கா,,,,,,என்னும் நீ யார்

ஆம்; நீ யார்? உன் உண்மை என்ன?
என்ன செய்ய துடிக்கிறாய்?
புரியாமல் உழலுதே உலகம்.

அழகான தேவதையாய் தெரிகிறாய்.
அரக்க குண ராட்சசியாயும் மாறுகிறாய்.

பட்டாம்பூச்சி ஆக்க வருகிறாய்.
விட்டில்பூச்சி ஆக்கியும் விடுகிறாய்.

கிட்டே வந்தால் எட்டி மிதிக்கிறாய்.
எட்டிச் சென்றால் அழுது புலம்புகிறாய்.

நண்பனை போலே நலம் விசாரிக்கிறாய்.
எதிரியாய் மாறி மண்டை உடைக்கிறாய்.

அலையாய் வந்து காலை நனைக்கிறாய்.
ஆழிப் பேரலை போலே உள்ளிழுக்கிறாய்.

தீபம் போலே அழகாய் ஒளிர்கிறாய்.
குடிசை மேலே தீயாய் எரிக்கிறாய்.

பட்டம் பறக்கவிட கற்றுத் தருகிறாய்.
பறக்கையில் நூலை அறுக்கிறாய்.

அணுக்களின் விளைவென பேசிக்கொண்டே,
ஆன்மாவின் அறிவினை அசைக்கிறாய்.

வேலையாள் போல உள்வந்து நுழைகிறாய்.
எஜமானன் ஆகி நீயும் மிரட்டுகிறாய்.

ஆண்டவன் போலே உணரச் சொல்கிறாய்.
சாத்தானாக கொன்றிடத் துடிக்கிறாய்.

கா-ற்றை போல் நீ இருப்பதனால்,
சண்டையிட முடியவில்லை.
கா-தல் போலே இருப்பதனால்,
உயிரில் பிரிக்க இயலவில்லை.
கா-க்கும் கடவுள் ஈடாக,
உன்னை எதிர்த்து பலனுமில்லை.
கா-மமே ஆகையால் கேட்கின்றேன்,
நீ யார்?உன் நோக்கம் என்ன?

எழுதியவர் : செந்ஜென் (10-Aug-15, 1:54 am)
பார்வை : 139

மேலே