அந்த வளைவில்
ஒரு வழி பாதையல்ல அது. ஒரு பேருந்து மட்டுமே கடக்கக்கூடிய சிறிய ‘S’ வளைவு பாதை. நேரெதிர் வரும் பேருந்துக்கள் ஹாரனிலிருந்து வரும் ஒலியின் அளவை அனுமானித்து கொண்டே ஓட்டுனரின் ஊமை பாஷையில் ஒரு பேருந்து ஒதுங்கி மறு பேருந்திற்கு வழி விட்டு கடக்கும். ஒற்றையடி பாதையில் ஆடுகள் கடப்பதைப்போல. இது வளைவில் வழக்கமாகி விட்டது. பாதையின் ஓர் ஓரம் வெற்றிலை பாக்கு, சில்லரை வியபாரம் கல்லா கட்டியது. அதைவிட அதன் உரிமையாளர் சண்முகம் அண்ணாச்சியின் பேச்சு வாடிக்கையாளர்களை வரிசை கட்டியது. வெற்றிலை சீவலில் வாய் மலர பேசி வாடிக்கைகளை வசப்படுத்தி விடுவார். அவரது முதிர்ந்த அனுபவ பேச்சுக்கு ‘மகுடி ஊதிய பாம்பாக’ கட்டம் போட்ட கைலி முதல் ‘டெரிக்காட்டன்’ பேண்டுகள் வரை தலையசைத்து நிற்கும்.
நெருக்கடியில் நெருக்கடியாக எதிரே ஒரு ‘டீ’க்கடை காளனாய் கிளம்பியிருந்தது. ஒரு சில தண்டல் தவணைகள் அடைத்தும் ‘டீ’க்கடை வியபாரம் ‘ஈ’ அடித்தது. அக்கடையின் ‘டீ’க்கு சண்முகம் அண்ணாச்சி முதல் வாடிக்கையாக. அவரைத் தொடர்ந்து பெட்டிக்கடை வாடிக்கையில் சிலர் ‘டீ’க்கடைக்கும் வாடிக்கையானார்கள். உபசரிப்பு‘டீ’க்கும் மிஞ்சியதாகவே இருந்தது. கொஞ்சம் வடை,நெய் பிஸ்கட்டுக்களும் கூட அடுக்கியிருந்தன. ‘டீ’க்கு மட்டும் வந்தவர்கள் நல்ல சுவையிருக்க இப்பொழுது ‘வடை’க்கும் வந்தார்கள். வியபாரம் சூடு பிடித்தது. ‘100’க்கும் ‘50’க்கும் சில்லறை என அடிக்கடி எதிர்கடை சண்முகம் அண்ணாச்சியின் கல்லாவில் தூறுவாரிக் கொள்வார்கள். கொஞ்சமும் சலிக்காது ‘ஏ.டி.எம்’ மெஷினாகத்தருவார். இவர்களும் சலிக்காது நீட்டுவார்கள்.‘ ஏ.டி.எம்’ல் ஒரு நாளைக்கு மூன்று முறைக்கு மேல் செல்லாது. ஆனால் அண்ணாச்சியிடம் எத்தனை முறை நீட்டினாலும் சில்லறை தாராளம்.
‘டீ’க்கடையில் கூட்டம் ஈ’க்களாய் மொய்த்தது. கடை முதலாளி குமார் தன் மனைவியை ஒத்தாசைக்கு வைத்து கொண்டான். ஆனால், குமாரின் மனைவி படுநோஞ்சானாக இருந்தாள். அவளால் வீட்டு வேலையை தவிர மற்ற கடை வேலைகளை செய்யுமளவு உடம்பில் திறானி இல்லாதிருந்தாள். புதிது புதிதாக வேலையாட்களும் வந்து சேரவே அவள் வருவதை தவிர்த்தாள். ‘காலையில் சூடான பொங்கல், பூரி, இட்லி கிடைக்கும் இப்படிக்கு அம்மன் டிபன் சென்டர்’ என அட்டையில் டீக்கடை சிறு சிற்றூண்டியாக மாறியிருந்தது. அங்கு ‘டீ’ வாடிக்கை போலவே ‘டிபன்’ வாடிக்கையும் மளமளவென கூடியது. ‘வாடிக்கையாளர்களின் வேண்டு கோளுக்கிணங்கி இரவிலும் டிபன் கிடைக்கும்’எனஅட்டையிலிருந்த வாசகங்கள் பெரிய போர்டில் தொங்கியது. பகல் வேளையை விட இரவு வேளைகளில் எச்சில் இலைகளின் எண்ணிக்கை குப்பைத்தொட்டியை கோபுரமாக்கியது. குமாரின் தம்பி சங்கர் மில் வேலையிலிருந்து வந்தவுடன் இரவு வேளைகளில் அண்ணனுக்கு ஒத்தாசை செய்வான். சங்கரின் வருகை குமாருக்கு புது தெம்பளித்தது. ஏனெனில், சங்கர் சுறுசுறுப்பாக வேளைகளில் அக்கறை காட்டுவான்.
இப்பொழுதெல்லாம் டிபன் கடை வாடிக்கையில் சிலர் சண்முகம் அண்ணாச்சியின் கடைக்கு பழம், பாக்கு,சிகரெட், சோடாவுக்கு என வந்தது. அது ஒரு சிறிய வளைவுப்பாதை என்பதையே அனைவரும் மறந்து அண்ணாச்சி கடைக்கும் டிபன் கடைக்குமாக அக்கரைக்கு இக்கரை என மாறி மாறி கடந்தனர்.
