கலாமிற்கு என் காணிக்கை
அணு சக்தியின் தந்தையே! - உன்
இறப்பு என்பது விந்தையே!
நொடி பொழுதில் நிகழ்ந்த உம் மரணம்
இடியாய் விழுந்தது தேசமெங்கும்.
துடிப்புமிக்க அறிஞரே! - உம்
துடிப்பும் நின்று போனதே!
சர்வதேசமும் நம் தேசம் காண
சாதித்துக் காட்டிய சாதனையாளன் நீ!
விஞ்ஞானத்தையே வியக்க வைத்த விஞ்ஞானியல்லவோ நீ!
பிரிக்க முடியா அணுவையும்
பிரித்து ஆய்ந்த உன்னை
பிரித்துச் சென்ற எமனும்
பிரியத்தால் அழைத்தானோ?
வல்லரசு எனும் விதையை
விதைத்துச் சென்ற நல்லரசே!
விதை முளைக்கும் வேளையில்
விழி மூடிச் சென்றாயே!
கனவு காணச் சொன்ன நீ
கண்ணை மூடிச் சென்றாயே!
கண்ட கனவு பலிக்கும் நேரத்தில்
காணமல் போனது சரிதானோ?
வறுமை என்பது நிலையல்ல
வளர்ச்சிக்கு அது தடையல்ல - என்பதை
வாழ்ந்து காட்டிய சரித்திரமே! - இன்று
வரலாறாய் போன சத்தியமே!
அணுகுண்டு சோதனையில்
அகிலத்தையும் உலுக்கிய நீ - இன்று
அணுவைக் காட்டிலும் பெருஞ்சேதத்தை
அன்னை நாட்டிற்கு கொடுத்தாயே!
அக்னி சிறகுகளில் பறந்த பறவை - இன்று
அக்னிக்குள் மறைந்ததே!
அவணியெங்கும் வெளிச்சம் பெற
அணையா தீபம் ஆனதே!
தாங்கிக் கொள்ளாத் துயரத்தை
தரணிக்கு கொடுத்திட்டு - நீ
உறங்கிச் சென்றாயோ!
பாரதத் தாயின் மடியில். ........