வெற்றிச் சிரிப்பு
ரிகனும் ராகவியும் காதலர்கள். ஒரே அலுவலகத்தில் வேலை செய்பவர்கள். வழக்கம் போல, நல்ல நட்பாய் ஆரம்பத்து, பின் காதலில் போய் முடிந்தது. இவர்களின் நட்பைப் பற்றி இரு வீட்டாருக்கும் தெரியும். ஆனால் காதலைப் பற்றித் ஒன்றும் தெரியாது! சிறிது காலம் இப்படியே போகட்டும். அப்புறம் சொல்லிக் கொள்ளாலாம் என்று இருவரும் முடிவு கட்டி இருந்தார்கள்.
ஆறு மாதம் அமோகமாய் கழிந்தது.
ராகவியின் நடவடிக்கையில் சிலபல மாற்றங்களைக் கண்டான் ரிகன். அடிக்கடி கோயிலுக்குச் செல்கிறேன், பெற்றோரோடு வெளியே செல்கிறேன் என்று இவனை பாராமுகமாய் ஒதுக்கினாள் அவள். ஆரம்பத்தில் இதைப் பற்றி இவன் பெரிதாய் அலட்டிக் கொள்ளவில்லை என்றாலும் கூட நாளடைவில் சந்தேக விதை இவன் மனதில் விழுந்தது.
இவனின் சந்தேக விதைக்கு நீர் ஊற்றினாற் போல், போன சனிக்கிழமை ஒரு சம்பவம் நடந்தது.
அன்று வழக்கம் போல அவளை சந்திக்க எண்ணி, அவளுக்கு போன் செய்தான். இரு முறை அழைத்தும், ”தொடர்பு எல்லைக்கு வெளியில் அவள் இருப்பதாய்” இவன் அலைபேசி சினுங்கிடவும், அவளின் வீட்டிற்கு போன் செய்தான் ரிகன்.
போனை எடுத்த ராகவியின் அம்மாவிடம் வழக்கமான குசலம் விசாரித்து விட்டு, அவள் எங்கே என வினாவினான்.
“இப்பத் தான் கிளம்பி போனா. உங்க ஆபிஸ்ல இன்னைக்கு எல்லாரும் வெளில ஆவுட்டிங் போறிங்களாமே!”
“ஆ… ஆமா ஆண்ட்டி. எல்லாரும் வந்தாச்சு! அவளுக்காக தான் வெய்ட்டிங். அவ நம்பர்க்கு டிரை பண்ணேன். ரிங் போச்சு. எடுக்கல! அதான் வீட்டுக்கு பண்ணேன். ஸோ, கிளம்பிட்டானா, அவ வந்துடுவா 10 மினிட்ஸ்ல. நான் பாத்துக்குறேன்!” எனக் கூறி போனை வைத்தான்.
”ஏன் இப்டி பண்றா? என்ன பிரச்சன? ஏதுனால நம்மள ஆவாய்ட் பண்றா? நம்மகிட்ட கூட சொல்லாம, வீட்டுல பொய் சொல்லிட்டு போற அளவுக்கு அவளுக்கு அப்படி என்ன வேலை?” யோசிக்க யோசிக்க தலை சுற்ற ஆரம்பித்தது.
இவ்வளவு நடந்தும் அவளிடம் இது பற்றி ஏதும் கேட்க வில்லை. அவளிடம் சகஜமாய் இருக்கவே முயற்சித்தான். ஆனால் இந்த போக்குக்கு காரணம் கண்டுபிடிக்க யோசித்து ஒரு முடிவுக்கு வந்தான்.
அடுத்த முறை அவள் ஏதேனும் சாக்கு சொல்லி ஏங்கேனும் கிளம்பும் போது, அவளை பின்தொடர்ந்து உண்மையை கண்டறியும் துப்பறியும் ஜேம்ஸ் பாண்ட் வேலையைச் செய்வதாய் உறுதி பூண்டான்.
அந்த சமயமும் வந்தது. ஒரு சனிக்கிழமை தன் பெற்றோரோடு சனிஸ்வரன் கோயிலுக்குச் செல்வதாய் சொல்லி விடை பெற்றாள். இவன் இது தான் சமயம் என்று அவளை பின்தொடர்ந்தான். அவள் போய் சேர்ந்த இடம் இவனை குழப்பத்தில் ஆழ்த்தியது. அது ஒரு புற்று நோய் மருத்துவமனை!
துப்பறியும் வேலையில் போதிய பயிற்சி இல்லாததால் அவள் முன்னே அவன் மாட்டிக் கொண்டான்.
”இங்கே, நீ என்ன பண்ற ரிகன்?”
“அது வந்து… அது வந்து… ஆமா. அப்பா, அம்மாவோட கோயிலுக்கு போறதா சொல்லிட்டு நீ என்ன பண்ற இங்கே?” எதிர்க் கேள்வி கேட்டான்.
