மரத்தின் மரணம்

பல ஆண்டுகளாய் தன் வீட்டில் நின்ற மரத்தை வெட்டத்துணிந்த மனிதனோடு மரம் பேசும் கடைசி வார்த்தைகள்.
----------------------------------------

★நான் உன் மரம்.
மரமாகவே இருந்துவிடுவதில்லை..
மாறாக ..
மரமாகி நிற்கிறேன்.!

★உன் உறக்கத்தின் மீது..
பூக்களைக்கூட நான்..
உதிர்த்ததில்லை
நீயோ ..
ஆயுதங்களோடு..
நிற்கிறாய்..
என் நிழலில்.!

★உனக்குத்தெரியுமா.?
உனக்குத்தொட்டில்
கட்டியது என்கிளையில்தானென்று.!

★நீ..
உன் தாய்மடி
உறங்குகையில்
உன் தாய் உறங்க..
மடி தந்தவன் நான்.!

★என் கிளைகளில்..
ஆடிக்கொண்டே இருக்கும்..
அந்த அணிலுக்கும்..
காற்றுக்கும்..
என்ன சொல்லப்போகிறாய்.?

★இரண்டுமே..
கொய்து விளையாடும்..
என்னிலிருந்து..
ஒன்று காய்ந்த இலையையும்..
மற்றொன்று கனியையும்..

★அடை மழை..
அன்று உனக்குக்குடையானேன்..
கிளை தனித்து ஊஞ்சலானேன்..
இன்று அத்துணை"யும் மறந்து
ஆயுதத்தை கூர்தீட்டிக்கொண்டு..
இருக்கிறாய்..!

★அமரவரும் பறவைகள்..
என்னைக்காணாது..
உன் வீட்டுக்கூரையில்..
எச்சமிட்டுப்போகும்..!

★இனி பறவையும்..
மழையும் வரப்போவதில்லை..
உன் வீட்டுக்கு..!

★இப்போதும் ..
கிழக்குப்பார்த்த கிளையில்..
என்னில் இருப்பதை விரும்பிய..
பறவை ஒன்று..
கூடு கட்டி..
குஞ்சுக்கு இரைதேடி சென்றிருக்கிறது.!
நீ..உன்னில் இறை தேட மறந்துவிட்டாய்..!

★உன்
குழந்தையிடம் நான் பேச வைத்திருந்த..
கதைகள் யாவும் ..
சிறகடித்துப்பறந்துவிட்டன.!

★நான் மண்ணில் சாய்கையில்..
உன் மகனிடம் சொல்..
அவன் தொட்டிலுக்கு..
உத்திரமாகும்..
உத்திரவாதத்தோடு..
செத்தேன் என்று.!

எழுதியவர் : நிலாகண்ணன் (14-Aug-15, 4:48 pm)
Tanglish : maratthin maranam
பார்வை : 963

மேலே