கொலையாளி 4

..................................................................................................................................................................................
ஞாயிற்றுக்கிழமையும் அதுவுமாய் இன்றைக்கு ஃபோன் எதுவும் வரக்கூடாது, வரக்கூடாது என்று வசந்தகுமார் வேண்டிக் கொண்டிருந்த போது இன்ஸ்பெக்டர் பூவராகனிடமிருந்து ஃபோன்...

“ வசந்த், உங்க வீட்டுக்குப் பக்கத்து கடைக்கு ஒரு ஃபாக்ஸ் அனுப்பியிருக்கேன். அடையாள அட்டையோட பிரதி - பாஸ்கரன் என்கிறவரோடது. சூளையில விலாசம். மனுசன் குன்றத்தூர் புதர்ல பிணமா கிடக்காராம். உடம்புல மூணு இடத்துல கத்தி குத்து. கொஞ்சம் வீட்டுக்குப் போய் விசாரிச்சு வாங்களேன்..! ”

சூளையில் குறிப்பிட்ட வீட்டை அடைந்தபோது அந்த வீட்டின் இல்லத்தரசி தலை நிறைய பூவோடு கலகலப்பாக வெளியே வந்தாள். கணவன் கொலையுண்டது தெரியாதோ? எப்படி விசாரிப்பது என்று வசந்த் சங்கடத்தை அசை போட்டான்.

அவள் “ என்னங்க” வை அழைத்தாள். உள்ளே இருந்து வந்த என்னங்க “ ஐயம் பாஸ்கரன் ” என்றான். வைசாகா கம்பெனியின் விற்பனை மேற்பார்வையாளர்.

“ இது உங்க ஐ.டி தானே? ” என்றான் வசந்த் குழம்பி..!

“ ஐ.டி. என்னோடதுதான். போட்டோ என்னோடது இல்ல; என் பர்ஸ் சென்ட்ரல் ஸ்டேஷன்ல தொலைஞ்சு மூணு நாளாகுது..! உள்ள வாங்க! என்ன வேணும்? ”

நல்ல வேளை ! அவசரப்பட்டு எதுவும் உளறவில்லை. கொலையானவன் ஒரு பிக்பாக்கெட் பேர்வழியாய் இருக்க வேண்டும். இவருடைய பர்சை திருடியிருக்கிறான்; இவருடைய ஐ.டி. கார்டில் தன் போட்டோவை ஒட்டியிருக்கிறான்...!

வசந்த்துக்கு புரிந்தது.

தன்னை ஒரு விற்பனையாளன் போலக் காட்டிக் கொண்டு வீடுகளை நோட்டமிட்டிருக்க வேண்டும்..

பாஸ்கரனை தனியே அழைத்துப் போய் விஷயத்தை சொன்னான். “ என்னது? என் கல்யாண நாளும் அதுவுமா நான் செத்துப் போயிட்டேனா? ” என்றவனைத் தேற்றி ஃபாக்ஸ் வந்த பேப்பரிலே மூன்று துண்டுகளைக் கிழித்து அவன் தலையில் போட்டு ஆசிர்வாதம் பண்ணி... இன்ஸ்பெக்டரிடம் தெரிவித்து...

“ கொலை செய்யிறவங்க அவனவனை அந்தந்த ஏரியாவுலேயேதான் போட்டுத் தள்ளணும்னு புதுசா ஒரு சட்டம் போடணும்; ” வெயிலை சபித்துக் கொண்டே புலம்பியபடி குன்றத்தூர் புறப்பட்டான்...!

கொலையுண்டவரின் சடலம் தடயவியல் துறைக்கு அனுப்பப் பட்டு விட்டது. அங்கு டாக்டர் பிரியம்வதா தமது கண்டுபிடிப்பை ஃபோனில் பகிர்ந்தார்..

“ குறைந்த பட்சம் ரெண்டு பேராவது துரத்தியிருக்கணும்.. உடம்புல முள்ளு கீறின அடையாளமிருக்கு..! ரெண்டு வித கத்திக்குத்து இருக்குது..! மரண நேரம் ராத்திரி ஒரு மணியை ஒட்டி...!

