மாற்றமில்லாத முடிவு

“ஹலோ.....! என்ன தங்கராஜ், அக்கவுண்ட்ல பணம் வந்திருச்சா.....? நேரமாகிக்கிட்டே இருக்கு. உன் பொண்டாட்டி வேற அழுதுகிட்டே இருக்கா. அங்கிருந்தும் ஒரு தகவலும் வரல்ல. உன் மாமனாரைப் பற்றி ஆஸ்பத்திரில இருந்து தகவல் ஏதும் உனக்கு வந்ததா?” மாணிக்கத்தார் தன் மகனோடு தொலைபேசியில் கதைத்தார். “இல்லப்பா! இன்னும் எந்த பணமும் அக்கவுண்டுக்கு வரல்ல. பேங்க் மேனேஜர்கிட்ட சொல்லியிருக்கேன். ஏதேனும் அமௌண்ட் வந்தால் என்ட செல்போனுக்கு மெசேஜ் வந்திடும். அவ அழுதா அழுதுகிட்டு இருக்கட்டும். எங்க முடிவுல எந்த மாற்றமும் இல்ல! எனக்கும் அங்கிருந்து எந்த தகவலும் வரல்ல. அப்படி ஏதும் வந்தா உங்களுக்கு போன் பண்ணுறேன்.” என்று தங்கராஜ் சற்று கோபமாக சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டான்.

“என்னங்க சொல்றான், நம்ம புள்ள? பணம் வந்திடுச்சாமா?” சமையலறையிலிருந்து சூடாக தேநீரை எடுத்துக்கொண்டு வந்த வைரம்மாள் கேட்டாள். “இன்னும் ஒன்னும் வரல்லையாம்.” சோகமாக கூறினார் மாணிக்கத்தார். “எனக்கு அப்பவே தெரியும். இதெல்லாம் நடக்குற காரியமில்லேன்னு. நல்லா எங்கள ஏமாத்திட்டாங்க. பாவம் தங்கதாஜீ! நம்பிக்கையாவும் ஆசையாவும் இருந்தான். எல்லாமே மண்ணாகிப் போச்சி.” என்று கூறிக்கொண்டே மருமகளைப் பார்த்தாள் வைரம்மாள். மாங்கல்யா அழுதுகொண்டேதான் இருந்தாள்.

“என்னம்மா நீ அழுதுகிட்டே இருக்க! இப்படி கண்ணீர சிந்தினா எங்க குடும்த்துக்குத்தான் கெடுதல். முதல்ல அழுகைய நிப்பாட்டு. அழுறதால எந்த காரியமும் தீர்ந்துவிடாது. எங்கட முடிவும் மாறிவிடாது. முதல்ல உன் வீட்ல இருந்து என்ன சேதி வருதுன்னு பார்ப்போம். அதுக்குப் பிறகு என்ன பண்ணலாம்னு யோசிப்போம்.” என்று மாங்கல்யாவை பார்த்து மாணிக்கத்தார் கூறியதும், வைரம்மாள் தொடர்ந்தாள். “உன் வீட்ல உன்மேல யாருக்கும் பாசமே இல்லையேம்மா! பாரு, உன்ன இங்க கலங்க வைச்சுட்டு அங்க ஊர்ல உன் அப்பாவும் அம்மாவும் அண்ணாவும் ஏனோ தானோன்னு இருக்காங்க! ஏதாவது ஒரு முடிவு சொன்னா தானே நாங்க அடுத்த நடவடிக்கைய எடுக்கலாம்.” என்றாள்.

கண்ணீரோடு கதைக்க ஆரம்பித்தாள் மாங்கல்யா. “அண்ணாதான் ரெண்டு நாளைக்கு முதல்லேயே போன் பண்ணி விசயத்த சொன்னார்தானே அத்தே..... அதுக்குப் பிறகும்.....” அவள் முடிக்கும் முன்னமே வைரம்மாள் “அதெல்லாம் சரிவராதும்மா! எங்க மேலேயா பிழையிருக்கு? இல்லையே.....! உங்க அப்பாதான் கவனமா இருந்திருக்கனும். அவரு பணத்த பஸ்ல தொலைச்சுட்டு அத ஒரு காரணமா சொன்னா எப்படி ஏத்துக்குறது? முதல்ல அவரு பணத்த தொலைச்சது உண்மையா பொய்யான்னே தெரியல.....” என்று முகத்தை சுளித்துக்கொண்டே கூறினாள்.

