நெருஞ்சி முள்ளாய் நெஞ்சில் தைக்கிறாய்

காதலின் தேசிய கீதம்
நீயும் பாடிச் செல்கிறாய்..
கனவுகள் மட்டும் கண்ணில்
தினம் கோடி தருகிறாய்..
உயிரை நீயும் பறித்து விட்டு
உடலை ஏனோ விட்டுச் செல்கிறாய்..
உலகம் உறங்கும் வேளையிலும்
என் உறக்கம் மட்டும் பறித்துச் செல்கிறாய்..

நெருப்பில் விழுந்த விட்டிலாய் நான்
உன் நினைவில் விழுந்தே துடிக்கிறேன்
நேற்றையக் காதலை தேடியே
என் நாளையே நாளும் தொலைக்கிறேன்

நெருஞ்சி முள்ளின் நுனிகளாய்
என் நெஞ்சம் முழுதும் தைக்கிறாய்
நேசம் என்ற வாளினால்
என் நெஞ்சை கிழித்தே கொல்கிறாய்

மெல்லின மொழிகள் தொலைத்துவிட்டு
வல்லின மொழியால் வதைக்கிறாய்
புல்லினமாக என்னை நீயும்
தலையில் மிதித்தே நடக்கிறாய்

காதலும் பூக்களும் மலர்வது வாடிடதானா
கண்களை நானும் கொண்டதே அழுதிடதானா
காதல் கண்ட உன் இதயம்
கல்லாகி போனதென்ன
சாதல் தேடி என் பயணம்
தனியாக. போவதென்ன..

என் இதய வானம் முழுவதும்
உன் நினைவு மின்னல் வெட்டுதடி
இரவு பகல் இன்றியே
இவன் பூமி புதைந்து போனதடி..

கரை கண்ட மீனாய்
காதல் கொண்ட நானானேன்
நரை கொண்ட பின்பும்
உன் நினைவில் வாழும் ஆளாவேன்

என் சிரிப்பிற்கெல்லாம் நீதான்
சிறை தந்து போகிறாய்...
என் மரிப்பிற்கு நீதான்
மலர் தந்து போகிறாய்...
நான் போகும் பாதை முழுதும்
முள் விரித்துப் போகிறாய்...
நாள் தோறும் நினைவாலே
என் உயிர் பறித்துப் போகிறாய்...

நாள் தோறும் உன் நினைவாலே
என் உயிர் பறித்துப் போகிறாய்...

எழுதியவர் : மணி அமரன் (17-Aug-15, 11:29 pm)
பார்வை : 326

மேலே