காதல் கரை சேரும் வரை
நீ நீயாகவும்...
நான் நானாகவும்...
இருந்துவிட்டுப்போவோம்...
இயற்கையின்
தவம்தான்
நாமிருவரும்...
சுண்டியிழுக்கும்
பார்வையில் - என்
சுயம் மறந்தது மெய்தான்...
உன் வீட்டிற்கு
வழி கேட்கிறேன்
உன் வீட்டின் வாசலுக்கு வந்து...
உன் மீதான காதல்
கரை சேரும் வரையில்
கரைகின்ற நிமிடங்களெல்லாம்
இதயத்தின் இயக்கம்
இரண்டு மடங்காகும்...
திகட்டுமளவுக்கு உனக்கு
அன்பை அள்ளிக்
கொடுத்துவிட்டேன் போலும்...
அந்திம நேரத்து
அடுத்தப் பொழுதுகளில்
ஆண் என்பதையும் மறந்து
ஆற்றாமையினால்
அழுததுண்டு...
உன் கல் நெஞ்சத்து
கதவுகளின் சாவியாக
என் கவிதைகளும்
இல்லையென்றாகிவிட்டது...
உனது காதுகள் விரும்பும்
எனது மெளன மொழியினை...
உன் பார்வையிலிருந்து நீ
என்னை அப்புறப்படுத்தும்போது
என் கண்ணீர் துளியும்
கதியற்றுப்போகிறது...
அடிக்கும் தாயை
அணைக்க வரும் குழந்தையாக
என் மனம்...
ஓவியம் வரைந்தப்பின்
தான் வரைந்ததாய்
பெருமை கொள்ளும்
தூரிகையினைப்போல
என் காதல்...
என்னவளின் முனகலோசை
எந்தன் செவிகளுக்கு
எட்டிவிடுமோ
என்று அஞ்சிய இரவுகள்
ஏல்லா நாட்களிலும் தான்...
விதியை கோடிட்டுக்
காட்டுகின்றாய் நீ....
மதியின் நுட்பத்தால்
விதியையும்
வீழ்த்திடுவோம் வா....
உன் மனதில்
ஒரு சதவீதமாவது
என் மீது அன்பிருக்குமேயானால்
எனக்கு சொர்க்கம்
என்பது நிச்சயமாகிவிடும்...
உனது நிழலுக்கடியில்
எனது மரணம் நிகழும்
வரம் கேட்கின்றேன்...
இறக்கும் தருவாயிலாவது
என் காதுகளின் அருகில் வந்து
நீ என்னை விரும்புவதாக
ஒரு வார்த்தை சொல்லி விடு...
இந்தப் பாவியின் உடல்
இடுகாட்டில்
வெந்துவிட்டுப் போகட்டும்...