்கு வரும்போது எழுந்து அமர்ந்தார்.
என்னப்பா இப்படித் தூங்குறீங்களேப்பா... இப்படித் தூங்குனா நாங்க எப்படித்தாம்பா பேசுறதுன்னு எல்லோரும் புலம்பினாலும் ஆழ்ந்து தூங்கிய மனிதர் எழுந்தார்... அமர்ந்தார்... பின்னர் எழுந்தார்... நடந்தார்... போய்விட்டார்...
-'பரிவை' சே.குமார்.