“இல்ல அத்தே, அண்ணா பொய் சொல்லமாட்டாரு.....” என மாங்கல்யா ஆரம்பிக்கும்போதே “சரிம்மா, பணம் தொலைஞ்சதாவே இருக்கட்டும். அப்படின்னா இங்க வந்து நேர்ல எங்கள பார்த்து ஒரு வார்த்த இப்படி நடந்துடிச்சுன்னு சொல்லிவிட்டு போய் இருக்கலாம்தானே.....! ஏன் வரல்ல.....?” மாணிக்கத்தார் வினவினார். “அதான் பணத்த காணோம்னு தெரிஞ்சவுடனேயே அப்பாவுக்கு பஸ்ல வைச்சே நெஞ்சு வலி வந்து அப்படியே பஸ்ல இருக்குறவங்கலே ஆஸ்பத்திரிக்கு கொண்டுபோய் அட்மிட் பண்ணிட்டாங்களே மாமா! அப்புறம் எப்படி.....?” அவள் இன்னும் முடிக்கவில்லை. அவளை மேலும் பேசுவதற்கு வாய்ப்பளிக்காமல் வீட்டு தொலைபேசி அலறியது.

“ஹலோ.....!” மாணிக்கத்தார் எடுத்தார். “அப்பா, அவட அண்ணன் போன் பண்ணினான். அவட அப்பா இறந்திட்டாராம். அவன்கிட்ட எங்கட முடிவ தெளிவா சொல்லிட்டேன். நாங்க யாரும் அங்க ஊருக்கு வரமாட்டோம். விருப்பம் என்றால் உன் தங்கச்சிய நீயே வந்து கூட்டிட்டு போ. ஆனால் அதுக்குப் பிறகு மாங்கல்யாவ எங்க வீட்ல சேத்துக்க மாட்டோம்னு அடிச்சு சொல்லிட்டேன். கதைச்சுக்கிட்டு இருக்கும்போதே போன் கட்டாயிடுச்சு. அவன்ட போன்ல காசு இல்லேன்னு நினைக்குறேன். பிறகு ஏதும் எடுத்தான் என்றால் உங்களுக்கு சொல்லுறேன்.” தங்கராஜ் கூறிவிட்டு தொலைபேசி அழைப்பை துண்டித்தான். மாணிக்கத்தார் அமைதியாக வந்து கதிரையில் அமர்ந்த பின் “இந்தாம்மா..... உன் அப்பா தவறிட்டாராம். உன் அண்ணன் போன் பண்ணி சொல்லியிருக்கான்.” மெதுவாக சொன்னார். “ஐயோ அப்பா....................!” கதறினாள் மாங்கல்யா.

“சரி, இனிமேல் நிச்சயமாக ஒரு ரூபாகூட எங்களுக்கு கிடைக்காது. இதனாலதான் அப்பவே சொன்னேன். கேட்ட வரதட்சணைய கல்யாணத்துக்கு முதல் நாளே வாங்கிடுவோம்னு. பாதிய தந்தாங்க. மீதிய அண்ணன்காரன் தன்ட ஆபீஸ்ல லோன் போட்டு ஆறு மாசத்துல தர்றதா சொன்னான். சரின்னு சொல்லி நீங்க கல்யாணத்த முடிச்சீங்க. முந்த நாள் என்னான்னா பணத்த கொண்டு வர்ற நேரம் பஸ்ல எவனோ பணத்த களவாடிட்டான்னு போன் பண்ணி சொல்றாங்க. நாலறை இலட்சம் ரூபா. கவனமா இருந்திருக்க வேணாமா.....? என் மகன் அந்த காசுலதான் மோட்டார் சைக்கிள் வாங்கனும்னு ஆசையா இருந்தான். இனி செத்தவீட்டுக்குத்தான் பணத்த செலவழிக்கனும். இப்பவே வெளியில சொந்தக்காரங்க எல்லாம் ஜாடமாடையா கேவலமா பேசுறாங்க. இனி நேரடியா கிண்டல் பண்ணுவாங்க.” என தலையில் கையை வைத்து பெருமூச்சோடு வேதனையை வெளியிட்டாள் வைரம்மாள். மாங்கல்யாவின் அழுகை அதிகமானது. “இந்தாம்மா நாங்க யாரும் உன் ஊருக்கு வரமாட்டோம். தங்கராஜ் உன் அண்ணன்கிட்ட உன்ன வந்து கூட்டிட்டு போகச்சொல்லியிருக்கான். என்ன முடிவு எடுத்திருக்காங்கன்னு பார்ப்போம்.” மாணிக்கத்தார் கூறினார்.

