மனிதர்க்கழகு
மனிதர்க்கழகு
மாசில்லாத மனமிருப்போர் மாபுவியில் அழகராம்
நேசம்பரிவு நேர்மைகுணம்
நிறைமனிதர் அழகராம்..!
நடையிலில்லை உருவிலில்லை
நல்லழகு மனிதர்க்கு
உடையிலில்லை நிறத்திலில்லை
உயரழகு மனிதர்க்கு..!
பசிவயிறை கண்டுகலங்கி
பரிவுடன்பசி போக்குவார்
நசிந்தயினம் கைப்பிடித்து
நாளுங்கரை யேற்றுவார்..!
காயம்பட்ட நெஞ்சத்திற்குக்
களிம்பெனவே ஆகுவார்
சாயம்பூசும் உலகமிதில்
தர்மநெறியைப் பேணுவார்..!
மானமதைப் பெரிதாக்கி
மரியாதை ஆளுவார்
தேனமுதச் சொற்களேந்தி
தீங்கிலாது பேசுவார்..!
கூர்மதியைக் கொண்டிருப்பார்
கோணல்மானல் நீக்குவார்
நேர்மையதன் கைப்பிடித்து நெருப்பினிலும்
வேகுவார்..!
காமராஜர் போலிருப்பார்
கருணைநெஞ்சம் இமயமாய்
பூமணக்கும் இதயமதில்
போர்க்குணங்கள் இல்லையாம்..!
இல்லையென்று வந்தவர்க்கு
இருப்பதையே ஈவராம்
வில்லினிடை அம்பாகி
விழிநீரைத் துடைப்பராம்..!
சொல்லும்செயலும் ஒன்றன்றி
சூதுவாது இல்லையாம்
கல்லைக்கூட கரைக்குமவர்
கனிந்தவிதயம் முல்லையாம்..!
நேர்ப்பட்டப் பேச்சினிலே
நியாயங்கள் வளர்ப்பராம்
ஊர்போற்ற வாழுமவர்
உண்மையாகக் கடவுளாம்..!
பிறந்துவாழ்ந்து இறப்பதிலே
பெருமையென்ன கூறுவீர்
மறைந்தபின்னும் இப்புவியில்
வாழவகை செய்குவீர்..!
தீங்கிழைக்கா மனிதரெல்லாம்
தெய்வத்துக்கு ஒப்பராம்
பாங்குகண்டு பார்உவந்து
போற்றுமவரை அழகராம்..!
தனதுழைப்பில் உயர்ந்தவர்கள்
தானதர்மம் செய்வராம்
மனதிற்கிய மனிதரெவரும்
மாவழகு அழகராம்..!
#சொ.சாந்தி

