பயணம் தொடங்கியது
மணி பகல் 11 இருக்கும்...வேண்டா வெறுப்பாக அலுவலகத்துக்கு வீட்டிலிருந்து தனது பைக்'கில் புறப்பட ஆரம்பித்தான் சுந்தர். ஜூன் மாத வெயில் வெப்பத்தின் உக்கிரத்தைக் காட்டிக்கொண்டிருந்தது. அலுவலகத்தை அடைந்ததும் வருகைப்பதிவேட்டில் கையெழுத்திடும்போது "இந்த கம்பெனி'யிலதான் குப்பை கொட்ட வேண்டியிருக்கு" என தனக்குள்ளேயே புலம்பினான்.
பொறியியல் பட்டம் பெற்றதும் சாப்ட்வேர் இஞ்சினியராக இவனுக்கு கிடைத்த முதல் வேலை இது. அதி புத்திசாலி யான சுந்தர் கிட்டத்தட்ட மூன்று வருடங்களாக இந்த ஐ.டி கம்பெனி'யில் வேலை பார்த்து வருகிறான். திறம்பட பணிபுரிபவன். முதல் இருண்டு வருடங்கள் இவனுக்கு மேலாளராக இருந்த விவேக், இவனை நல்லபடியாக பார்த்துகொண்டார். பல வேலை நுணுக்கங்களைக் கற்று கொடுத்தார். தேவைப்படும்போது ஊக்கம் மற்றும் அறிவுரைகளையும் தந்தார். அதிக நேரம் வேலை செய்யுமாறு வற்புறுத்தாமல் சரி என வரையறுக்கப்பட்டுள்ள நேரத்திற்குள் இவனிடம் வேலையை வாங்கிக்கொள்வார். மேலிடத்தில் பேசி, ஆண்டுக்கொருமுறை நல்ல ஊதிய உயர்வையும் இவனுக்குப் பெற்றுத் தந்தார். சுந்தருக்கு விவேக்கின் மீது அன்பு கலந்த மரியாதை இருந்து வந்தது. மிகவும் சிறப்பாக தான் செயல்படுவதால், இரண்டு ஆண்டுகள் கம்பெனி'யில் வேலை பார்த்து முடிந்தவுடன் "உத்தியோக உயர்வு தரமுடியுமா?" என்று அவரிடம் கேட்டிருந்தான். அவரும் அதைப் பரிசீலித்து மேலிடத்தில் தனது கருத்தைத் தெரிவித்தார். ஆறு மாதம் கழித்து நடைபெற இருக்கின்ற திறன் ஆய்விற்குப்பின் கண்டிப்பாக சுந்தருக்கு உத்தியோக உயர்வைத் தரலாம் என்று அவருக்கு பதில் வந்தது. அவர் எவ்வளவோ முயற்சி செய்தும் உடனடியாக வாங்கித்தர இயலவில்லை. கண்டிப்பாக ஆறு மாதத்திற்குப்பின் வாங்கி தருவதாக அவனிடம் உறுதி அளித்தார்.
திடீரென ஒரு நாள் சுந்தரை தனது அறைக்கு அழைத்த விவேக், "எனக்கு வேறு ஒரு கம்பெனி'யில் நல்ல வேலை ஒன்று கிடைத்துவிட்டது. அங்கு சேரப்போகுறேன்.. இந்த மாதம் முப்பதாம் தேதிதான் எனக்கு இங்கு கடைசி நாள்" என்று அவனுக்கு அதிர்ச்சி அளித்தார். மேலும், ஆறு மாதம் கழித்து கண்டிப்பாக அவனுக்கு மேலிடம் உத்தியோக உயர்வு தரும் என்று நம்பிக்கையூட்டினார்.
அடுத்த மாதம் புதிதாய் ஒரு மேலாளரை , சுந்தரை உள்ளடக்கிய அணிக்கு அறிவித்தார்கள். அவர் பெயர் சரவணன். சில மாதங்கள் கடந்தன. சுந்தருக்கு சரவணனை சுத்தமாக பிடிக்கவில்லை. அதிக நேரம் வேலை வாங்குவது, அடிக்கடி குறை சொல்வது, அங்கிகாரம் தராமல் இருப்பது, முன்னின்று வழிநடத்தாமை என்று சரவணனின் குறைகளைக் கண்டு மிகவும் வெறுப்புடனே வேலை பார்த்து வந்தான். இது போதாமல்,
அவனின் உத்தியோக உயர்வையும் எந்த காரணமும் இன்றி மேலிடம் இன்னும் சிலமாதங்களுக்கு தள்ளிபோட்டது. அதை உடனே பெற்றுத்தர சரவணன் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இதனால் கோபத்தின் உச்சிக்கே சென்றான் சுந்தர். இனியும் இங்கே வேலை பார்க்ககூடாது. வேறு இடத்திற்கு செல்லவேண்டியதுதான் என முடிவு எடுத்தான்.