“ இந்த ஆளு புது பிக்பாக்கெட் காரன் சார்..! பழைய கிரிமினல் ரெகார்டுல இவன் பேர் இல்லே..! ” என்றார் குன்றத்தூர் இன்ஸ்பெக்டர். “ ஏரியாவுக்கும் புதுசு போல.. ”

குன்றத்தூர் போலிஸ் ஸ்டேஷனில் கொலையானவனின் பொருள்கள் இருந்தன. முள் குத்தி கிழிந்த சட்டை பாண்ட், சிம் இல்லாத மொபைல், பணத்தோடு பர்ஸ், மேற்படி ஐ.டி.கார்டு, கூட ஒரு பழைய பம்பரம்..! பம்பரத்தின் ஆணிப்பகுதியில் மண் ஒட்டியிருந்தது.

உயிரைக் கையில் பிடித்தபடி ஓடும் ஒருவன் வழியில் இடறிய பம்பரத்தை பையில் போட்டுக்கொண்டு ஓடியிருக்கிறான்..! இந்த சாட்டையில்லா பம்பரம் தெரிவிப்பது என்ன?

பம்பரம் ஒரு கட்சியின் சின்னம்.. இவனைக் கொன்றது கட்சிப் பிரமுகரா?

“ எனக்கும் அப்படித்தான் முதல்ல தோணுச்சு. ஆனா அப்படி யாரும் இங்க இல்ல சார்..! ” என்றார் இன்ஸ்பெக்டர்.

“ உங்களுக்கு யார் மேலயாவது சந்தேகம்? ”

“ தொழில் முறைப் போட்டியா இருக்கலாம்..! பழைய பிக்பாக்கெட்காரனுக்கும் இவனுக்கும்..! ”

“ பம்பரம் பலராமன்..; இப்படி எந்த ரௌடிக்காவது ஏதாவது பட்டப்பெயர்? ”

“ சிண்டு கோபால்தான் இருக்கான்..அதுவும் உள்ள..! ”

“ சமீபத்துல நடந்த கிரைம் ஏதாவது? ”

“ வழக்கம் போலத்தான்..! ஈவ்டீசிங், செயின் திருட்டு, பாங்க்கில கள்ள நோட்டு.. ”

இன்ஸ்பெக்டர் இந்த கேஸில் அக்கறையில்லாதவராகத் தெரிந்தார். செத்தவன் பிரபலன் கிடையாது.. புதருக்குப் பக்கத்தில் வீடு கட்டியவர் செல்வாக்குள்ளவர்; புகார் கொடுத்து விட்டார். என்ன செய்வது?

அந்த ஏரியாவை அப்படியே வலம் வந்தான். கொலை நடந்த இடத்தில் ரத்தம் சிந்தியிருந்தது. புளிய மரத்தடியில் சில சிறுவர்கள் பம்பரம் விளையாடிக் கொண்டிருந்தனர். ஒருவனுடைய பம்பரத்தை காணோமாம். குப்பத்துச் சிறுவன்; அம்மா கூடை முடைகிறார்; அப்பா கட்டட வேலை..

இருட்டில் பம்பரமென்று அடையாளப் படுத்தலாமே ஒழிய யாருடைய பம்பரமென்று அறிய முடியாது..!

மூன்றாவது முறையாக பாதப் பிரதட்சணம் செய்தான்.

வளர்ந்து வரும் ஏரியா.. ! அழகழகான வீடுகள்..! அவன் விசாரித்த வரையில் நிறைய பேர் வளைகுடா நாட்டில் வேலை பார்த்து சம்பாதிக்கிறார்கள். வீடுகளில் பொதுவாக குடும்பத் தலைவர் நடமாட்டமில்லை. ஆசை ஆசையாக வீடு கட்டியிருக்கிறார்கள். பார்த்தே இராத பெயிண்டிங் நிறம், அலங்காரங்கள்..! வீட்டு மேல் நிலை நீர் தேக்கத் தொட்டி கூட காராய், பிள்ளையாராய்... கலையம்சத்துடன்..!

மதியம் இரண்டு மணியிருக்கும்; சுளீர் வெயிலுக்கு ஆள் நடமாட்டம் குறைந்து அவரவர் குட்டித் தூக்கத்துக்கு ஆயத்தமாயினர். வசந்த்தின் கண்கள் ஏதோ ஒன்றை கவனித்தன. செத்தவன் மூளைக்காரன்தான்..!

