சீதனம்
மௌனப் பாறைகள்
வெடித்த பொழுதுகளில்
வந்த வார்த்தை நதிகளில்
நச்சரவங்களின் நடமாட்டம்.
பாலினம் பகுத்ததில்
ஆண்பாலினம்
அதிக சத்தத்தில் ஆர்ப்பரிக்கும் சீதனம் வேண்டி .
சீதனத்தின்
விலங்குச் சங்கிலிகளின்
மரபணுக்களை யோசிக்கையில்
ஆணியத்தைதொட
பெண்ணியமே
அழுது புரண்ட காட்சிகள் நிழலாடும்
இனிப்புச் சாறுகளில்
நான் கட்டிய
சீதனப் பந்தல்கள்
எப்போதும் எனக்கு
கசப்பு காய்களையே
காய்த்து கொடுத்தன.
பிரபஞ்ச சலனங்களில் பெயர்ந்து விழுந்த
அண்டத்தில் பிறந்த பிண்டம்
நீயும் நானும்.
நீ சனித்தது போலவே
மனிதக் கருவறையில்நானும் சனித்தேன் .
நீதவழ்ந்த மண்ணில்தான் நானும் தவழ்ந்தேன் .
பால்குறி தவறியதால் பாவமென்ன செய்தேன் .
பாவிமக நான் சீதனத்தோடே அடிமையானேன்.
எம்பால் எண்ணிக்கையில் அதிகம் என்பதால்
வம்பாய் கேட்கிறாயோ வசதிப்படி சீதனம்
ஒருக்கால் எண்ணிக்கையில் உம்பால் உயர்ந்தால்
செருக்கழிந்து செலுத்துவியோ எம்பாலுக்கு சீதனம்.
காட்டு மரங்களிடையே கண்டேன் காதல்
-காணவில்லை சீதனம்
வீட்டு பறவைகள் தொட்டு விலங்கிடையும் காதல்
-வந்ததுண்டோ சீதனம்
ஆதாம் ஏவாளிடையே கண்டேன் காதல்
-அங்குமில்லை சீதனம்
அறிவிருந்தும் கெட்டுப்போன மானுடப் பதரே
-அன்பேதானே சீதனம் .