காவல் உழவர் களத்தகத்துப் போர்ஏறி - முத்தொள்ளாயிரம் 46
நேரிசை வெண்பா
காவல் உழவர் களத்தகத்துப் போர்ஏறி
நாவலோஓ என்றிசைக்கும் நாளோதை – காவலன்தன்
கொல்யானை மேலிருந்து கூற்றிசைத்தாற் போலுமே
நல்யானைக் கோக்கிள்ளி நாடு! 46
- முத்தொள்ளாயிரம், சோழன்
பொருளுரை:
உலகைக் காப்பாற்றும் உழவர்கள் தம் நெற்களத்தில் உள்ள போரின்மீது ஏறி “நாவலோ” என்று காலை நேரத்தில் ஓசை எழுப்பினால் எப்படியோ அப்படித்தான் இருக்கிறது, நாட்டைக் காப்பாற்றும் மன்னவன் கொல்லும் போர்யானைமேல் (எருமைக் கடா) இருந்துகொண்டு கூற்றுவன் “வாருங்கள்” என்று இசைமுழக்கம் செய்வது. இதுதான் இன்றைய கிள்ளிநாட்டு ஆட்சி நிலைமை.
தன்னிடம் நெல் இருக்கிறது என்று கூவவேண்டிய உழவன் நாவல்பழம் பறிக்க வாருங்கள் என்று கூவும் கொடுமை கிள்ளியின் நாட்டில் இருக்கிறது! காப்பாற்ற வேண்டிய கிள்ளி, கொல்கிறேன் வாருங்கள் என்பவன் போல் உலா வருகிறான்.

