short story
ஜெயில்
By பூவனூர் SPS ராஜாராமன்
குற்றம் செய்தவரே தன்னுடைய குற்றத்தை ஒப்புக்கொண்டுவிட்டதால் குற்றம் சாட்டப்பட்ட தணிகாசலம் குற்றவாளி எனத் தீர்மானித்து இந்த நீதிமன்றம் அவருக்கு அவர் வயதையும் சமுதாயத்தில் அவருக்கு இருக்கும் நற்பெயரையும் மனதிற்கொண்டு இரண்டு ஆண்டு சிறை.தண்டனை விதித்து தீர்ப்பளிக்கிறது’
நீதிரயசர் தனது தீர்ப்பை வாசித்து முடித்ததும் கோர்ட் கலைந்து தணிகாசலத்தை காவலர்கள் சிறைக்கு அழைத்துச் செல்லும் வழியில் அவரது மகனும் மருமகளும் நின்று கொண்டிருக்கிறார்கள்.
‘சார், எங்கப்பாகிட்ட நாங்க ரெண்டு நிமிஷம் தனியா பேசணும். தயவு செய்து அனுமதிக்கணும் சார்!’
‘சரி, சீக்கிரம் பேசிட்டுப் போங்க’ காவலர் இருவரும் சிறிது தள்ளி நிற்கிறார்கள்.
‘என்னப்பா காரை நான் மோதினதால அவரு இறந்து போய்ட்டாரு. ஆனா நீங்க அனாவசியமா அந்தப் பழியை ஏத்துகிட்டீங்களே?’
‘ரமேஷ்! என்னோட காலம் முடிஞ்சு போச்சுப்பா. உனக்கு அப்படியில்லைப்பா, லைஃப்ல இன்னும் எவ்வளவோ பாக்க வேண்டியிருக்கு.’
‘இருந்தாலும்....’
‘இருப்பா சொல்லி முடிச்சிடறேன். என்னோட சொத்தையெல்லாம் எழுதி வாங்கிகிட்டப்புறம் நீ என்னை கண்டுக்கறதேயில்லை. இருக்கேனா செத்தேனான்னு கூட நீ பாக்கறதில்லை. ஒம்பொண்டாட்டியைப் பத்தி கேக்கவே வேண்டாம். என்னை ஒரு மனுஷனாக் கூட அவ மதிக்கறதில்லை, அப்புறந்தான மாமனாரா மதிக்கறத்துக்கு”
‘மாமா!:
‘இரும்மா, என்னால செய்யமுடியாத வேலையெல்லாம் கூட நீ கொடுத்து நான் செஞ்சப்புறமும் நீ வேளாவேளைக்கு எனக்கு சோறு போட்டதில்லை. ஆனா இங்க அப்படியில்லை. நான் கேள்விப்பட்டவரையில் என்னால செய்யமுடியற வேலையை மட்டுந்தான் கொடுப்பாங்க, வேளாவேளைக்கு சாப்பாடு போட்ருவாங்க. அதனாலதான் அந்த ஜெயிலுலுக்கு இந்த ஜெயிலே பரவாயில்லைன்னுட்டு செய்யாத குத்தத்தை செஞ்சதா சொல்லி இங்க வந்துட்டேன்’
பதிலை எதிர்பார்க்காமல் காவலர்களை நோக்கி நடந்தவரை விக்கித்துப் போய் பார்த்துக் கொண்டிருந்தனர் இருவரும்.
(S. RAJARAMAN, FLAT NO. 3, CHANDRA FLATS, 63, NAICKAMAR ST, WEST MAMBALAM, CHENNAI -600 033 - Ph: 24893678 CELL: 9444013699)