ஏழுஸ்வரங்களின் காதலன்
மெல்லிசை மன்னனே !
உன் இசை கேட்டு
புவி அசைந்தாடியது ..
ஏழு ஸ்வரங்களில் சிரிக்கும்
உன் இசைக் காதலியை அழவிட்டு
எங்கே மனிதர் யாருமில்லையோ
அங்கே உனக்கொரு இடம்
தேட போய் விட்டாயோ ?
உள்ளத்தில் நல்ல
உன் இசை உள்ளம்
உறங்காதென்பதை
உலகமறியும்...
உன்
ஆர்மோனியப்
பெட்டியால்
கட்டிப் போட்டது
அந்த
கண்ணதாசனையும்
வாலியையும்
மட்டுமல்ல
தமிழிசையையும்தான்...
உனது கைகள்
மீட்டாததால்
இன்று வீணைகள் அழுகின்றன..
அன்று
தமிழ் மனங்கள்
பேச நினைத்ததெல்லாம்
இசையால் நீ பேசினாய்...
நீ
மெட்டமைத்து
பாடியதால்
பாரதியின்
சிந்துநதியின்
மிசை நிலவினிலே
எங்கள் பாமரனும்
பாடுகின்றான்..
உனது
இசையால்
கவிஞர்களின் வார்த்தைகள்
பூக்கின்றன..
மாலையிடுகின்றன..
மயங்குகின்றன..
நாணிக்கின்றன..
வாடுகின்றன..
சிலசமயம்
அவைகளுக்கு
தீப் பிடிக்கின்றன..
போனால்
போகட்டும் போடா
என உன் இழப்பைமட்டும்
எங்கள் திரை இசையால்
மறந்துவிட முடியுமா ?
புதிய வானம்
புதிய பூமி என்று தேடி
நீ வேறுலகம் சென்றாலும்
உன் இசையெனும்
பூமழை
எங்கள் மனதில்
பொழிந்துகொண்டே இருக்கும்..
நீராரும்
கடலுடுத்த
அந்தத் தமிழ்த் தாய்
வாழ்த்தை நாங்கள்
பாடும்போதெல்லாம்
அதற்கிசையமைத்த
உன்னையும் சேர்ந்தே
நினைவு கூருவோம் !
.