மனம் எனும் மந்திர கருவி

மனம் எனும் மந்திர கருவி.

மந்தி போல் தத்தித் தாவி தொங்கித்திரியும்
நவரசங்களையும் நாள் தவறாது ஏந்தித்திரியும்.

அடுத்தவர் என்ன நினைப்பார் என்றே ஏங்கித்திரியும்.
உள் ஒன்று வைத்து புறமொன்றில் வேறே பேசித்திரியும்.

ஆசையுடன் சில நேரம் அகம் மகிழ்ந்துத்திரியும்
ஆணவத்துடன் பலநேரம் ஆரவாரமாய் பேசித்திரியும்.

துக்கமாய் சில நேரம் துவண்டுத்திரியும்.
திக்கற்ற பறவை போல் பறந்துத்திரியும்.

கருணையுடன் சில காலம் கலங்கித்திரியும்
கடினமாய் பல காலம் கடத்தித்திரியும்.

குரோதம் கொண்டு கொலைவெறியோடும் திரியும்
குற்ற உணர்வோடு தன் செய்கைக்காய் வருந்தித்திரியும்.

பந்தயமாய் வையகத்தோடு ஓடித்திரியும்
பயத்தோடு வாழ்க்கையை நடத்தித்திரியும்

காதலோடு கை கோர்த்து கரைந்துத்திரியும்
சிருங்காரத்தில் சில நேரம் சிக்கித்திரியும்

சிரித்து மகிழ்ந்து சிறகடித்து பறந்துத்திரியும்
சிந்தனை வசப்பட்டு சீவனுக்குள் சிக்கித்திரியும்

பக்தியில் பரவசமாய் அமிழ்ந்துத்திரியும்
பரலோகம் காண ஆசை கொண்டும் திரியும்

வடுவுடன் வலிகளை சுமந்து அழுதுததிரியும்
பிறர் அறியாமல் அதை மறைத்தும் திரியும்

வீரத்துடன் வீராவேசம் காட்டித்திரியும்
வேண்டாமே வம்பு என்று விலகியும் திரியும்.

மனம் எனும் இந்த மந்திர கருவி
சித்தத்தின் வசப்படாத சின்ன குழந்தை

புத்திக்கு அகப்படாத பருவக் குழந்தை.
வயோதிகம் வந்து பக்குவமும் வந்துவிட்டால்
பதியோடு ஒன்றிவிடும் சமத்து குழந்தை

எழுதியவர் : தீபாசென்பகம் (5-Jul-15, 7:40 pm)
சேர்த்தது : தீபா செண்பகம்
பார்வை : 216

மேலே