தினம் ஒரு திட்டு
"அப்பா... அப்பா... அப்ப்ப்பா..." என்று நச்சரித்த ஏஞ்சலினை மெதுவாக பாரத்தான் பிரபாகரன். தான் ருசித்துக் கொண்டிருந்த சிக்கன் 65யை விட்டு பிரிய மனமில்லாத அவன் உதடுகள் உதிர்த்தன வார்த்தைகளை - "என்னம்மா..?"
"அப்பா அவுங்க ஏம்பா பிச்சை எடுக்குறாங்க..?" என்று கேட்டாள் அருகே நின்று கொண்டிருந்த கிழவியை சுட்டிக்காட்டி. மாதத்தில் என்றாவது ஓரிரு நாட்கள் மட்டுமே சிக்கனை ருசிக்கும் பிரபாகரனுக்கு அக்கணமே தெரிந்துவிட்டது, அவனின் இன்றைய விருந்து முடிந்ததென்று. மின்னல் வேகத்தில் யோசித்த அவனின் மூளை ஒரு முடிவுக்கு வந்தது. ஏஞ்சலினிடம் ஏதாவது ஒன்று சொல்லி ஏமாத்த நினைத்தால் அவள் ஆயிரம் கேள்விகள் கேட்பாள். விளைவு வில்லங்கமாக போய்விடும். சிக்கனுக்கு வந்த அம்பு இரவு தூக்கத்தையும் சின்னாபின்னம் ஆக்கி விடும் என்று உணர்ந்த அவன் கேள்வியையே மாற்ற வைக்க வேண்டும் என்று - "If you can't convince them, confuse them" என்ற ஆயுதத்தை எடுத்தான். "அவுங்க பிச்சை எடுக்கலைமா... கடன் வாங்குறாங்க, அவ்வளவுதான்" என்றான்!
ஆயிரம் கேள்விகளை பட்டியல் போட்டு வைத்திருந்த ஏஞ்சலினுக்கு அந்த பதில் ஆச்சர்யமாக இருந்தது. அப்பாவிடம் கேட்க வேண்டும் என்று அவள் நினைத்திருந்த கேள்விகளெல்லாம் இப்போது கேட்க முடியாமல் போகவே அவள் யோசிக்கலானாள். அந்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்திய பிரபா நருக்-முறுக்கென கடிக்கலானான் - எலும்போடு இருந்த இறைச்சியை. வேளச்சேரியில் எத்தனையோ கடைகளிருந்து பிரபாவுக்கு பிடத்த கடை நம்ம பஷீர் அண்ணன் கடைதான். பஷீர் பாயின் கைமணம், கை வண்ணம் ஒரு அலாதியான சுவைதான். பொறிச்சகோழியின் மீது அவர் தூவும் மிளகாய், சாட் மசாலா, உப்பு கலந்த தூள்தான் அவரின் இரகசியம். இதைவிட பலமடங்கு விலை அதிகமாக இருந்தாலும் பரவாயில்லை என்று மகளை கே.எஃப்.சி. யில் சிக்கன் ருசிக்க வைத்த பிரபாகரனுக்கு இந்த சிக்கனின் மீது ஒரு அளப்பரிய ஆவல். ஏஞ்சலினிக்கு மிகவும் பிடித்தது இதுதான் இருப்பினும் கலாச்சார காரணங்களுக்காக கே.எஃப்.சி பிடித்தாற்போல் காட்டி கொள்வாள். அதனாலேயே பஷீர் பாய் சிக்கன் கொஞ்சமாக போதுமென்பாள். கொஞ்சமாக போதுமென்றால், கொஞ்சமாக உனக்கு போதுமப்பா என்று பொருள்.
"அப்போ... அவுங்க எப்பப்பா காசைத் திருப்பி தருவாங்க" என்றாள். இடையில் இருந்த நேரத்தில் இடைவிடாமல் இறைச்சியை கொரித்த பிரபா கூறலானான், "தருவாங்கம்மா" என்றான் மெதுவாக விழுங்கியபடியே.
"அதான் எப்போ...?"
"ஹம்ம்ம்... அவுங்களுக்கு காசு வந்ததும்."
"அவுங்களுக்கு எப்பப்பா காசு வரும்..?"
