வறுமையின் பொம்மைகள்

“பொம்ம வாங்குங்க புள்ளைங்களா…………. பொம்ம வாங்குங்க!
சாவி கொடுத்தா ஆடும் பொம்ம இருக்கு. தூக்கிப் பிடிச்சா பாடும் பொம்ம இருக்கு.
ஆமி பொம்மயும் இருக்கு, சாமி பொம்மயும் இருக்கு.
பட்டன்ல ஓடுற காரும் இருக்கு, நூல்ல இழுக்குற தேரும் இருக்கு.
இதல்லாத்தையும் பாக்குறவுங்களுக்கு ஆச நெறைஞ்சிருக்கு, உங்களுக்காகவே வெலையும் கொறைஞ்சிருக்கு…..!
புள்ளைங்களா அடம்பிடிக்காம அப்பா அம்மாக்கிட்ட கேளுங்க. ஐயா சாமி புள்ளங்கள அடம்பிடிக்க விடாம வாங்கிக் கொடுங்க!
பொம்ம வாங்குங்க புள்ளைங்ஙகளா………………… பொம்ம வாங்குங்க!”

அங்காடி அன்றைய தினம் சனக்கூட்டத்தில் மூச்சுவிட முடியாமல் திக்குமுக்காடிக் கொண்டிருந்தது. ஞாயிற்றுக்கிழமை என்பதால் பல சிறுவர்கள் விடுமுறையை சந்தையில் செலவழிக்க பெற்றோர்களுடன் தொற்றிக்கொண்டு வந்தனர். பொம்மை வியாபாரி உற்சாகத்துடன் பொம்மைகளை விற்றுக்கொண்டிருந்தான். தேன் கூட்டைச் சுற்றி மொய்க்கும் தேனீக்கள் போல், பொம்மைக் கடையைச் சுற்றி சிறுவர்க்கூட்டம் ஆரவாரத்துடன் பொம்மைகளைக் கண்டு குதூகலித்துக்கொண்டிருந்தனர். பொம்மைகள் வைக்கப்பட்ட இடத்திலேயே இருக்கும்போது வியாபாரியின் முகத்தில் புன்னகையும் இல்லை. அவற்றை பார்த்துச்செல்லும் சிறுவர்களின் முகத்தில் பூரிப்பும் இல்லை. அவை வியாபாரியிடமிருந்து சிறுவர்களின் கைகளுக்கு செல்லும்போது இரு தரப்பிலும் முகம் மலர்ந்தது. அவருக்கு வியாபாரம். இவர்களுக்கு சந்தோஷம்.

சிலர் பொம்மைகளை வாங்கி தங்களது பிள்ளைகளுக்கு கொடுக்கின்றனர். அவர்களையே பார்த்துக்கொண்டிருந்த கமலன், சந்தையிலே பொம்மை கடைக்கு அருகில் வடை சுட்டு விற்றுக்கொண்டிருக்கும் தனது தாயின் கையை பிடித்து “அம்மா………. அம்மா…………. போன கெழம துப்பாக்கி பொம்ம வாங்கித் தர்றேன்னு சொன்னீங்கதானேம்மா! இன்னைக்கு வாங்கி தாங்கம்மா………! அங்க பாருங்கம்மா எல்லாரும் வாங்குறாங்கம்மாää பொம்மயெல்லாம் முடிஞ்சிரும் போலிருக்கம்மா. வந்து வாங்கித்தாங்கம்மா! கொஞ்சும் குரலில் கெஞ்சினான்.