தரகர் பார்த்து செய்து வைத்த திருமணந்தான். இருவருக்கும் செவ்வாய் தோஷம் என்பதால் நடுத்தர பெண் என்றாலும் பரவாயில்லை என்று திருமணத்திற்கு சம்மதித்தார்கள். அப்படியிருந்தும் எட்டு இலட்சம் சீதனமாக கேட்டார்கள். மாங்கல்யாவின் வயதும் வாழ்க்கையும் வீணாகிப்போகிறதே என எண்ணி அவளின் அண்ணன் தன் தலையை அடமானம் வைத்தாவது தருகிறேன் என வாக்குறுதி கூறினான். பலரை விரட்டி, மூன்றரை இலட்சத்தை திரட்டினான். மீதியைத்தான் தற்போது ஒருவன் திருடிவிட்டான்.

அரைமணி நேரத்தின் பின் மீண்டும் தொலைபேசி அழைத்தது. மாணிக்கத்தார் எடுத்தார். “ஹலோ.....! ஆ..... அப்படியா..... சரி, சரி. நீ சீக்கிரம் வந்திடு.” என சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டார். “இந்தாடி வைரம்! தங்கராஜ்தான் கதைத்தான். அக்கவுண்ட்ல நாலறை இலட்சம் வந்திடுச்சாம். இன்னும் ரெண்டு மணி நேரத்துல அவன் வந்திடுவானாம். அங்க போறதுக்கு வெளிக்கிட்டு இருக்கச் சொன்னான். மாங்கல்யாவையும் கிளம்பச் சொல்லு.” என்றார். “அப்பா.....டி! இப்பதான் நிம்மதி. எங்கள கேவலப்படுத்தாம சீர கொடுத்துட்டாங்க. சொந்தக்காரங்ககிட்ட இப்ப தல நிமிந்து கதைக்கலாம்.” என்றவாறே, மாங்கல்யா அருகில் சென்று “இந்தாம்மா எழுந்திரு. உங்க வீட்டுக்கு போவோம். தங்கராஜ் வந்திடுவான். சீக்கிரம் வெளிக்கிடு.” என்றாள் வைரம்மாள்.

“இல்ல அத்த! நான் உங்களோடு வரல்ல. போன் பண்ணி என் அண்ணாவ வரச்சொல்லுங்க. நான் அங்க போய்ட்டு மறுபடியும் இங்க வர்றதா இல்ல. இனி உங்க பிள்ளைய கூட்டிக்கிட்டு எல்லா இடங்களுக்கும் போங்க. நான் என் ஊர்ல எல்லா இடங்களுக்கும் தனியா போறேன். யாரும் கேட்டா நடந்ததை நான் அப்படியே சொல்றேன். வரதட்சணைக்காக ஆஸ்பத்திரில கிடந்த தகப்பனையே பார்க்க அனுப்பாதவங்கன்னு கேட்குறவங்ககிட்ட சொல்றேன். நீங்களும் அப்படியே சொல்லுங்க. அண்ணா எப்படி இந்த பணத்தை தேடினாருன்னு தெரியல. எப்படியோ உங்களுக்கு தேவையானது கிடைச்சிருச்சு. உங்க முடிவ நீங்க சாதிச்சுகிட்டீங்க. இனி என் முடிவுல எந்த மாற்றமும் இல்ல!” என வைராக்கியமாகவும் திடகாத்திரமாகவும் கூறிவிட்டு தெளிவான முகத்தோடு நிமிர்ந்து பார்த்தாள் மாங்கல்யா.
வைரம்மாளும் மாணிக்கத்தாரும் அதிர்ச்சியில் திகைத்து நின்றனர்.

கற்பனைகள் யாவும் எனக்கு சொந்தமானவை
சித்திரவேல் அழகேஸ்வரன்

எழுதியவர் : சித்திரவேல் அழகேஸ்வரன் (17-Aug-15, 6:32 pm)
பார்வை : 283

மேலே