சீர்காழி என்ற திருப்பூந்தராய் - பாடல் 11

சீர்காழி என்ற திருப்பூந்தராய் ஊரில் விளங்கும் சிவபெருமான் பற்றி திருஞானசம்பந்தர் இயற்றிய பதிகத்தில் பியந்தைக் காந்தாரம் பண்ணில் எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தமாக அமைந்த 11 ஆம் பாடல்.

பாடல் 11 - எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

தேனமர் பொழில்கொளாலை விளைசெந்நெல்
...துன்னி வளர்செம்பொன் எங்கும் நிகழ
நான்முகன் ஆதியாய பிரமா
...புரத்து மறைஞான ஞான முனிவன்
தானுறு கோளுநாளும் அடியாரை
...வந்து நலியாத வண்ணம் உரைசெய்
ஆனசொல் மாலையோதும் அடியார்கள்
...வானில் அரசாள்வர் ஆணை நமதே

பொழிப்புரை:

தேன் பொருந்திய பொழில்களைக் கொண்டதும், கரும்பு, விளைந்த செந்நெல் ஆகியன நிறைந்துள்ளதும், வளரும் செம் பொற்குவியல் எங்கும் நிறைந்திருப்பதும், நான்முகனால் முதன்முதல் படைக்கப்பட்டதுமான பிரமாபுரத்துத் தோன்றி மறைஞானம் பெற்ற ஞான முனிவன் ஆகிய ஞானசம்பந்தன் வினைப்பயனால் தாமே வந்துறும் கோளும் நாளும் பிறவும் அடியவரை வந்து நலியாத வண்ணம் பாடிய சொல்லால் இயன்ற மாலையாகிய இப்பதிகத்தை ஓதும் அடியவர்கள் வானுலகில் அரசு புரிவர், இது நமது ஆணையாகும் என்கிறார் திருஞானசம்பந்தர்.

குறிப்புரை:

மறைஞான ஞானமுனிவன் - அபரஞானமும் பர ஞானமும் ஆகிய இரண்டையும் உடைய முனிவர்,

கோளும் - சூரியன் முதலிய கிரகங்களும், நாளும் - அசுவினி முதலிய நட்சத்திரங்களும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (7-Jul-15, 9:21 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 109

மேலே