கவிதை கண்டுபிடிக்கும் காதல்
கள்வெறி கொண்டு கவிதை படைக்க எண்ணி
கார்முகில் குடையின்கீழ் காகிதங்கள் அள்ளிக்கொண்டு
மின்னல் கண்சிமிட்ட வேகமெடுத்தான்
முதல்துளி இமைகளில் அமர்ந்து கொள்ள
சிலிர்த்தெழுந்தன மனதில் ஸ்ருங்கார வார்த்தைகள்
மண் வாசம் அள்ளித்தெளித்து முகம்வருடிய தென்றல்
நினைவுகளின் நெடுந்துயிலை செல்லமாய்க் கலைத்தது
''என்ன அவசரம் ஏனிந்தப் பதட்டம்? ஏகாந்தமாய் பிறக்கட்டுமே கவிதை!''
ஒவ்வொரு மழைத்துளியும் அக்கறையாய்க் கேட்க
சிறு புன்னகை உதிர்த்துவிட்டு நினைவுகளுக்கு நாற்காலியிட்டான்
ஆயிரம் விண்மீன் பூக்கள் ஒன்றுகூடி ஒளிபொழிந்த மாயமாய்
அழகியல் மிளிரும் பொன்னிலவின் பிறந்தநாள் போல்
களிப்புற்று கொண்டாடிய இதயம் முகிழ் தருணம்
அவள் தன் காதலை பூங்கொத்தினைப்போல் நீட்டிய கவிதையில் கூறியது!
எத்தனை நாட்கள் தான் வண்ணங்களை மறைக்க இயலும் வானவில்
எத்தனை மணிநேரம் தான் வாசங்களை பூட்டிவைத்திடும் மலர்கள்
வெளிப்படத்தானே வண்ணங்களும் வாசங்களும் வாழ்வை இனிதாக்கும் காதலும்
இத்தனை நாட்களாய் கதவு திறந்து மெல்ல நடந்த வாக்கியங்கள்
ஏனோ தயங்கி மீண்டும் திரும்பியது அவளிடம் சென்றடையாமல்
காதலுக்கா தெரியாது சென்றடையும் வழிகள்?
சொற்களைத் தாண்டிய மௌனங்களிலும் கவிதை கண்டுபிடிக்கும் காதல்
அவன் சொல்லாமல் மடித்து வைத்த வார்த்தைகளை
அவள் சிறுதுளி நாணமும் பெருவெள்ள நேசமும் நிறைந்து மொழிந்தாள்...
பேரானந்தம் பூத்தது அவனுள்!
கள்வெறி கொண்டு கவிதை படைக்க எண்ணி
சேகரித்த தேன் நினைவுகள் அனைத்தையும்
அவளுக்கு அறிமுகம் செய்தான்
ஒவ்வொரு நாற்காலியிலும் ஓர் நிலவு பூத்திருந்தது
அனைத்தும் எழுந்து கைகோர்க்க, கண்பறிக்கும் காதல்வெளி
இருவரும் இணைந்து படித்தனர்
இதயங்களில் காத்திருக்கும் அவரவர் கவிதைகளை...