சொர்ணக்காடு

ஒரு வெப்ப மலை முகட்டின் வழியே
என்பயணம் தொடர்ந்தது
என்னண்டை இருந்தவர்களும்
என்னடையைத் தொடர்ந்தவர்களும்
அவர்களுக்குள் குளிர்சாதனம் செய்து
அதில் முடங்கிக் கொண்டார்கள்

நானிப்போது நெடுவயல் கடந்து
நீண்ட கருப்பு மேக கூட்டங்கள்
வழியே வந்தடைந்தேன்
இரு பெரும் குன்றங்கள் இடையே இருந்த
இருட்டு வெளிப் பிரதேசம்.
நான் தூளி இல்லாமல் ஆடினேன்
குளிர் இல்லாமல் உறைந்தேன்.

வெப்ப சலனங்கள்
வேறுதிசைக்கு இடம்பெயர்ந்ததில்
அருவியில் ஆற்றொண்ணா வெள்ளப்பெருக்கு
ஆனாலும் அம்ச தூளிக மஞ்சங்கள்
வெப்ப சமுத்திரத்தில்
மூழ்கி செத்தன.

ஆடைகட்டி வந்த சாபங்கள்
ஆடை இல்லாமல் வந்ததால்
வாடை காற்றில் வந்த சுகந்தங்களும்
சோடை போகாமல் விறைத்து நின்றன.

அப்போதும்
அந்த அத்துவானக் காட்டில்
ஏப்பம் விட்ட கலர்கோழி கூவியது..
எல்லோரும் கலப்பை எடுத்து
உழப் போனார்கள்.
நான் மட்டும் கலப்பையை மடக்கி
கவிதை எழுதினேன்....

இன்றைக்கு மழையில் நல்ல காடு முளைத்தது .
நீங்கள் அடுத்தமுறை இங்குவரும்போது
உங்களை வரவேற்கும் வாசகத்தை
இதோ சொல்கிறேன்...

``இன்றைக்கு காட்டில் நல்ல மழை
இங்கு இல்லாத ஒன்று -அது நாளை'' .

எழுதியவர் : சுசீந்திரன் . (8-Jul-15, 9:15 pm)
பார்வை : 79

மேலே