அக்னிபுத்திரன் - குமரேசன் கிருஷ்ணன்
மரணத்தை வென்ற மாமனிதரே...
ராமேஸ்வரக் கடற்கரையின்
மண்ணில் அமர்ந்தபடி
விண்ணை அளந்தவர் நீவிர்...
விண்வெளியும் அறியவில்லையன்று
வான்வெளியைக் கடந்தும்
வாழ்பவர் நீவிரென்று...!
அடுக்கடுக்காய்
அக்னிகளை ஏவிவிட்டு
அமைதியாய் புன்னகைத்தபடி
அக்னிசிறகுகள் நீட்டி
அகிலத்தை அளந்தவரே...
அணுகுண்டுகளை பொக்ரானில் இயக்கி
அரங்கில் இந்தியாவை
அசைக்கமுடியா சக்தியாக்கிவிட்டு
அமைதிப்புறாவை
அகிலமெங்கும் தூவியவரே...
"இஸ்லாமியரான நான்
இந்துக்களின் புனிதமான குத்துவிளக்கை
கிறித்தவர்களின் அடையாளமான
மெழுகுவர்த்தி ஏந்தி ஏற்றுகிறேன்"
இந்த ஒற்றுமையுணர்வே
இந்தியாவை ஒளிரச்செய்யுமென்று
மத நல்லிணக்கத்தை
மனதுள் விதைத்தவரே...
விழித்துக்கொண்டு கனவுகாண்
விடியல்கள் உனக்கென்று
இளைய சமுதாயத்தின்
இதயத்துள் புதுரத்தம்
இறக்கும்வரை புகுத்தியவரே...
ஒருவனின் பிறப்பு எப்படியோ
அவனின் இறப்பு ...
சரித்திரமாகவேண்டுமென்றபடியே
நீவீரின்று..
சரித்திரமாகிவிட்டீர்
உம்மை வாசித்தபடி
விழிகளில் நீர்சுமந்து
நிற்கின்றோம் நாங்கள்...
இந்தியாவின் அக்னிபுத்திரனே
இறைவனின் மடியில்
இனிதே நீர் உறங்கினாலும்
நீவீர்
ஏற்றிவைத்த தீச்சுடர்
என்றும் எரிந்துகொண்டிருக்கும்
எங்கள் மனதுள்...
அதுவொரு நாள்
அசைக்க முடியாதபடி
அகிலத்தின் வல்லரசாய்
ஆக்கும் இந்தியாவை...
அன்று
உலகின் சூத்திரங்களை
ஒவ்வொரு இந்தியனும்
எழுதிக்கொண்டிருப்பான்
உம் நினைவுகள் சுமந்து...!
-------------------------------------------------------------------
குமரேசன் கிருஷ்ணன்