“அடுத்த கெழம வாங்கித்தர்றேன். அடம்பிடிக்காத!” என்று மெதுவாக கையை எடுத்துவிட்டாள் தாய். “இப்படித்தா போக கெழமயும் சொன்னீங்க. நான் கூட கணக்குல எல்லா கேள்விக்கும் சரி எடுத்தேந்தானே. டீச்சரும் வெறி குட் போட்டாங்கதானேம்மா. அப்ப நீங்க வாங்கித்தர்றேன்னு சொன்னீங்கதானேம்மா. இன்னைக்கு வாங்கிதாங்களேன்மா.” சிணுங்களுடன் முணங்கினான் கமலன். “முதல்ல என் கடன்பாக்கியெல்லாம் முடிச்சிட்டு அப்புறம் ஒனக்கு துப்பாக்கி வாங்கித் தர்றேன் கமல்கண்ணா…..” கொஞ்சிக்கொண்டே தன் கடனையும் தெரிவித்தாள் அவள். “எப்பம்மா கடன முடிப்ப?” அக்கறையுடன் கேட்பதுபோல் பொம்மையை பார்த்துக்கொண்டே கேட்டான் அவன். “வடையெல்லாம் வித்து முடியட்டும். அதுக்குப்பிறகுதான் காசெல்லாத்தையும் கணக்கு பாத்து கடன முடிக்கனும்.” பெருமூச்சு அவள் வடை சுடும் அடுப்பை எரிக்கும் நெருப்பை விட அதிகளவு சூட்டுடன் வெளியேறியது. இரண்டாம் தரத்தில் கல்வி கற்றாலும் இரு மனதுடன் பொம்மை கடையை நோக்கி விழிகளை திருப்பிக்கொண்டே அமைதியாக அமர்ந்தான் கமலன்.

இருவர் வடை வாங்கி கேட்கும் சத்தம் கேட்டு திரும்பியவன்ää அவர்கள் சென்றதும் உரத்து “அம்மா….. இப்ப காசு கிடைச்சிருச்சுதானே..... துப்பாக்கி வாங்க போவோமா?” கத்திக்கொண்டே துள்ளி எழுந்தான். “இருப்பா இன்னும் நெறைய வடை இருக்கே. அதோட நானும் இன்னும் சுட்டுக்கொண்டுதானே இருக்கேன். அதையெல்லாத்தையும் வித்தாதானே பொம்ம வாங்குற அளவுக்கு காசு கெடைக்கும்.” முடக்கினாள் அவனை. அடங்கி மீண்டும் அமர்ந்தது அவன் உடல் மட்டுந்தான். உள்ளம் அல்ல.

“நீ பொம்மய நெனைச்சு ஆசப்படுற. நான் வறுமைய நெனைச்சு வருத்தப்படுறேன். கடன நெனைச்சு வேதனப்படுறேன். ஒன்ட ஆசய நிறைவேத்த முடியலேன்னு நெனைச்சு வெக்கப்படுறேன்.” எண்ணையில் விழுந்த வடையின் ஒலியைப்போல் வேதனையுடன் புலம்பினாள். ஆனால் அதற்குள் ஓடிப்போய் ஒரு தடவை பொம்மைகளை பார்த்துவிட்டு வந்து அமர்ந்துகொண்டான் கமலன். பொம்மைகளை ஏந்த வேண்டிய அவன் கைகள் அவனது கன்னங்களை தாங்கிப் பிடித்துக்கொண்டிருந்தன.

ஒரு தாய் தன் மகளுக்கு பொம்மையொன்றை வாங்கிக் கொடுத்துவிட்டு வடை வாங்குவதற்காக வருகிறாள். “நாலு வடை தாங்க.” காசை கொடுத்துவிட்டு தன் மகளைப்பார்த்து “இந்த பொம்ம உன்கூட பாடும், சிரிக்கும், பேசும். கவனமா வைச்சிக்கனும். ஒன் பிறந்தநாளைக்கு அப்பாகிட்ட சொல்லி இதவிட பெருசா ஒரு பாபிடோல் வாங்கித்தர்றேன்.” என கூறினாள். கமலன் அச்சிறுமியின் அருகில் சென்று அந்த பொம்மையை தொட்டுப் பார்த்துவிட்டு வந்து அமர்கிறான். அவனைப் பொருத்தவரை இதே பெரிய பொம்மைதான். இதைவிட பெரியதென்றால், அவனால் நினைத்துப்பார்க்கக்கூட முடியவில்லை.