தான் எதிர்பாராத ஆபத்தான பக்கமாக உரையாடல் செல்வதை கவனித்து சுதாரித்தவனாய் "அட... அவுங்க நம்ம கிட்டேயே கடனை திருப்பி தர மாட்டாங்கம்மா... வேற ஒருத்தவங்ககிட்ட நம்மகிட்ட வாங்குன கடனை திருப்பி தருவாங்க" என்றான்.
"அப்போ நம்ம அவுங்களுக்கு இப்போ கடன் தரப்போறோமாப்பா...?"
"அட நாராயணா... என்னை ஏன் இந்த மாதிரி இக்கட்டான சூழ்நிலைலை தள்ளி விடுற"னு இல்லாத கடவுளைப் பாத்து கேட்க ஆரம்பித்தான், பதில் சொல்லாது தவித்த பிரபாகரன்.
" சொல்லுங்கப்பா... நம்ம அவுங்களுக்கு இப்போ கடன் தரப்போறோமா..?"
மகரப்பிடியிலிருந்து கஜேந்திரனை காக்க வந்த பரந்தாமனாய், மகளின் பிடியிலிருந்து பிரபாகரனை காக்க வந்தது மேரியின் கைபேசி அழைப்பு .
பயம் கலந்த நிம்மதியுடன் அழைப்பை ஏற்று பிரபா வாய் திறந்தான் "ஹல்" என்று. அதற்குள்ளாக "என்ன செஞ்சுகிட்டு இருக்கீங்க, அப்பனும் மகளும் இன்னும்? அவளுக்கு செல்லம் குடுக்காதீங்க குடுக்காதீங்கனு சொல்லுறேன்! கேக்குறீங்களா நீங்க? எல்லாம் நீங்க கொடுக்குற இடம்தான். இப்பவே உங்களை மாதிரி வாய் மூடாம பேசிகிட்டே இருக்கா. அவ பேசுறதைக் கேட்டு கேட்டு எனக்கு காது வலியே வந்திடுது! என்ன பதிலே பேசாம இருக்கீங்க வாயில என்ன கொலுக்கட்டையா இருக்கு..? உங்களைத்தான்" என்றாள்.
எலியூருக்கு பயந்து புலியூருக்கு போன பரதேசியாய் பேசுவதறியாது விழித்தான் பிரபாகரன். "இந்தா வரேம்மா... நம்ம பஷீர் அண்ணன் கடையில பாப்பாவும் நானும் சிக்..." என்று முடிப்பதற்குள் "என்னது ! அந்த ரோட்டுக்கடையிலையா..? கருமம் கருமம். அது நல்லாவா இருக்கும். சாக்கடை பக்கத்துல கடை இருக்குமே. அவன் எந்த தண்ணீல போடுவானோ.. கெட்டுப் போன சிக்கனதான் போடுவானுக. உங்ககிட்ட எத்தனை தடவை சொல்லுறது கே.எஃப்.சியில மட்டும் அவளுக்கு சிக்கன் வாங்கி கொடுங்கனு. போன ஜனவரியில காய்ச்சல் வந்து 4 நாள் அவளுக்கு உடம்பு சரியே ஆகலை. ஸ்கூலுக்கும் போகலை. நீங்க ஏன் இப்படி சொல்லுற பேச்சையே கேக்க மாட்டேங்குறீங்க? எல்லாம் உங்கம்மா புத்தி அப்படியே வருது. மத்தவங்க பேசுறதே கேக்குறதே இல்லை நீங்க பாட்டுக்கு பேசிகிட்டே இருப்பீங்க. உங்க இஷ்டத்துக்கே எல்லாம் நடக்கனும்" என்று அடுக்கிக் கொண்டே போனாள். இடைமறித்த பிரபா... "இந்தா ஒரு நிமிஷம் இரும்மா நான் கூப்பிடுறேன்" என்று அழைப்பை துண்டித்து விட்டு காசைக் கொடுத்து விட்டு, தனது Bajaj Platina வில் வீட்டுக்கு வந்து சேர்ந்தான், ஏஞ்சலினுடன். வீட்டில் வந்து அமர்ந்ததும் அர்ச்சனை விழுந்து கொண்டிருந்தது பிரபாவுக்கு. செய்தி கேட்கலாமென்று டீ.வி. சேனலை மாற்றிய போது "மேகியை அடுத்து கே.எஃப்.சிக்கும் நெருக்கடி. சிக்கனில் நச்சுப் பொருட்கள் இருப்பதாக முதற்கட்ட ஆய்வு தகவல்" என்று ஒலித்தது.