சைன்லோ ஆட் சார்கோ

பல வருடங்களாய் நானே புணைந்துக் கொண்ட பல கேள்விகளுக்கான பதில்கள்..என் பல நாள் முடிக்கப்ப-டாத கதைகளின் முடிவுகள்...என் பால்ய விசித்திரத்தின் வேலியைக் கட்டவிழ்க்கும் கைகள்...என் கருத்த வெறுமை வெளிகளின் விடியலுக்கான துளிகள்...அது உடைத்தெரிய வேண்டிய பொய்யான பிம்பத்தின் மெய்யாகக் கூட இருக்கலாம்..சரியாய் தெரியவில்லை..இன்னும் சரியாய் தெரிவதற்க்கில்லை...ஆனால்...அதற்கான நிகழ்வு இன்னும் சில நிமிடங்களுக்குள் நடந்துவிடலாம் என்பது மட்டும் கண்முன்னே தெரிகிறது.அதனை ஏற்படுத்திக் கொடுத்த பெருமிதமோ என்னவோ,பேருந்து நல்ல வேகம் பிடித்திருந்தது..இன்று எனக்கும் கூட அந்த வேகம் பிடித்திருந்ததுதான் உண்மை.

இருக்காதா என்ன?இந்த தருணத்தை எத்தனை வருடங்கள் கற்பனை செய்து இந்த கெழுட்டு மனம் அசைப்போட்டிருக்கும்..
அது அவனே தான்..ஊமையனே தான்..நேற்றுக் கூட கதை சொல்லுமாறு என் மடியில் வந்தமர்ந்த என் பேத்திக்கு முன்னால்,என் மனதில் கதையாய் வந்து
அமர்ந்துகொண்ட அதே ஊமையனே தான்!!சரிதான்...இதில் என்ன பிரமாதம் இருக்கிறது?நாம் கதை சொல்லப் போனால்,பெரிதும் நாம் பார்த்து வளர்ந்த மனிதர்களும்,
அவர்களின் விசித்திரமுமே கதைகளாய்,பகடியாய் வருவதில் ஒரு ஆட்சர்யமும் இல்லை!அப்படி என்ன அவனிடம் அசரவைக்கும் கதை இருந்துவிடப் போகிறது என்கிறீர்களா?
ஊமையன் எனக்கு மட்டும் ஆச்சரியர்த்திற்கு உரியவன் அல்ல.என் தெருவின் எல்லா சிறுவர்களுக்கும்,ஏன்..சில பெரியவர்களுக்கும் கூட ஆச்சரியர்த்திற்க்குரிய ஒரு
குழப்பவாதிதான்.
அவன் வலதுகையில் தொங்கிக்கொண்டிருக்கும் அந்த பெரிய சைஸ் மருவு போலவுள்ள ஆறாவது விரல்..அவன் தலையில் எப்போதும் அணிந்திருக்கும் அந்த (அதில் வியர்வை உண்டாக்கிய வெண்மை ஆங்காங்கே திட்டு திட்டாய் படிந்திருக்கும்) சிவப்புத் தொப்பி..அவனது ஐஸ்வண்டியை தள்ளி வரும் போதெல்லாம்,கூப்பாடு போடும்
அந்த புரியாத பாசை...பென்சிலில் வரைந்ததைப் போல,அவ்வளவு மெல்லிசான மீசை(எங்கள் ஊரில் அப்படி ஒரு மீசை வைத்தவர்களை பார்க்க முடியாது.பார்ததும் இல்லை)...
இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.விசித்திரமானவன் தான் ஊமையன்!
இப்படி சாதாரண மக்களிடம் சற்று தள்ளி நிற்பதாலோ என்னவோ,அவன் மீதான பார்வையையும்,அதன் எண்ணத்தையும் எளிதில் நம்முள் உண்டாக்கிவிடுவான்.காலை பத்து
