ஒதுங்கும் விலங்கே மனிதன்

மனிதன் ஒரு விலங்கு;
வம்பு தும்புக்கு போகாமல் வாய் சண்டையை விடாமல்
பாய்வது போல் பாசாங்கு செய்தே பழகி விட்டான்.

அவன் தான் சமூகம்
சுற்றுசூழல் பற்றி கவலை இல்லை, ஆனாலும்
சூரியன் சந்திரன் பிடிக்கும்; வெயிலையும் மழையையும்
ஏற்று கொள்வான், வேடிக்கை மட்டுமே அவனுக்கு வாடிக்கை

அவலங்களை ஏற்பான் விதியே என நோவான்
அவனுக்கு புயலும் ஒன்று தான் பூகம்பமும் ஒன்று தான்
கலவரமும் ஒன்று தான் கண்காட்சியும் ஒன்று தான்
வன்முறை வந்தால் எனக்கேன் வம்பு என ஒதுங்கி செல்வான்.

கனவு அவனது இலக்கு, கற்பனை தான் கருத்து
மௌனமே மொழி; மயக்கமே விருப்பம்
சமூக சிற்பி ஆனால் செதுக்க விருப்பமில்லை
உளி விரும்பினாலும் ஒன்றும் நடக்காது

சிரித்தால் சிரிப்பான் அழுதால் அழுவான்
ஆண்டவன் அவனுக்கு பிடிக்கும்,
வேண்டுவது கிடைக்கும் வரை;
இல்லையெனில் பிடிக்காது.

வண்ணம் காணுவான், வறுமையை விரும்பான்
சிரிக்க தெரிந்தவன், சிந்திப்பான்
உண்மையை நிந்திப்பான்
உணர்வு ஊன் ஆக்கி போவான்

விலங்குக்கும் மனிதனுக்கும்
ஒரே ஒரு வித்தியாசம்

சிரிப்பு தான்,
எனவே சிரிப்போம்
அவ்வளவு தான்
அதற்கு மேல் ஒன்றுமே முடியாது
மனிதனால்.

எழுதியவர் : செல்வமணி (16-Aug-15, 10:57 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 79

மேலே