என்ன மா இப்படி பண்றிங்களே மா

ஹரி சென்னை செல்லும் விரைவுப் பேருந்தில் சலிப்புடன் அமர்ந்திருந்தான். அவன் எப்பொழுதும் தன் ஊரிலிருந்து இரயிலில் சென்னைக்கு செல்வது தான் வழக்கம். இம்முறை ஏனோ அவனுக்கு இரயில் பயணச்சிட்டு கிடைக்கவில்லை. ”அய்யோ 13 மணி நேரம் உக்காந்தே போனுமே!” என்னும் நினைப்பே அவனது சலிப்புக்கு காரணம்.

”எப்போதும் கிடைக்கும் இரயில் பயணச்சிட்டு இந்த முறை ஏன் கிடைக்கவில்லை?” என்னும் நினைப்பே அவனை அரித்து எடுத்தது. ஏதோ வினோதமாய் தனக்கு நடக்க போவதாய் அவனது உள்ளுணர்வு இம்சித்தது.

பேருந்து கிளம்பியது. அவன் மனம் இப்படி அலை பாய்ந்தாலும், உடல் அசதியால் சிறிது நேரத்தில் தூங்கிப் போனான்.

செங்கல்பட்டு சுங்கச்சாவடி நெருங்கிய போது, அவனுக்கு சட்டென்று முழிப்பு வந்தது. அங்கே நாலு பயணிகள் தான் வந்த வண்டியில் ஏறுவதை கவனித்தான். ஆனால் அதை லட்சியம் செய்யவில்லை. இது இயல்பு தான் என்பதால் அவன் அதைக் கண்டு கொள்ளவில்லை. தான் வண்டலூரில் இறங்க வேண்டும் என்பதால், அதை கருத்தில் கொண்டு, வெளியே பார்க்கலாயினான்.

கூடுவாஞ்சேரி வந்ததும் தன் பையை தூக்கி கொண்டு பேருந்தின் முன் பகுதிக்கு நடக்கலானான்.
வெகு முன்னே ஒரு பெண் நின்று கொண்டு இருந்தாள். அவளைத் தாண்டி செல்லும் போது, பேருந்து ஒட்டுனர் பிரேக் அடித்தார். அதில் நிலை தடுமாறி அப்பெண்ணின் காலை மிதித்து விட்டான். அவள் உடனே “டேய்!” என்று அலறி அவன் முதுகில் இரண்டடி அடித்தாள்.

இதை முன்னே அறை தூக்கத்தோடு தங்கள் இருக்கையில் உட்கார்ந்திருந்த ஆண்கள் அவன் அப்பெண்ணிடம் தப்பாக நடக்க முயலுகிறான் என்றெண்ணி அவனை அடிக்க தொடங்கினர்.

”நிறுத்துங்க” என்று அலறினாள் அப்பெண். மேலும் “அவன ஏன் அடிக்கிறிங்க?” என்றாள்.

“என்ன மா அவன் உன்கிட்ட தப்பா நடந்துக்க பாத்தான் அதுனால தான் அடிச்சோம்”

“அவன் என்கிட்ட தப்பா நடந்துக்க பாத்தான்னு யாரு உங்கள்ட்ட சொன்னா?”

“நீ தானே மா அவன டேய்னு காத்தி அடிக்க ஆரம்பிச்ச! அதான் நாங்களும் அடிச்சோம்!”

“ஏங்க! நான் அவன அடிச்சா அவன் என்கிட்ட தப்பா நடந்துக்க பாத்தான்னு அர்த்தமா? அவன் என் ஸ்கூல்ஃப்ரண்ட் ஹரி! ரொம்ப நாள் கழிச்சு அவனப் பாத்த எக்சைட்மெண்ட்ல நான் கத்தி அவன அடிச்சேன். அதுக்குள்ள அவன நீங்க பாட்டுக்கு அடிக்குறிங்க?”

இதை கேட்ட உடன் ஹரி நிமிர்ந்து அவளைப் பார்த்தான். ஆம் அவள் அவனின் பள்ளித் தோழி சுதா!
உடனே அவனை சுதாவும் மற்றவர்களும் தூக்கி விட்டனர்.

அவன் எழுந்து நிற்கவும், அவனது அலைபேசி மணி “என்ன மா இப்படி பண்றிங்களே மா!” என ஒலிக்கவும் சரியாக இருந்தது!

இதைக் கேட்ட அனைவரும் நகைக்க தொடங்கினர். ஹரியோ அசடு வழிந்தான்!

எழுதியவர் : மனதில் பட்டவை சத்யா (29-Jul-15, 2:13 am)
பார்வை : 2152

மேலே