மணி ஆகிவிட்டால் போதும்,தன் ஐஸ்வண்டியை ஓட்டிக்கொண்டு தன் நடையைக் கட்டிவிடுவான்.மாலை 4 மணிக்கு என் பள்ளியின் முன்னால் தன் பாதயாத்திரையை
முடித்துக் கொள்ளும் அவனுக்கே தெரியாது,அது எதற்க்கான பயணம் என்று?வடிவற்ற, சோர்விழந்த அந்த கரிகாலனின் கால்கள் சொல்லும் அது எத்தனை வருடத்து நெடும் பயணம் என்று!.ஏனென்றால்,அவன் ஐஸ்பெட்டிக்குள் ஒரு முறைக்கூட யாரும், ஒரு ஐஸ்துண்டுகளைக் கூட பார்த்ததில்லை.அப்படியாய் அந்த வெறும் வண்டியை ஏன்
இப்படித் தள்ளிக்கொண்டு அலைகிறான்?எத்தனை எத்தனை கேள்விகள்-அவன் மீது..இல்லை இல்லை...அவன் மீதான எங்கள் பார்வைகளின் மீது?அவரரவர்களுக்கான கேள்விகளை இதுவரை யாரும் அவனிடம் கேட்டிருக்கப் போவதில்லை.கேட்டிருந்தாலும் அவனிடம் பதில் வந்திருக்கப் போவதில்லை.இப்படிப்பட்ட மனிதர்களிடம் என்ன கதை இருக்கப் போகிறது?மன்னிக்கவும்.இங்கு நான் சொல்லிக் கொண்டிருப்பது அவனைப் பற்றியதல்ல,அவனை நான் தொலைத்த கதை!இதில் என்ன ஆட்ச்சரியும் இருக்கிறது?நமக்கான மனிதர்களை நாம் ஏதோவொரு வாழ்வியல் ஓட்டத்தில் தொலைத்துத்தான் கொண்டிருக்கிறோம்! என்கிறீர்களா? அது அப்படியல்ல..அது காலத்தையும்,அதை சுமந்த உங்களின் வயதையும் பொருத்தது.சிறுவயதில் எனக்கு நீச்சல் சொல்லித்தந்த நண்பன் காங்கயன் காவிரி நீரில் அடித்துச்செல்லப்பட்டது..நல்ல திடசாலியான மாமா நென்சுவலியில் என் கண்முன்னே இறந்தது..இப்படி ஏதொவொரு மர்மங்களை சுமந்த மனிதர்களை உங்கள் காலம் சுமந்திருக்கவேண்டும்.அதற்கான விடைகளை அதே காலம் உங்களிடம் மறைத்திருக்கவேண்டும்.
சரி.அது இருக்கட்டும்.ஊமையன் அப்படி என்ன பிரமாதமானவன்?பர்மாவில் இருந்து வந்ததனால்,அவன் உறவென்றும்,அவனைப் பற்றி அறிந்தவனென்றோ எவரும் இல்லை.
குறைந்தபட்ச ஒரு நட்பு வட்டாரத்தை இந்த சமூக சூழலில் உருவாக்க பேசத் தெரிந்திருக்க வேண்டும் அல்லது பேசுவதை கேட்கத் தெரிந்திருக்க வேண்டும்.அவன்
யாரிடமும் பேசியதும் இல்லை..மற்றவர் பேச்சை நின்று கேட்டதும் இல்லை.அவன் மொழியின் மீதான கர்வமோ அல்ல என் மொழியின் மீதான கோபமோ என்னவோ தெரியவில்லை.அவனை எப்படியாவது பேசவைத்துவிட வேண்டும் என்றெல்லாம் கங்கணம் கட்டித் திரிந்த எங்கள் பால்ய நாட்களும் உண்டு.உண்மையை சொல்லவேண்டும்
