எறிகிளர் கேழல் கிளைத்திட்ட பூழி - கைந்நிலை 11

கை' என்பது ஒழுக்கம் எனப் பொருள்படும். எனவே, கைந்நிலை என்பதற்கு 'ஒழுகலாறு' என்று பொருள் உரைக்கலாம். இந்நூலும் ஐந்திணை ஒழுக்கம் பற்றியதே. ஒவ்வொரு திணைக்கும் பன்னிரண்டு பாடலாக அறுபது பாடல்கள் இந் நூலில் உள்ளன. பாடல் அளவைக் கொண்டும், நூற் பொருளை ஒட்டியும் இதனை 'ஐந்திணை அறுபது' என்பதும் பொருந்தும். ஐந்திணை பற்றிய வெண்பா நூல்கள் வேறு இருப்பதால், அவற்றிலிருந்து வேற்றுமை தெரிவதற்காக, ஆசிரியரே 'கைந்நிலை' என்று இந்நூலிற்குப் பெயர் சூட்டி இருக்கலாம்.

இந்நூலில் குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்ற வரிசை முறையில் ஐந்திணைகளும் அமைந்துள்ளன. இந்நூற் செய்யுட்களில் 18 பாடல்கள சிதைந்துள்ளன (1, 8,14-17, 20, 26-35, 38). இவற்றுள் மூன்று பாடல்கள் ஒரு சொல் அளவில் சிதைவுபட்டவை. ஏனைய பதினைந்தும் அடிகளும் சொற்களும் பல வேறு வகையில் சிதைந்து காண்கின்றன. எவ்வகையான சிதைவும் இன்றி இறுதியிலுள்ள நெய்தல் திணைப் பகுதியில் உள்ள பாடல்கள் அமைந்துள்ளன.

இந் நூலைச் செய்தவர் மாறோக்கத்து முள்ளிநாட்டு நல்லூர்க் காவிதியார் மகனார் புல்லங்காடனார் என்று நூல் இறுதிக் குறிப்பில் காண்கிறது. இவர் தந்தையார் காவிதியார் எனப்படுதலின், அரசனால் 'காவிதி' என்னும் சிறப்புப் பெயர் அளிக்கப்பட்டிருக்கலாம். மாறோக்கம் என்பது கொற்கையைச் சூழ்ந்துள்ள பகுதியைக் குறிக்கும். எனவே, இவர் கொற்கையை அடுத்த முள்ளி நாட்டு நல்லூரில் வாழ்ந்தவராவர்.

1. குறிஞ்சி

தலைமகள், இரவுக்குறி ஏதமுடைத்து என்று அஞ்சித் தோழிக்குக் கூறுதல்.

எறிகிளர் கேழல் கிளைத்திட்ட பூழி
பொறிகிளர் மஞ்ஞை புகன்று குடையு
முறிகிளர் நன்மலை நாடன் வருமே
யரிதுரைத்திவ் இல்லில் நமக்கு. 11 - பல விகற்ப இன்னிசை வெண்பா

பொருளுரை:

பன்றிகள் கொம்புகளால் குத்திக் கிளர்ந்ததால் நிறைந்த புழுதியில் புள்ளிகள் நிறைந்த தோகையுடன் விளங்கும் மயில்கள் விரும்பிப் படிந்து விளையாடும் இயல்புடைய இலைமரங்கள் விளங்கும் நல்ல மலைநாட்டை உடைய தலைவன் நமக்கு அருமையாகச் சில சொற்கள் பேசியபடி இம்மனைக்கு வருவான். அவ்வரவு எனக்கு மிகவும் அச்சத்தை விளைக்கின்றது என்றாள்.

விளக்கம்:

எறிகிளர் கிளைத்திட்ட - எறிந்தபுழுதி, கிளர்ந்த புழுதி, கிளைத்திட்ட புழுதி எனத் தனித் தனியாகக் கூட்டிப் பொருள் கொள்ள வேண்டும்.

பன்றி மண்ணைக் கொம்புகளாற் குத்தியெழுப்புவதும் புழுதியாக்குவதும் அப்புழுதியில் படுத்துக் கிடப்பதும் இயற்கை. அது குறித்து ’கேழல் கிளைத்திட்ட பூழி’ என்றார்.

இரவில் பன்றிகள் படுத்திருந்த புழுதி நிறைந்த இடங்கள் மென்மையாக இருக்கும். பகலில் அதனைக் கண்ட மயில்கள் அவ்விடத்தினை விரும்பிக் கால்களால் கிளைத்துத் தங்கியிருக்கும். இது மயில்களின் இயற்கை.

பொறி - புள்ளி மயிலுக்குச் சிறகுகளில் கண்போலப் புள்ளி பரந்து தோன்றும்; அதுகுறித்து ’பொறிகிளர் மஞ்ஞை’ என்றார்.

முறிகிளர் என்றது இலைகள் செறிந்தது என்பதை உணர்த்தியது. முறி என்பது ஆகுபெயராய் மரங்களை யுணர்த்தியதெனக் கொள்ளினும் அமையும்.

அரிது என்பது அவன் வரவு மிகவும் அருமையானது எனவும், பேசுஞ்சொல் அருமையானது எனவும் இருவகையாகவும் பொருள் கொள்ளலாம்.

இரவு வரவு ஏதமுடைத்து - இதனை நீக்குவதற்குரிய சூழ்ச்சி ஆய்க என்பது கருத்து.

பன்றி குத்திக் கிளறியெழுப்பிய புழுதியின் அருமையறியாது மயில் விரும்பிக் குடைவதுபோல அவன் இரவில் வரும் வழியின் சிரமத்தை அறியாமல் நான் அவனோடு கூடியின்பம் நுகர்கின்றேன் எனக் குறிப்பாற் கூறி வெறுத்தனள் என உட்பொருள் கொள்ள வேண்டும்.

உள்ளுறை கருத்து என நண்பர் காளியப்பன் எசேக்கியல் பொருளை உணர்வதில் உள்ள சந்தேகங்களை கேட்கிறார்:

பன்றிகள் கொம்புகளால் குத்திக் கிளர்ந்ததால் நிறைந்த புழுதியில், புள்ளிகள் நிறைந்த தோகையுடன் விளங்கும் மயில்கள், ஏன் விரும்பிப் படிந்து விளையாடும்?

பன்றிகள் கொம்பினால் குத்திக் கிளர்வதாகும் செயல் ஊரினரின் அல்ர்தூற்றல் ஆகுமா?
புழுதி அலராகுமா?

புள்ளிகள் நிறைந்த தோகையுடன் விளங்கும் மயில்கள், மற்றைய பெண்களைக் குறிப்பதாகுமா?

விரும்பிப் படிந்து விளையாடும் என்பது அத்தகைய மற்றப் பெண்டிர் தலவியைப் பற்றிய அலரில் மகிழ்ந்து திளைக்கின்றார்கள் என்பதையும் குறிக்கலாகுமா? என்றும் கேள்விகள் எழுப்பி, அதுவே சரியான விளக்கமாகவும் கொள்ளலாம் என்று உணரலாம்..

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (29-Jun-15, 9:47 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 85

சிறந்த கட்டுரைகள்

மேலே