மிகவும் கடினப்பட்டு பயிற்சி செய்து நேர்க்காணல்'லுக்கு தயார் ஆனான். இருக்கும் வேலையிலும், இதற்கு முன் இல்லாத அளவுக்கு படு சாமர்த்தியமாக திறம்பட செயல்பட்டான். சரவணன் இவனது திறமையைக் கண்டு வியந்தாலும் கண்டும் காணாமல் இருந்தார். சுந்தர் பல கம்பெனி'களில் நேர்க்காணல்'லுக்கு சென்றான். சில நிறுவனங்கள் இவன் கேட்ட சம்பளம் தர மறுத்தன . ஒருசில நிறுவங்கள் இவனை சில காரணங்களுக்காக தேர்ந்தெடுக்கவில்லை. சில நிறுவங்கள் இதே பதவியில் வேலை தர ஆர்வம் காட்டின. ஆனால் இவன் பதவி உயர்வுடன் வேலை எதிர்பார்த்தான். இரண்டு மாதங்கள் ஓடின. எதிர்பார்த்த எந்த வேலையும கிடைக்கவில்லை. விரக்தியின் உச்சிக்குச் சென்றுவிட்டான். தொடர்ச்சியாக முயற்சித்தும் புது வேலை கிடைக்காததால், இனி வேலை தேடவேண்டாம் என வெறுப்பில் முடிவுக்கு வந்தான். தற்போதுள்ள கம்பெனி'யிலும் செய்யும் வேலையில் ஈடுபாடு இல்லாமல் இருந்தான். திறம்பட வேலை செய்யாமல் சரவணனிடம் அதிகமான குறை விமர்சனங்களை பெற்றான்.
இந்த காரணங்கள்தான் இன்று "இந்த கம்பெனி'யிலதான் குப்பை கொட்ட வேண்டியிருக்கு" என புலம்பும் அளவுக்கு அவனை இழுத்துச் சென்றது.
மணி பிற்பகல் நான்கு இருக்கும். தன் அறைக்கு வருமாறு கடுங்கோபத்துடன் சரவணன் சுந்தரை அழைத்தார்.
வேலையில் சுந்தர் செய்த ஒரு தவறை விவரித்தார். அவன் பெரிய பிழை செய்தான் என்றால் இதுவே முதன்முறை. இருப்பினும், சகட்டுமேனிக்கு அவனை வன்மையாக திட்டினார். இவன் செய்த பிழையை திருத்தி வேலையை சரி செய்ய இன்னும் கிட்டத்தட்ட 5 மணி நேரம் பிடிக்கும் என்பதால் சரவணன் திட்டுவதை நிறுத்துவதாய் இல்லை. "சாரி சரவணன்! இன்னிக்கு நைட்'குள்ள ரிவைஸ் பண்ணி தரேன்" அப்டின்னு சொல்லி அறையை விட்டு வெளியேறினான். சொன்னதுபோல் இரவு 11:30 மணிக்கு வேலையை சரி செய்து வீட்டுக்கு கிளம்பினான்.
தான் செய்த பிழையை எண்ணி அவனுக்கு அன்றிரவு தூக்கம் வரவில்லை. நடந்தனவற்றை பின்னோக்கி பார்க்க ஆரம்பித்தான்.
"மிகவும் திறம்பட செயல்பட்டுவந்தேன். புது வேலை பெற வேண்டும் என்ற இலக்கு கொண்ட பிறகு, இன்னும் பல மடங்கு திறம்பட செயல்பட ஆரம்பித்தேன்." என்று தனக்குள்ளே புலம்பினான். அப்போது தான் அவனுக்கு எங்கேயோ எப்பொழுதோ படித்த ஒரு பொன்மொழி நினைவுக்கு வந்தது.. "இலக்கை அடைந்தால்தான் வெற்றி என்பது அல்ல, எத்தனை தோல்விகள் வந்தாலும் இலக்கை அடைய பயணிப்பதே மிகப்பெரிய வெற்றி" என்பதை உணர்ந்தான். உடனே, வேலை நேர்க்காணல்'லுக்கு மீண்டும் பயிற்சி செய்ய ஆரம்பித்தான். இருக்கின்ற வேலையையும் திறம்பட செய்ய வேண்டும் என்று உறுதி பூண்டான்.