என்றால் அவன் பேசாவிரதத்தை எவறாலும் கலைக்கத்தான் முடியவில்லை.எவர்க்கும் அதற்கான தேவையை அவன் ஏற்ப்படுத்தவில்லை.அதற்கான தேவை அங்கு அவனுக்கும் இல்லை.மற்றவர்களுக்கும் ஏற்ப்படுத்தவில்லை.சரி..அது என்ன?பேசாவிரதம்?மொழிகளைக் கடந்து மனம்தான் தினம் தினம் எவ்வளவு மௌனங்களைப் பேசிக் கொண்டிருக்கிறது!இப்படி எத்தனையோ காரணங்களை யார் எடுத்துச் சொன்னாலும்,எந்த எழுத்துச் சொன்னாலும் எங்கள் பொருத்தமட்டில் அவன் பேசுவதில்லை.அவ்வளவுதான்!!பெயரை எங்கோ தொலைத்தோ,அல்லது இங்கு மறைத்தோ,பேசா மொழியை பேசுபவனை ஊமையனாய் பேசிக்கொண்டோம்!
பெயர்கள் இல்லாத மனிதர்களை நினைத்துப் பார்க்க பயமாகத்தான் இருக்கிறது.அது இருக்கட்டும்.விட்டுவிடுவோம்.அது உளவியல் கலந்த மானுடப்பிரச்சனை.
அன்றொரு நாள்,காதில்லா சோத்துப்போசியை சூடு தாங்காமல் இருகையிலும் மாறி மாறி எடுத்துக்கொண்டு வேகமாய் பள்ளிக்கு ஓடிக் கொண்டிருந்தேன்.அங்கு ஊமையன்
எதையோ தேடிக்கொண்டிருந்தான்.அப்படி எதை வைத்திருக்கக்கூடும்..அதை தொலைப்பதற்க்கு?எதுவும் புரியாதவனாய்,அவனே அறியாமல் பின் தொடர்ந்தேன்.
அவன் பெரிய புலனாளிதான்!மனித வாடையையா?அல்ல தூக்குபோசியின் உள்ள சுடுகுழம்பின் வாசனையா?தெரியவில்லை.எப்படியோ
என்னை வாசம்பிடித்துவிட்டான்.பயம் பின்னே இழுத்ததினால்,என் கால்கள் முன்னே நகரமறுத்து எந்த அசைவுமின்றி நின்றுக்கொண்டிருந்தேன்.நெருங்கிவிட்டான்.
எப்போதும் தெரிவதைவிட இன்று எனக்கு அவன் அகலமாய்த் தெரிந்தான்.
"சைன்லோஆட் சார்கோ?என்ன வேணும்?...." என்று தொடங்கி தமிழையும்,எனக்கு விளங்காத சில மொழிகளையும் கலந்து பேசிக்கொண்டிருந்தான்.அவன் முகபாவங்கள்,அந்த
பேச்சின் வீரியும்,பேசிய கலப்பட மொழியின் ஏற்ற இறக்கங்கள் எல்லாம் மனிதர்களின் மீதான அவன் கோபத்தையே பேசிக்கொண்டிருந்தது.நெடுநேர பலத்த காற்றுக்கு பிறகு
பெய்யும் பேய்மழை போல,அவன் அழுதுக்கொண்டிருந்தான்.அவனை எனக்குள்ளும், அல்ல எவர்குள்ளும் பொருத்திப் பார்க்கத் தெரியாத பருவம் அது.எங்களை
பொருத்தமட்டில் அவன் வேடிக்கை மனிதன்.எங்கள் கதை உலகிற்க்கு தேவைப்படும் ஓர் ஊடகம் அல்ல செய்தி.அவ்வளவுதான்.
அன்றைய தினம் முழுவதும் என்னை சுற்றி ஒரே கூட்டம்தான்.இதில் என்ன இருக்கிறது?செய்திகளைச் சுற்றியும்,கூட்டம் சேர்த்து அதை விவாததிற்குள்ளாக்கியும்,கூட்டத்தை
கலைத்துவிட்டு மீண்டும் செய்திகளை தேடியும் அலையும் கூட்டம்தானே நாம்!

