திருவலிவலம் பதிகம் 9

முதல் திருமுறையில் 123 வது தலமாக ஞானசம்பந்தரால் பாடப் பெற்ற திருவலிவலம் பதிகத்தில் 9 ஆம் பாடல்.

தேனமர் தருமல ரணைபவன் வலிமிகும்
ஏனம தாய்நில மகழரி யடிமுடி
தானணை யாவுரு வுடையவன் மிடைகொடி
வானணை மதில்வலி வலமுறை யிறையே. 9

பொழிப்புரை:

வானத்தைச் சென்றடையுமாறு நெருக்கமாகக் கட்டப்பட்ட கொடிகளைக் கொண்ட மதில்களால் சூழப்பட்ட வலிவலத்தில் உறையும் இறைவன், தேன் நிறைந்த குளிர்ந்த தாமரை மலர்மேல் உறையும் நான்முகன், வலிமை மிக்க பன்றி உருவினனாய் நிலத்தை அகழும் திருமால் ஆகியோர் முடியையும் அடியையும் காணமுடியாதவாறு ஓங்கி உயர்ந்த திருவுருவை உடையவன் ஆகும்.

குறிப்புரை:

அயனும் மாலும் அறியாத வடிவுடையான் வலிவல இறைவன் என்கின்றது.

ஏனம் - பன்றி. மிடை - நெருங்கிய.

குறிப்பு:

திருவலிவலம்:

இறைவர் பெயர் இருதய கமலநாதேஸ்வரர், மனத்துணைநாதர்,

இறைவியின் பெயர் வாளையங்கண்ணி, அங்கயற்கண்ணி,

தல மரம் - புன்னை, தீர்த்தம் - சங்கர தீர்த்தம்.

தல வரலாறு: வலியன் (கரிக்குருவி) வழிப்பட்டதால் இத்தலம் 'வலிவலம்' என்ற பெயர் பெற்றது.

சூரியன், வலியன், காரணமாமுனிவர் ஆகியோர் வழிபட்டு பேறு பெற்றனர்.

சிறப்புகள்: வில்வவனம், ஏகச்சக்கரபுரம், முந்நூற்றுமங்கலம் முதலிய இப்பதியின் வேறு பெயர்கள்.

இது கோச்செங்கணான் கட்டிய மாடக்கோயில்.

தேவாரப் பாடல்களை ஓதத் தொடங்கும்போது பொதுவாக முதலிற் பாடத் தொடங்கும் 'பிடியதன் உருஉமை கொள' என்னும் பாடல் இத்தலத்திற்குரியதேயாம்.

கோவிலுக்குச் செல்லும் வழி:

தமிழ் நாட்டில் திருவாரூர் - திருத்துறைப்பூண்டி (வழி கீவளூர்) சாலையில் உள்ள தலம்.

திருவாரூரிலிருந்து 10-கி. மீ. தொலைவிலுள்ள இக்கோவிலுக்கு திருவாரூர் - திருத்துறைப்பூண்டி சாலையில் புலிவலம், மாவூர் வழியாகவும் வரலாம்;

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (30-Jun-15, 3:22 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 92

சிறந்த கட்டுரைகள்

மேலே