குயிலப் புடிச்சு கூண்டில் அடைச்சு
அதோ அங்கே உயரமா பறக்குறா பார்
அவ தான் என் அக்கா....
அதோ அங்கே மேலே சுத்துறான் பார்
அவன் தான் என் அண்ணன்...
விடிஞ்சதுல இருந்து ராத்திரி வர
நாள் பூரா சுதந்திரமா பறப்பா அவ...
நா கொஞ்சம் ஆசையா சிறகடிச்சாலும்
றெக்கையெல்லாம் இடிச்சு உதிருது...
ராவும் பகலும் கணக்கில்லாம
உற்சாகமா சுத்திட்டே இருப்பான் அவன்...
நா கொஞ்சம் அதிக நேரம் சுத்துனாலும்
றெக்கையெல்லாம் சூடாகி நின்னுடுது...
நெனச்சதெல்லாம் தின்பா அவ..
ஆனாலும் என் மேல பொறாமை படுறா...
விலை அதிகம் நாளும் தினம் தினம்
ஒரே உணவ தின்னு அலுத்துருச்சு நாக்கு....
எல்லாரையும் தனக்குக் கீழ நிக்க வைப்பான் அவன்..
ஆனாலும் என் மேல பொறாமைப் படுறான்...
சொகுசா ஒரே எடத்துல இருந்தாலும்
மூலையில முடங்கித் தவிக்குறேனே நான் ..
அவல யாரும் விலை குடுத்து வாங்கலனாலும்
குடுத்து வெச்ச மகராசி அவ.....
அதிக விலைக்கு வாங்கிட்டு வந்த
ஆயுள் கைதி நானு.....
விலைக்கு மட்டுமே கிடைக்கும்
தன்மானச் சிங்கம் அவன்.....
வீடு தோறும் விலையில்லாப் பொருளாய்க்
கெடக்கும் மானமில்லா ஜென்மம் நானு...
என்னோட திருநாமம் "கூண்டுக் கிளி"
என்ன மாதரியே புலம்பும் உன் பேரு என்ன...?
ஆமா உன்ன மாதரியே வரம் பெற்ற
என்னோட திருநாமம் "மேஜை மின்விசிறி"
அப்போ வா நாம சேர்ந்து பாடுவோம்...
"குயிலப் புடிச்சு கூண்டில் அடைச்சு
கூவச் சொல்லுகிற உலகம்......."
~ தப்தி செல்வராஜ், சாத்தூர்