அந்தந்த பருவ காலத்தின் ஆட்ச்சரியங்களிலும்,தேவைகளிலும் உருண்டோடிக் கொண்டிருந்தது என் காலம்.எந்த பருவதில்லும் ஊமையனுக்கான செய்திக்கோ,பரபரப்புகோ
ஒன்றும் மாறுதல் இல்லையென்று சொன்னால் அது என் பருவத்தின் மீது நான் சுமத்தும் துரோகம்.அதற்காக ஊரின் நினனவே இல்லை என்றும் சொல்ல முடியாது.ஊரில் நான் கழித்த,மறந்த நினைவுகளை அங்கு சில மனிதர்களும்,அவர் தம் செய்கைகளும் பிம்பமாய் ஓட்டிக்கொண்டிருந்தனர்.பி.யு.சி படித்து திரும்பிய அந்த இரண்டு வருடத்தில் ஊரில் சில சில புறமாற்றங்ககளை தவிர எதுவும் பெரிதாய் மாறிவிடவில்லை."வெய்யில் இம்முறை அதிகமில்ல?எதாவது சில்லுனு குடிக்கிறியா??"கேள்விகள் ஆபத்தானவை.என் அம்மாவின் அந்த கேள்வி ஏனோ ஊமையன் நினனவைத் தட்டிவிட்டிருந்தது.என் அம்மா,நண்பர்கள் உட்பட எவர்க்கும் தெரியவில்லை.ஆனால் அவன் ஊரில் இல்லை என்பது மட்டும் திட்டவட்டமாய் சொல்லமுடியும்.எங்கே சென்றிருப்பான்?அவனான உலகம் இந்த ஊர் என்றல்லவா நினைத்திருந்தேன்?அன்று அவன் அழுகைப் படிந்த முகம் நினைவுக்கு வருகிறது.அப்படி ஏன் மனிதற்கள் மீது அவனுக்கு கோபம்,பயம்,காட்டம்.தேடலும் இலக்கும் இல்லாதவன் மனிதனா?அப்படி என்றால் அவன் தேடல் என்ன?எதற்காக இந்த ஊரில் அப்படி அலைந்தான்.அவனுக்கான எந்த நினைவுகளை இங்கிருந்து அவன் எடுத்துச் சென்றிருக்கக் கூடும்?அவனுக்கான மனிதற்களை தேடிச் சென்றுவிட்டானோ?அப்படியெனில் அவனுக்கான மனிதர்களே இங்கு இல்லையா?கோபம் கோபமாய் வந்தது.