டிபன் கடைக்கு வருட விடுமுறை என்பது பொங்கலுக்கு மட்டுமே என்றாகி போனது. ‘புதியன புகுதலும் பழையன கழிதலும்’என போகி பொங்கலில்‘அம்மன் டிபன் சென்டர்’ முற்றிலும் புது பொலிவுடன் முழூ நேர ‘அம்மன் கபே’ ஆனது. ஜில்லென்ற மார்பில்ஸ் டேபிள்களும், குளிர்ந்த கண்ணாடி கிளாசுகளும், வியர்வை சுரப்பிகளை வருடிச்சென்ற மின் விசிறி காற்றும், எல்லாம் மிக வசதியாகவே இருந்தது அந்த நெருக்கடியான சின்ன பாதை வளைவிலும். பழைய வாடிக்கையாளர்களுக்கென அழைப்போ, முன் அறிவிப்போ ஏதும் இல்லை. ஏனெனில், புதிதாக வாடிக்கையாளர்கள் அங்கு ஏராளமாக மொய்த்திருந்தனர். குமாரின் மனைவி சற்றும் அடையாளம் தெரியாதவளாக நன்கு பூசியிருந்தாள். வேலையாட்களிடம் அதிகாரமாக ஆட்சி செய்வாள் தம்பி சங்கரும் உட்பட அதற்கு ஆளாகியிருந்தான்.
ஒரு மாலை மயக்கத்தின் முன் பேருந்துகள் சாலை வழிகளை அடைத்து கொண்டு முழித்தன. மேலும், சில மோட்டார் வண்டிகள், சைக்கிள்கள், பாதசாரிகள் அங்கும் இங்குமாய் பாதையை கடக்க முடியாமல் ‘சுவற்றில் அடித்த பந்துகளாய்‘ அலைக்களித்திருந்தன. அதனிடையே சிலர் பதட்டமாக ஓடினர். அது‘என்னவா இருக்கும்?’ என்கிற கேள்வி வழி நெடுக நிற்பவர்களை கொக்கி போட்டது. வண்டியிலிருந்து ஓட்டுநர் எதிரில் வேடிக்கை பார்த்து வந்தவரிடம்
“என்னங்க…என்னாச்சு?”
“மோதிடுச்சு ரெண்டு பஸ்ஸுங்க இந்த சைடு ஒண்ணு அந்தசைடு ஒண்ணுன்னு”வழியில் இருந்தவர்களிடையே பெரும் சலசலப்பு
“எங்க?”
“அந்த சின்ன பாதையிலதெங்…ரெண்டு பஸ்ஸுகாரவுங்களுங் நிக்காம எதிரெதிரா வந்துருக்கானுங்க…கண்ட்ரோல் பண்ணமுடியாமா… வேறெவழியில்லங்கவே இவங் அந்த ஹோட்டல்லயும், அவங் அந்த அண்ணாச்சி கடயிலயும் வுட்டுட்டானுங்க”.
“அய்யோய்யோ… யார...வது…!”
“ஹேங்…ஹோட்டெல்ல நாலு பேராங், எயித்த கட அண்ணாச்சி ஸ்பாட் அவுட்டா…ம்ப்பா…பாவம்… நல்ல மனுஷங்…” நெஞ்சில் அடித்துகொண்டு அழுதவாறு குமாரின் மனைவி ஐயோ…ஐயோ… என்று தலைவிரி கோலமாக அலறிக் கொண்டு ஒடினாள். அவளை பின் தொடர்ந்து அவர்களது குடும்பத்தாரும் ஒடினார்கள்.
“ஐயோ..! கடவுளே..! இப்ப கிளியராயிடுமா?”
“பஸ்ஸீ நல்லா ஏறி ஹோட்டலுக்குள்ளயெ நிக்குதுப்பா…இப்பவெல்லாம் கிளியராகது”என உதட்டை பிதுக்கியவாறு வருத்தமாக சென்றார். பேருந்திலிருந்த பயணிகள் கணத்தோடு கணமாக இறங்கினார்கள். சில வாகன ஓட்டிகள் தங்களது வண்டிகளை அங்கெயெ விட்டு விட்டு விபத்து நடந்த இடத்தை நோக்கி வரிந்து கொண்டு விரைந்தார்கள்.
காலம்கடந்தது...
‘அம்மன் கபே’ இருந்த இடத்தில் இப்போது சிறிய டிபன் கடை தள்ளு வண்டியில் ‘காலையில் சூடான பொங்கல், பூரி, இட்லி கிடைக்கும் இப்படிக்கு சங்கர் டிபன் சென்டர்’ என சிறிய அட்டையில் ஆடியது. குமாரின் தம்பி சங்கர் தன் மனைவி ஒத்தாசையுடன் கடையை நடத்தி கொண்டிருந்தான்.
“மீதிகொடுப்பா”என்று சாப்பிட்டவர் மீதியை கேட்க
“கொஞ்சம் இருங்க தர்ரேங்” என்று சங்கர் சில்லறைக்காக ஓடினான்.
“இப்போது‘சண்முகம் அண்ணாச்சி’ கடை இருந்த இடத்தில் சுவரெழுப்பி மூடியிருந்தது. அந்த சுவரில் கிழிந்து தொங்கிய சுவரொட்டியில் சண்முகம் அண்ணாச்சி சிரித்து கொண்டிருந்தார் ‘முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி’என.