அவர்கள் சென்றதும். “கமலா…… அடுத்தவங்க வாங்கின பொருள நாங்களும் வாங்கனும்னு நெனைக்குறது தப்பு. அந்தப்புள்ள ஓரளவு வசதியான குடும்பத்துல பொறந்திருக்கு. இந்த மாதிரி நெறைய பொம்மகள வாங்கும். உங்க அம்மா இந்த அடுப்புல வெந்தாத்தான் நம்ம வீட்டு அடுப்புல சோறு வேகும். உங்க அப்பா போய் சேந்துட்டாரு…..” அவள் முடிக்கும் முன்னமே இவன் மீண்டும் பொம்மை கடைக்குச் சென்று பொம்மைகளை பார்த்துவிட்டு வந்து அமர்கின்றான். ஆனால் இம்முறை அவன் முதுகுப்புறம் பொம்மை கடையை நோக்கி இருந்தது. அவன் விழிகள் வடையையும் பணப்பெட்டியையுமே மாறி மாறி பார்த்துக்கொண்டிருந்தன. மனதுக்குள்ளேயே இரண்டினதும் எண்ணிக்கையை கணக்கெடுக்கின்றான் போலும்.

அணையைக் கட்டி கடல் அலையை அடக்க முடியாது. வறுமையை காட்டி இவன் ஆசையை அழிக்க முடியாது. புரிந்துகொண்டாள் அவள். “என்னப்பா……. பொம்ம இருக்கா……?” இலேசான சிரிப்புடன் கேட்டாள். “இருக்கும்மா! காசு சேந்த பெறகு வாங்கித்தாங்க!” கடையை திரும்பிப் பார்த்துவிட்டு கமலன் சொன்னான். சிரித்துக்கொண்டே பெட்டியில் இருந்த பணத்தை எண்ணிப்பார்த்து “இந்தாப்பா….. ஐநூத்தி எண்பது ரூபா இன்னைக்கு சேந்திருக்கு. ஒனக்கு இருநூறு ரூபா தர்றேன். ஒனக்கு புடிச்ச துப்பாக்கி பொம்மய வாங்கிட்டு வா.” கண்கள் விரிந்து, முகம் மலர்ந்து, முந்தநாள் விழுந்த வேட்டைப்பல்லின் ஓட்டை அடையாளம் தெரியும் வரை சிரித்துக்கொண்டே அம்மாவின் முகத்தை கட்டிப்பிடித்து முத்தமிட்டு துப்பாக்கியிலிருந்து வெளிவரும் தோட்டாவைப்போல் பொம்மைக் கடையை நோக்கி விரைந்தான் கமலன்.

“இந்தாம்மா! எங்க கடன் காசு? பதினய்யாயிரம் ரூபா கடனா வாங்குனபோது என்ன சொன்ன? ஒரு நாளைக்கு ஐநூநு ரூபா படி வீட்டுக்கே கொண்டு வந்து தர்றதா சொன்னதானே…..? நேத்தும் வீட்டு பக்கம் காணோம். இன்னைக்கும் வர்ற யோசண இல்லபோல?” கடன் கொடுத்தவன் பணத்தை கேட்டு திடீரென வந்து நிற்கிறான் அவள் கடைக்கு முன்னால். “இல்ல ஐயா. போன கெழம நான் சொன்ன படி தந்துட்டேன் ஐயா. நேத்தும் இன்னைக்கும் யாவாரம் சரியா நடக்குல. ஏ பையனும் ஆசையா பொம்ம வாங்கிட்டான். இன்னும் ரெண்டு நாளைய நாலு நாளைக்கும் சேத்தே நான் பணத்த கொணணாந்து வீட்ல அக்காகிட்ட கொடுத்துடறேன் ஐயா.” காலைல வந்து அடுப்புக்கு முன்னால கட்டையில் உட்கார்ந்தவள் இப்பொழுதுதான் எழும்பி நிற்கிறாள். அவள் வாழ்க்கையைப் போலவே அவள் கால்களும் விறைத்துப்போய் இருந்தன.

