சோழவந்தான் அரசஞ் சண்முகனார் மீது இயற்றிய வாழ்த்துக்கவி

மணிகொண்ட மகுடமுடி வானவர் பணிந்துதுதி
மங்கையாம் அங்க யற்கண்
மாதங்கி கௌமாரி திரிபுராந் தகிதிவ்ய
மரகதாம் பிகை குமாரன்
மந்தரமெ னும்புயப ராக்ரம மகேசுரன்
வச்சிர வடிவே லாயுதன்
மாதுகுஞ் சரவல்லி நாதனெங் குலதெய்வ
மணிசுப்ர மணிய னருளால்

அணிகொண்ட பன்மாட மிகுபாண்டி நகர்க்கூடல்
அப்பதி அடுத்து வையை
அருகோங்கு சோலைசூழ் வளமேவு சோழவந்
தானெனும் ஜனகை யின்கண்
அரனுபய சரணார விந்தமது மறவாத
அரசப்ப வேள் தவத்தில்
அவதரித் தைந்தாண்டி லேயழகர் சாமியால்
அட்சரா ரம்ப மாகி

திணிகொண்ட பன்மூன்று வயதினிற் சீலமிகு
சிவப்பி ரகாசச் சுவாமி
சீடனாய்த் தோன்றியோ ராண்டு நிறைவேறுமுன்
செந்தமிழ்க் கடல் மடுத்து
செப்புதொல் காப்பியப் பாயிர விருத்தியும்
திருவள்ளு வர்நே ரிசை
திருக்குறள் சண்முக விருத்தியினையும் பெருமைசேர்
சித்திரகவி மாலை மாற்றும்

கணிகொண்ட தோர்பஞ்ச தந்திர வெண்பாவொடு
கலம்பகத் துறையி லொருநூல்
கலித்துறையி லோ ரேகபாதநூற் றந்தாதி
காவியங் களை யியற்றி
காசினி மதித்தசோ திடவித்வ பூடணக்கன
கனயோக பர னாகவும்
காணுமர சஞ்சண்மு கச்செம் மலெனும்
கவிவாணன் புகழ் வாழியே!

குறிப்பு:

அ.சண்முகம் பிள்ளை, வையை அருகோங்கு சோலைசூழ் வளமேவு சோழவந்தான்,

ஐந்தாண்டில் அழகர் சாமி தேசிகரிடம் அட்சர ஆரம்பம்,

பதின்மூன்று வயதினில் சீலமிகு.சிவப்பிரகாச சுவாமியின் சீடன்,

ஓராண்டு நிறைவேறுமுன், 14 வயதில் தொல் காப்பியப் பாயிர விருத்தி,

அதன்பின், திருவள்ளுவர் நேரிசை, திருக்குறள் சண்முக விருத்தி,
சித்திரகவி மாலை மாற்று மாலை, பஞ்ச தந்திர வெண்பா,
கலம்பகத் துறையில் ஒருநூல், கலித்துறையில் ஏகபாத நூற்றந்தாதி
என்று பல நூல்களை இளம் வயதிலேயே இயற்றியிருக்கிறார்.

எழுதியவர் : - மதுரை மு.ரா.கந்தசாமிக் கவ (21-Jul-15, 6:26 pm)
பார்வை : 293

மேலே