காலைச் சாரல் 09 - சாலை மீறல்

1-07-2015
அதிகாலை எண்ணங்கள் .... "சாலை மீறல்"

மாடத்தில் வந்தமர்ந்தபின் வேப்ப மரமும் குலுங்கவில்லை, சோலைக் குயிலும் ரசிக்கவில்லை. நேற்றைய நிகழ்ச்சியே மனதை நெருடியது.
****
நேற்று பின் இரவு காரில் வரும் பொழுது போக்குவரத்து சமிக்கை 'சிவப்பைக்' காட்ட, வண்டியை நிருத்தினேன். சற்று பின்னால் வந்த பேருந்து என்னை இடிப்பதைத் தவிர்த்து, எனது இடது பக்கமாகச் சென்றார் 'சிவப்பை' மதிக்காமல். மறக்காமல் என்னைக் கடக்கும் போழுது "******* ********* ......." என்று உதிர்த்து விட்டுத் தான். என்ன சொல்லியிருப் பார் என்று எல்லோருக்கும் பழகி இருக்கும்.

ஒரு அரசு அலுவலர் கோபப் படும்படி நான் செய்த குற்றம் 'அரசு அமைத்த விதிகளைப் பணிந்தது'. இன்னும் பலர் நான் 'பச்சைக்குக்' காத்திருக்க என்னை ஏளனமாகப் பார்த்துக் கொண்டு வாகனங்களில் கடந்து சென்றனர்.... நான் அனாதையாக காத்து இருந்தேன்...
****
அமரிக்காவைப் பார், சிங்கப்பூரைப் பார், ஜப்பானைப் பார் என்று அவர்களின் வளர்ச்சியைப் பார்த்துப் பொறாமைப் படும் நாம்... 'அவர்களின் discipline-ஐப் பார்' என்று ஏன் சொல்வதில்லை. மேலை நாடுகளில் பகல், இரவு எந்த நேரமானாலும் போக்குவரத்து சமிக்கைக்குப் பணிந்தே நடக்கிறார்கள். (முட்டாப் பயலுக... இங்கே ஒருவர் முணு முணுக்கிறார்)
****

நம்மவர்களின் அறிவுத் திறனை மெச்சத்தான் வேண்டும்....
*'பச்சை' வரும் என்று முன் கூட்டியே கணிக்கும் பாங்கு...
*வருவதற்குள் ஏற்படும் பரபரப்பு (நேரம் சேமிக்கும் மாண்பு)
*வரிசையாய்ச் சென்றால் எல்லோரும் சீராக செல்லலாம்... முண்டியடித்தால் மற்றவர்களை பின்னுக்குத் தள்ளி தான் மட்டும் முன்னேறலாம்... (முன்னேறத் துடிக்கும் உணர்வு...)
*ஒரு போக்குவரத்து தடை ஏற்பட்டால் சற்று பொருமை காட்டாமல் இடமிருந்து வலம் செல்வது, வலமிருந்து இடம் செல்வது என முன்னே உள்ள எல்லா ஓட்டைகளையும் (Gaps) அடைப்பது.. (இதே வேகத்தில் இவர்கள் சட்டம், சமூகம், அரசாங்க செயல்பாடுகள் இவற்றில் உள்ள ஓட்டைகளையும் அடைப்பார்கள் என்று நம்புவோம்)
****

போக்குவரத்து விதிகளை மீறுவது என்பது நமது மரபணுக்களில் கலந்த ஒன்றோ?
** ஒரு வழிப்பாதையா - மீறுவோம்!
** இங்கு வாகனங்களை நிறுத்தாதீர் - நிறுத்துவோம்!
** இடம் / வலம் திரும்பும் முன் சமிக்சை செய்யவும் - மாட்டோம்!
** இடது பக்கம் முன்னேறிச் செல்லாதீர் - செல்வோம்!
** குறிப்பிட்ட பாதையில் செல்லவும் (lane discipline) - அட போய்யா என் இஷ்டம் எப்படி வேணா போவேன்!
** மூன்று வழிப்பாதையில் இடமிருந்து வலம் - வலமிருந்து இடம் மாறி மாறி செல்லாதீர் - நீ யாரு கேட்பது, அது எங்கள் வீர விளையாட்டு...!
** சொல்லிக் கொண்டே போகலாம். உங்கள் சார்பிலும் ஏதாவது சொல்லுங்கள், எத்தனை கிகாபைட் ஆனாலும் ஆகட்டும்!
****

போக்குவரத்து விதி என்றாலே "மீற வேண்டும்" என்ற நினைப்பு..
இந்த உயிர் காக்கும் தலைக் கவசத்தை எடுத்துக் கொள்ளுங்கள்... எதிர்ப்பு கூறும்
ஒருவர் சொல்கிறார் நாங்கள் ஐவர் ஒரே வண்டியில் செல்வோம் ஐந்து தலைக் கவசத்தை எப்படிப் பாதுகாப்பது? சிரிப்பதா....? அழுவதா...?
தமிழ் நாட்டுக்கே உரிய சிறப்புக் குணமோ.?
****

"தம்பி வண்டிய அப்படி நிறுத்தாதீங்க, மற்றவர் வண்டி எடுக்க இடைஞ்சலா இருக்கும்"
"இதோ உடனே வந்துடுவேங்க..."
"அதுக்குள்ள அவங்க வந்திட்டா....?"
நம்மைப் பார்த்து ஒரு முறைப்பு...அடுத்து "யோவ் *** ** **** ...."
****

எதைப் பார்த்தாலும் கண்டும் காணாமலும் இருக்கும் சாத்வீக குணம் நம் போக்குவரத்துக் காவல் துறைக்கு எவ்விதம் கைவரப் பெற்றது? அவர்களின் அமைதியும் பொருமையும் என்னை பிரமிக்கவைக்கிறது... எனது மனதையும், வாயையும், எழுதும் கையையும் அது போல் கட்டிப் போட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்! (ஆ...ஹா.... என்று நீங்கள் மகிழ்வது புரிகிறது)
****

நான் சில சமயம் நினைப்பதுண்டு... ஒவ்வொரு பெரிய சாலைச் சந்திப்பிலும் இரண்டு போக்குவரத்து ஆய்வாளர்களை நிறுத்தி சாலை விதிகளை மீறுபவர்களைத் தண்டித்து அபராதம் வசூலித்தால் TASMAC-ஐ விட அதிகம் அரசுக்கு வருமானம் வரும் என்று.

இடம் வேண்டாம், கடை வேண்டாம், கொள்முதல் வேண்டாம், வினியோகம் வேண்டாம்..... பார் வசதி வேண்டாம்.... (கொத்துக் கொத்தாக பிடித்து அபராதம் விதிக்க வேண்டும்.... அவ்வளவுதான்)

செய்வார்களா....? செய்வீர்களா....?
****

தமிழ்க் கட்டுரையில் 'DISCIPLINE' என்று ஆங்கிலத்தில் எழுதுகிறாயே உனக்குத் 'தமிழ்' தெரியாதா....?
அப்படி என்றாலே என்னவென்றே தெரியாது!
------முரளி

எழுதியவர் : முரளி (1-Jul-15, 6:59 am)
பார்வை : 255

சிறந்த கட்டுரைகள்

மேலே