தடயவியல் துறைக்குச் சென்று அங்குள்ள குவார்ட்டர்ஸில் தங்கியிருந்த டாக்டர் பிரியம்வதாவை சந்தித்து வந்தான்.

வசந்த் எதிர்பார்த்திருந்த நேரம் வந்தது. பிக்பாக்கெட்காரனின் கொலை மர்மத்தை கண்டுபிடிக்க நாமும் பிக்பாக்கெட்டர் ஆக வேண்டும்..!

நடுநிசி கடந்தபின் பதுங்கிப் பதுங்கி கள்ளச்சாவி போட்டு பூட்டியிருந்த ஒரு வீட்டைத் திறந்தான்.

பூட்டிய வீடென்றால் வசந்த்துக்கு ஆனந்தம் தாளாது. ஏனெனில் நிம்மதியாகத் தேடலாம்..!

வீட்டுக்குள் ஒரு தடியன் படுத்திருந்தான். பூட்டிய வீட்டுக்குள் தடியன்..!

வசந்த் தன் கைக்குட்டையை எடுத்தான். பிரியம்வதா எச்சரித்துதான் கொடுத்தார், “ சென்ட் கலந்த குளோரோஃபார்ம்..! செம ஸ்ட்ராங் வசந்த்..! தப்பித் தவறி உங்க மூக்குல வச்சிடாதீங்க..! ”

ஒருத்தர் வேலை மெனக்கெட்டு வேண்டாமென்று சொன்ன விஷயத்தை செய்யாமல் விட்டால் எப்படி?

கைக்குட்டையை இரு கை விரல் நுனியால் பிடித்து மூக்கருகே கொண்டு போனான்.

அதற்குள் எழுந்து விட்ட தடியன் கைக்குட்டையைப் பறித்தான். அதன் வாசமும் ஸ்பரிசமும் அவனை உபயோகிக்கத் தூண்டின. அப்படியே தன் முகத்தைத் துடைத்தவன் தள்ளாட ஆரம்பித்தான்.

தடியனை முழுதும் மயக்கமடையச் செய்த வசந்த் அவனை ஒரு அறைக்குள் தள்ளிப் பூட்டினான்.

திருட வந்தவன் என்ன செய்வான்? பீரோவைத் தேடுவான்...!

பீரோவைத் தேடி லாக்கரில் கை விட்டால் சில நூறு ரூபாய் நோட்டுக்களைத் தவிர ஒன்றையும் காணோம்..!

பீரோ நகர்த்த முடியாதபடிக்கு ஓரிடத்தில் சுவரோடு பொருந்தி இருந்தது. அங்கிருந்த ஒரு விசையை இயக்க, எங்கோ ரகசியக் கதவு திறந்தது. ரகசிய கதவு நிலவறைக்குப் போனது.

நிலவறையில் எந்திரங்கள், கட்டுக்கட்டாய் நோட்டு..! கள்ள நோட்டு அடிக்கிறார்கள்..!

தற்செயலாய், திருட வந்தவன் இதைக் கண்டுபிடித்து விட, உயிரை இழந்திருக்கிறான். போலிஸ் விசாரணை ஓயும் வரை வேலையை நிறுத்தி, வீட்டைப் பூட்டி விட்டு, ஒன்றும் தெரியாதது போல் போயிருக்கிறார்கள் சமூக விரோதிகள்..

குன்றத்தூர் இன்ஸ்பெக்டருக்கு ஃபோன் செய்தான். மீதியை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்..!

போலிஸ் வந்து தடியனைத் தூக்கியது. அந்த இடத்தை தன் வளையத்துக்குள் அடக்கியது. வீட்டுச் சொந்தக்காரனை பிடிக்க ஆளை ஏவியது.

வசந்த் வெளியே வந்தான். “ வசந்த்..! எப்படி கண்டு பிடிச்சீங்க? ”

இன்ஸ்பெக்டர் வினவ, வசந்த் மேலே கை காட்டினான்.

அந்த வீட்டின் மேல் நிலை நீர் தேக்கத் தொட்டி பம்பரத்தின் வடிவில் அமைக்கப்பட்டிருந்தது...!


முற்றும்
....................................................................................................................................................................................

எழுதியவர் : அருணை ஜெயசீலி (17-Jul-15, 5:55 pm)
பார்வை : 357

மேலே