சீர்காழி என்ற திருப்பூந்தராய் - பாடல் 5

சீர்காழி என்ற திருப்பூந்தராய் ஊரில் விளங்கும் சிவபெருமான் பற்றி திருஞானசம்பந்தர் இயற்றிய பதிகத்தில் பியந்தைக்காந்தாரம் பண்ணில் எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தமாக அமைந்த 5 ஆம் பாடல்.

பாடல் 5 - எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

நஞ்சணி கண்டன்எந்தை மடவாள்
...தனோடும் விடையேறு நங்கள் பரமன்
துஞ்சிருள் வன்னிகொன்றை முடிமே
...லணிந்தென் உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுணரோடு உருமிடியும்
...மின்னும் மிகையான பூத மவையும்
அஞ்சிடு நல்லநல்ல வவைநல்ல
...நல்ல அடியா ரவர்க்கு மிகவே

பொழிப்புரை :

நஞ்சைக் கழுத்தில் அணிந்த கண்டனும், எந்தையும், உமையம்மையாரோடு விடையேறி வரும் எம் தலைவனுமாகிய சிவபெருமான், இருள் செறிந்த வன்னி இலை, கொன்றை மாலை ஆகியவற்றை முடிமேல் அணிந்து என் உளம் புகுந்துள்ள காரணத்தால், கொடிய சினமுடைய அவுணர், இடி, மின்னல், செருக்குடைய பூதங்கள் ஆகியன நம்மைக் கண்டு அஞ்சி நல்லனவே செய்யும். அடியவர்கட்கும் மிக நல்லனவே செய்யும் என்கிறார் திருஞானசம்பந்தர்.

குறிப்புரை :

துஞ்சிருள் வன்னி - வன்னிமரத்தின் இலைகள் மிகுந்தும் அடர்ந்தும் தழைத்திருத்தலால், இருள் துஞ்சும் நிலையினது.

அவுணர் - இந்து புராணங்களில் தேவர்களுக்கு எதிராக, தீய சக்திகளாய் இருப்பவர்கள், இராக்கதர், அசுரர்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (30-Jun-15, 10:13 am)
பார்வை : 67

மேலே