களிதரும் பொழுதுகள் -1

மாறும் முகடுகள்
நீர்முகத்தின் பருக்களென
கதிரவனின் வெண்ணொளியில்
கண்சிமிட்டி மின்னும்!

விண்சிமிட்டும் மீன்கள்
பகற்பொழுதில் வந்ததென்று
அம்மினுக்களின் அழகினில்
ஆனந்தம் கண்விரிக்கும்!

சேற்றசைக் கெண்டைகள்,
செவ்விதழ் அல்லியின்
இதழ்விளிம்பில் முகம்துருத்தி,
மீசைக் கொடியினை உவப்புடன் ஆட்டும்!!

-அக்கணம்,
அல்லிகள் தாம்ஆட,
நீரரசின் ஆணை இதுவென்றெண்ணி - தன்
கொடியிடை எழிலாய் அசைக்கும்!

நீர்தெளிக்கும் மின்னல்கள்
முக-வரியை மறைக்கும்!
நீள்மரக்கலக் கிழவன் வலைவிரிக்குமழகு,
வரையத்தூண்டும்!!

-மனவுணர்வில்,
மாசறு பொழுதை மலரச்செய்தால்,
மணக்கும் காணொளி -கண்ணில் விரிக்கும்,
கானலறு கணத்தின் கவியை,
உணரும் பொழுதிவை....உன்னதங்கள்!!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அன்புடன்,
சுந்தரேசன் புருஷோத்தமன்

எழுதியவர் : சுந்தரேசன் புருஷோத்தமன் (22-Jul-15, 1:53 pm)
பார்வை : 102

மேலே