கதை சொல்கையில்,பேரனிடம் இல்லாத அந்த ஐந்தாவது விரலில்,சீரான இடைவெளியில் பீச்சுகளில் போடப்பட்டிருக்கும் ஐஸ்கிரீம் கடைகளில்,எப்போதும் காட்டமான
முகத்துடன் கேட்டை திறந்துவிடும் ஃப்ளாட்டின் செகுரிட்டி சௌரப்ராய்,...இப்படி ஏதொவொரு வடிவில் என் நினைவுகளின் பிம்பமாய்,என் கதைகளின் மெல்லிய
உயிரோட்டமாய் இத்தனை காலமாய் மனதில் தவழும் அவனை அன்று தொலைத்ததன் மூலம்,அவன் மீதான கேள்விகளின் விடைகளையும் தொலைத்திருந்தேன்.
இதோ என் முன்னால் அதற்கான விடை,முடிக்கப்படாத கதைகளின் முடிவு...இன்னும் சற்று நேரத்தில்..

பேருந்தை விட்டு அவன் இறங்கியிருந்தான்.நானும் அதே ஸ்டாப்பில் இறங்கிவிட்டேன்.என் முன்னால்தான் நடந்து செல்கிறான்.எந்த சந்தேகமும் இன்றி அது அவனே தான்.
அந்த ஸ்டாகரிங்க் வாக்கைத் தவிர எல்லாம் இன்னும் அப்படியேத்தான் இருக்கிறது.இன்னும் அந்த தொப்பியை அப்படியே வைத்திருக்கிறான்.அப்படி அதில் என்ன தான் இருக்கிற்தோ?அந்த தோய்ந்த கால்கள் குச்சியாய் மாறியிருந்தது.எப்போதும் போல எதையோ முனகிக்கொண்டே செல்வதை பார்...எதை எதையோ யோசித்தபடி என் மனம்
பாதங்களை நகர்த்துகின்றன.

அவன் சொல்லப்போகும் என்னுடைய கேள்விகளுக்கான பதில்கள்,என்னுடைய பலகால கற்பனைகள் அல்லது கற்றுத் தேர்ந்ததாய் நான் எண்ணிக் கொண்டிருக்கும் கற்ப்பிதங்களுக்குள் ஏதோ ஒன்றாகக் கூட இருக்கலாம்.ச்...ச்சீ..ச்சீ..எதற்கு இந்த தேவையில்லாத யோசனை.குரங்கு மனம் என்பது சரியாகத்தான் இருக்கிறது!ஒருவேலை
அவன் சொல்லப் போகும் பதில்கள் என் வாழ்க்கை கற்ப்பிதங்களுக்குள்ளும்,அதனால் உருவாக்கிக்கொண்ட கற்பனைகளுக்குள்ளும் பெரிதும் விலகி பொய்யாகிவிட்டால்...??
ஏன் இப்படி மனம் எனக்கான பதில்களை வாங்கிக்கொள்ள குழம்புகிறது.ஒன்றை விட்டொன்று பற்றல் என்று சும்மாவா சொன்னார்கள்! .இவ்வளவு நாட்களாய் அசைப்போட்டும்,விடைகளை கற்பனை செய்தும்,பார்க்கும் சிலரை பிம்பங்களாய் ஓடவிட்டும்..குதூகழித்த மனம், அதற்க்கான தேவைகள் (இனி என்னுள்) குறைந்தோ அல்லது அறவே நீங்கியோ போக வாய்ப்புள்ள அவன்
பதில்கள் மீது கொண்ட பயமா?வேண்டாம்...வேண்டாம்..ஏன் மனதிற்கு எதிரான இந்த புரட்சி?நமக்கான மனிதர்களை நாம் எங்கோ ஒரு தேவையில்,அதன் வேட்க்கையில்
தொலைத்துத் தான் கொண்டிருக்கிறோம்!ரயில் பயணத்தில்,திருவிழாக்களில்,பொதுக் கூட்டங்களில்...இப்படி நாம் பேசி ரசித்த மனிதர்களை நம்முள் தொலைந்துதான்
போகிறார்கள்!இன்னும் தொலைக்கத்தான் போகிறோம்! ஆனால் இதில் எத்தனை மனிதர்கள் நினைத்ததும் கதைகளாய்,அதன் கேள்விகளாய் வந்து விழுகிறார்கள்?அப்படி வந்து
மனதில் அமைதியாய் அமர்ந்து கொள்ளும் ஊமையன் கதைகளையும்,அதற்க்கான கேள்விகளையும் முடித்துவிட்டால் எந்த கதை இனி என்னுள் தங்கியிருக்கும்?
கதை இல்லாத மனிதனா?பெயர் இல்லாத மனிதனாய் வாழ்வதை விட இது மோசமானது!

என் முன்னால் நடந்து செல்லும் அவன் இப்போது என்னை விட்டு வெகுதூரம் சென்றுவிட்டான்..ஆனால் இன்னும் என்னுள் கேட்கிறது "சைன்லோ ஆட் சார்கோ..என்ன வேணும்?"

-வ.பாரி இளஞ் செழியன்.
8/15/2014

எழுதியவர் : வ.பாரி இளஞ் செழியன் (17-Jul-15, 1:48 pm)
சேர்த்தது : pari elanchezhiyan V
பார்வை : 290

மேலே