“என்னது! கடன்காரி புள்ளைக்கு கடைத்தெருவுல பொம்மயா? அது அவனுக்கு தேவையா? டேய் பொடியா அங்கேயே நில்லுடா!” கமலனை பொம்மைக் கடை வாசலில் நிற்கச்சொல்லிவிட்டு அவனை நோக்கி விரைந்தான். அவன் வாங்கி கைகளுக்குள் பொத்தி வைத்திருந்த துப்பாக்கி பொம்மையை பிடுங்கி கடைக்காரனிடமே திருப்பி கொடுத்துவிட்டு பணத்தை வாங்கிக் கொண்டு மீண்டும் அவளிடம் வந்தான். கமலனின் கண்கள் வெடித்தன. குருதி கண்ணீராய் கொட்டியது. சந்தையில் அனைவரது கண்களும் வடைகாரியையே குறி வைத்தன. அவமானத்தால் தலை குனிந்து கதறினாள் அவள்.

“இந்தாம்மா! பெட்டயில இருக்குற மீதிப்பணத்தையும் எடு!” கையை நீட்டியவனுக்கு, அடுக்கி வைத்திருந்த அனைத்து தாள்களையும் எடுத்துக்கொடுத்தாள். “நேத்தைய பாக்கி முடிஞ்சுது. பின்னேரம் இன்னைக்கான காசு வந்திடனும். சொன்ன மாதிரி ஒரு மாசத்துள வாங்குன பணத்த கட்டி முடிச்சுடு. தொழில் செய்ய காசு கேட்டதாலையும், நீ என் வீட்ல வேல செய்தவன்ட பொஞ்சாதியிங்குறதாலயும் தான் வட்டியில்லாம கடன் கொடுத்தேன். சரியா பணம் வரலேன்னா…… பாத்துக்க. என் பணத்த முதல்ல தீர்த்துட்டு அதுக்குப் பெறகு ஓ மகனுக்கு துப்பாக்கி வாங்கி பொம்ம வாங்கி கொடு.” மிரட்டலுடன் கலந்த எச்சரிக்கையை விடுத்துவிட்டு சென்றான்.

துப்பாக்கிப் பொம்மையை முழுமையாக தொட்டுப் பார்க்கக்கூட முடியாத துர்ப்பாக்கியசாலியாக ஏக்கத்துடன் ஓடி வந்து அம்மாவை கட்டிப்பிடித்து கதறினான் கமலன். அவள் அசையாமல் ஒரு பொம்மையப் போலவே நின்றுகொண்டிருந்தாள். வேடிக்கை பார்த்த அனைவரும் வேதனையுடன்தான் திரும்பிச் சென்றனர். சிறிது நேரத்தில் சந்தை பழைய நிலமைக்கு வந்தது. ஆனால் இவர்கள் நீண்ட நேரமாக நடந்த சம்பவத்திற்குள்ளேயே நிலைத்திருந்தனர். “அழாதடா ராசா….. அழாத என்னைக்காவது ஒரு நாள் அந்த பொம்மய நான் ஒனக்கு வாங்கித் தருவேன். அழாத! ஒனக்கு அந்த பொம்மய வைச்சு வெளையாட ஆச. ஆனா வறுமைக்கு எங்கள வைச்சு விளையாட ஆச! இன்னை அது வெளையாடுது. வெளையாடட்டும்.” கண்ணை மூடி கமலனின் உச்சந்தலையில் முத்தமிட்டுக்கொண்டே குலுங்கி அழுதூள். கமலன் கலங்கிய ஓரக்கண்ணால் பொம்மைக் கடையை பார்த்தான்.

“பொம்ம வாங்குங்க புள்ளைங்களா…………. பொம்ம வாங்குங்க! பொம்மைக்கடைக்காரன் கூவிக்கொண்டே இருந்தான்.

கற்பனைகள் யாவும் எனக்கு சொந்தமானவை
சித்திரவேல் அழகேஸ்வரன்

எழுதியவர் : சித்திரவேல் அழகேஸ்வரன் (17-Aug-15, 6:24 pm)
பார்வை : 278

மேலே