நாளை முதல் குடிக்க மாட்டேன்…

"குடி குடியை கெடுக்கும். குடி பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும்னு பாட்டில்லையே போட்டிருந்தாலும் அத கொஞ்சம் கூட சட்டை பண்ணாம குடிச்சி குடிச்சி தங்கள தாங்களே அழிச்சிக்குறாங்க நம்ம ஜனங்க" என்று சொல்லி தன் பேச்சை தொடங்கினார் அந்த காட்சியின் தலைவர்.

"பள்ளி கூடம் போயி புத்தகத்த சுமக்க வேண்டிய வயசுல சில பிஞ்சு குழந்தைங்க கையில சரக்க கொடுத்து குடிக்க வெச்சிருக்கிற மனசாட்சியில்லாத செயல் நம்ம நாட்டுல தான் நடந்தேறியிருக்கு" கோபம் கொப்பலித்தது அவரது வார்த்தைகளில்.

"தெருவுக்கு ஒரு கோவில் இருக்கனும்னு சொன்னாங்க அந்த காலத்து பெரியவங்க. 2 கி.மீ. சுற்றளவுக்கு ஒரு பள்ளிக்கூடம் ஒரு மருத்துவமனை இருக்கனும்னு கேட்டாங்க சில பேரு. ஆனா அதை எல்லாம் பண்ணாம இங்க மூலைக்கு ஒரு மதுக்கடை துறந்து வெச்சிருக்காங்க" அவர் பேச பேச மக்கள் கூட்டம் பெருகிக்கொண்டே போனது.

"இன்னும் எத்தனை நாளைக்கு இந்த மாதிரி குடிச்சி குடிச்சே நம்மள அழிச்சிக்க போறோம். நமக்குனு ஒரு குடும்பம் இருக்கு வாழ்க்கை இருக்குனு என்னைக்கு நாம உணர போறோம்னு தெரியல" அவர் இந்த வார்த்தைகளை சொன்ன போது மாடசாமிக்கு சுருக்கென்று இருந்தது.

மேடையில் பேசி கொண்டிருந்த தலைவரின் உண்மையான தொண்டன் என்று சொல்லி விட முடியாது மாடசாமியை. இந்த காட்சியின் உறுப்பினரும் இல்லை அவன். நாள் தோறும் கூலி வேலை செய்து பிழைக்கும் சாதாரண குடிமகன் அவன்.

அந்த கூட்டத்திற்கு அவனை அழைத்து வந்தது அவனது நண்பன் முருகேசன் தான். அவனும் அந்த காட்சியின் தொண்டன் அல்ல. வேறொருவரால் அவன் அழைக்க பட்டான். அவனால் இவனும் அங்கு வந்து சேர்ந்தான்.

தினமும் உழைத்து கலைத்து வாங்கும் கூலியை வீட்டிற்கு மொத்தமாய் கொண்டு சேர்த்துவிடும் கெட்ட பழக்கம் மாடசாமியிடம் இல்லை. நாட்டின் நலன் கருதி அவனது கூலியின் ஒரு பகுதியை அவன் வேலை செய்யும் இடத்திற்கு மிக அருகில் உள்ள அந்த மதுக்கடையில் செலுத்திவிடுவான்.

நேற்று வரை அந்த செயலை நினைத்து அவன் வருத்தப்பட்டதில்லை. இன்று இந்த கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்த அந்த தலைவரின் வார்த்தைகள் அவனை கவலை கொள்ள செய்தது. இனி இந்த குடி பழக்கத்தை விட்டு விட வேண்டும் என்று முடிவு செய்து கொண்டான்.

அவன் அந்த முடிவை எடுக்கவும் கூட்டம் முடியவும் சரியாய் இருந்தது. முருகேசன் அவனை நோக்கி வந்தான். "மாடசாமி. வா. கூட்டம் முடிந்து விட்டது. நம் வேலையை பார்ப்போம்" அவனை நினைவிற்கு கொண்டு வந்தது அந்த குரல்.

முருகேசன் முன் நடக்க மாடசாமி பின் தொடர்ந்தான். இந்த காட்சிக்கும் கூட்டத்திற்க்கும் சற்றும் சம்பந்தம் இல்லாத அந்த ஏழை மாடசாமியும் முருகேசனும் இதில் கலந்து கொண்டது ஒற்றை காரணத்திற்காக தான்.

"கூட்டத்தில கலந்துகிட்டவங்க மட்டும் வரிசையில் வந்து வாங்கிக்கோங்க பா" குரல் எழுப்பியவரை சட்டை செய்யாமல் சண்டை போட்டபடி கூட்டத்திற்கு இடையில் தங்கள் கைகளை விட்டு அதை வாங்கி வந்து ஒரு ஓரமாய் அமர்ந்தனர் இருவரும்.

"முருகேசா. நாலைல இருந்து நாம சரக்கடிக்கவே கூடாதுடா" என்று சொல்லியபடி கூட்டத்தில் கலந்து கொண்டதற்காக கொடுத்த அந்த க்வார்டர் பாட்டிலை குடிக்க தொடங்கினான் குடிமகன் மாடசாமி.

எழுதியவர் : தண்டபாணி @ கவிபாலன் (17-Aug-15, 3:04 pm)
சேர்த்தது : L.S.Dhandapani
பார்வை : 264

மேலே