“என் பெரியப்பா பையன இங்க தான் அட்மிட் பண்ணிருக்காங்க!”
“ஏன் அவருக்கு என்ன?”
“அவனுக்கு லங் கேன்சர். ஹி ஸ் கவுண்டிங் ஹிஸ் டேஸ்!”
”ம் ஒ.கே. இதுக்கு ஏன் நீ என்ட பொய் சொல்லிட்டு வரனும்? என்ட சொல்லிட்டே வந்துருக்கலாம்ல!”
“இல்ல டா! ஒங்கிட்ட சொல்லனும் தான் நினைச்சேன். பட் நீ எங்க வீட்ல சொல்லிட்டனா பெரிய பிரச்சன ஆயிடும்.”
”என்ன பிரச்சன ஆகும்? பெரியப்பா பையன ஹாஸ்பிட்டல போய் பாத்தா அவங்க என்ன சொல்ல போறாங்க?”
“எங்க பேமிலுக்கும் அவங்க பேமிலுக்கும் சண்ட. மூணு நாலு வருசமா பேச்சுவார்த்தையே இல்ல! ஆனா நானும் அவனும் அப்படி இல்ல. ஒண்ணா பொறக்காதது ஒன்னு தான் குறை. என்மேல அவ்வளவு பாசம். நான் இவன பாக்க வர்றது வீட்டுக்கு தெரிஞ்சா பெரிய பிரச்சன ஆயிடும். நீ வேற எங்க வீட்டுக்கு குளோஸா இருக்கியா! நீ பாட்டுக்கு பேச்சு வாக்குல வீட்டில சொல்லிட்டனா! அதான் உங்கிட்ட கூட சொல்லாமா மறச்சுடேன். சாரி டா”
”ம்ம் ஒ.கே. எதுனால இவருக்கு இப்டி ஆச்சு?”
“வேற என்ன? அந்த பாழாப் போன சிகரெட் சுமோக்கிங் தான்! எவ்வளவு தடவ சொல்லிருப்பேன் தெரியுமா? கேட்கவே இல்ல. இப்ப ஃபில் பண்ணி அழறான்! நிலம கை மீறி போனதுக்கு அப்பறம் நாம என்ன பண்றது? இவன பண்ணத நினைச்சா ஒரு சமயம் கோபமா வருது. இவன் இப்டி இருக்குறத பாத்தா வேதனையாவும் இருக்கு!”
வார்ட் பாய் “விசிட்டிங் ஹவர்ஸ் முடிஞ்சுது எல்லாரும் கிளம்புங்க” என கத்தவும், ”சரி வா போலாம்.” என்று ரிகனை கைப் பிடித்து கிளம்பினாள் ராகவி.
ஒரு மாதம் கழிந்தது.
ராகவியின் தோழி ரேகா ராகவியிடம் “என்னடி உன் ஆளு ரிகன் வழிக்கு வந்துட்டனா?”
“ம்ம். அன்னக்கு கேன்சர் ஹாஸ்பிட்டல் போய்ட்டு வந்ததுல இருந்து டோட்டல் சேஞ்ச்!”
“அது எப்படி டி அவன் செயின் சுமோக்கர்கிற மேட்டர் அவன் கூட ரொம்ப வருசமா இருக்குற பிரண்ட்ஸ்க்கே தெரியாதப்ப நீ எப்படி கண்டுப்பிடிச்சே?!”
“அதான் மா பொண்ணுக நம்மளோட ஸ்மார்ட்னெஸ். அவன் கூட நான் இருக்குறப்பலாம், மைல்டா ஒரு சிகரெட் ஸ்மெல் வர்த நான் நோட்டிஸ் பண்ணேன். அது ரொம்ப உன்னிப்பா கவனிச்சா தான் தெரியும். அத மறைக்க தான் அவன் அடிக்கடி சுயிங் கம் மெல்றானு கண்டுபிடிச்சேன்.”
“உடனே நீ அவன்ட கேட்டுருக்கலாம்ல! எனக்கு இது புடிக்காது இத விட்டுனு சொல்லிருக்கலாம்ல!”
“அய்யோ அது ரொம்ப டேஞ்சரஸான விஷயம். பசங்கட்ட அவங்களுக்கு ரொம்ப புடிச்சத நமக்கு புடிக்கலனு சொன்ன சண்ட தான் வரும்! நம்ம முன்னாடி நமக்காக விட்ட மாறி காமிச்சுகிட்டாலும் நாம இல்லாதப்ப அத செஞ்சுட்டே தான் இருப்பாங்க! அதான் அவனுக்கு இதோட பின்விளைவுகள காட்டினேன். பையன் ஆடிப் போய் நிறுத்திட்டான்.” என்று சொல்லி வெற்றிச் சிரிப்பு சிரித்தாள் ராகவி.