30-06-2015 ----- கவிஞனும் கற்பனைத் திறனும் --04----

30-06-2015
கவிஞனும் கற்பனைத் திறனும் --04

தங்களது தோட்டங்களை நாசம் செய்வதாகச் சொல்லி, மின் வேலிகள் அமைத்தும், அது இயலாத இடங்களில் வனத்துறையினரின் உதவி கேட்டும் யானைகளை அடக்கவும், விரட்டவும் அலையும் துன்புறும் மக்களைப் பற்றி இன்றும் நாம் கேள்விப்படுவதுண்டு. ஆனால்

யானைமேல் அம்பெய்து விரட்டியபடி, அதைப் பின் தொடர்ந்து தேடியவனாகத் தினைப்புனம் வந்தடைந்த ஒரு தலைவனைப் பற்றியும், அவனைப் பார்த்த கூட்டதாருள் கண்ணீருடன் நின்ற ஒரே ஒருத்தியாகத் தான் மட்டும் நின்றதாகத் தோழியிடம் சொல்லி அரற்றுகின்ற தலைவி ஒருவளைப் பற்றியும், கம்பனுக்கு முன்னோடியாகிய கபிலர் (அக நானூறு-82) ஒரு பாட்டில்
உரைப்பதாகவும் அமைந்த ஒரு காட்சியை பலருரைப்பதுண்டு: அப்பாடலின் பொருள்:

அசையும் மூங்கிலில் துளைக்கப்பெற்ற விளங்கும் துளையிடத்தே, அழகிய மேல் காற்றினாலெழும் ஒலி குழலின் இசையாகவும்,

ஒலி இனிய அருவியின் குளிர்ந்த நீரின் இனிய ஒசை, தொகுதியாகிய முழவின் நெருங்கிய இசையாகவும்,

கூட்டமாய கலைமான்கள் தாழ ஒலிக்கும் கடிய குரல் பெருவங்கியத்தின் இசையாகவும்

(அதனொடு), மலைச்சாரலிடத்தே பூக்களிலுள்ள வண்டின் ஒலியாழின் இசையாகவும் ஆக
,
இங்ஙனம் இனிய பலவாய ஒலிக்கும் இசைகளைக் கேட்டு,
ஆரவாரம் மிக்கு, நல்ல திரள் மந்திகள் வியப்புற்றுக்காண,

மூங்கில் வளரும் பக்க மலையில், உலாவி ஆடும் மயில்கள், களத்திற் புகுந்தாடும் விறலிபோலத் தோன்றும்

(அவ்வாறான)நாட்டையுடையவனாகிய, அகன்ற தாரினை யணிந்த மார்பையுடையவன், அழகிய வலிய வில்லினைக் கையிற் பற்றி, சிறந்த அம்பினை ஆய்ந்து கொண்டு, தன்னால் அம்பு எய்யப்பெற்ற யானை சென்ற நெறியினை வினவி, முதிர்ந்த கதிரினையுடைய தினைப் புனத்தின் வாயிலின் ஒரு பக்கததே, நின்றான்; அவனைக் கண்டோர், பலராவர்;
அவர் தம்முள், அரிய இருள் செறிந்த இரவில், அணையின்கண் தங்கி, நீர் சொரியும் கண்ணினொடு, மெலிந்த தோளையுடையேனாக; யானொருத்தியுமே ஆயது என்னையோ?.---என்பதாகும்.

யானை இல்லாத ஒரு காட்சியைக் கம்பன் இவ்வாறு சொல்கிறான்:

வரம்புயில் வான்சிறை மதகுகள் முழவுவொலி வழங்க,
அரும்பு,நாள் மலர்,அசோ கங்கள் அலர்விளக்கு எடுப்ப,
நரம்பின் நான்ற,தேன் தாரைகொள் நறுமலர் யாழின்
சுரும்பு பாண்செயத் தோகை,நின்று ஆடுவ சோலை.......(458)

கபிலரின் பாடலுடன் ஒப்பு நோக்கியபடியே, இப்பாடலைப் படிப்பவர்கள்,
அழகாக ஆடி நிற்கும் மயில் ஒரு நடன மாதாகவும், அவளின் மேடைக்கு ஒளிதரும் விளக்குகள் போன்ற அன்று பூத்த செம்மலர்களின் அழகைச் சுமந்த வண்ணம் நெருங்கி நிற்பனவாகிய அசோக மரங்கள், இன்னொலி யாழ் போல் ரீங்காரத்தபடி மலருக்கு மலர் தாவிக் கொண்டிருக்கும் வண்டுகள், இவற்றின் அருகிலேயே முழவாக ஒலிப்பதுபோல் திறந்திருக்கும் மதகுகளின் வழியாகப் பாய்ந்து செல்லும் நீரோடையின் பேரோசை ஆகியவற்றைக் காணலாம்.
விளங்குவதற்குக் கடினமென்று நினைப்பவர்கள் இவற்றிற்கான் உரைகளுடன், நேரமெடுத்து ஆழ்மன ஈடுபாட்டுடன் சிந்திப்பார்களெனில்
தவறாது இக் கற்பனை நயங்களைக் காண முடியும்.
இவற்றிற்கெல்லாம் இன்று நேரம் ஏது என்று அங்கலாய்ப்பவர்களுக்கு ஒரு வார்த்தை:

ஆரவாரம், பரபரப்பு என்றாகிவிட்ட வாழ்க்கையில் பணம் செலவழித்து எல்லோராலும் சுற்றுலா செல்லுவது சாத்தியமாகுமா? படக் காட்சி, தொலைக்காட்சி என்று நேரம் செலவளிப்பதிலுள்ள ஆரோக்கியக் கேடுகள் நாமறியாததா? புத்தகங்கள் படிப்பதன் வாயிலாக இவை போன்ற பல நயங்களைத் தேடி ஈடுபடுவதன் மூலம் கண்களுக்குக் குறைந்த கேடும், சிந்தனைக்குச் சிறந்ததொரு பயிற்சியும், மனத்திற்குத் தேவையான அமைதியும் ஆனந்தமும் கிடைக்குமென்றால் இவற்றையும் நாம் ஒரு யோகம் போல் ஏன் பழகிக்கொள்ளக் கூடாது. எழுத்தாளர்களுக்கும், புத்தக வெளியீட்டாளர்களுக்கும், புத்தகக் கண்காட்சியினருக்கும் கிடைக்கும் நன்மைகள் இதிலிருந்து வெளிப்படும் மற்றுமொரு உபகாரமாகவும் இருந்துவிட்டுத்தான் போகட்டுமே!
பண்பாட்டு வளர்ச்சிக்கு இது பேருதவியாக இருக்குமென்பது பலர்சொல்லிக் கேட்டதுமாம்.

(தொடரலாம்)

எழுதியவர் : காளியப்பன் எசேக்கியல் (30-Jun-15, 8:37 am)
பார்வை : 134

மேலே