ஊக்க மது கைவிடேல்
என்னிலிருந்து என்னை
வழுக்கிக் கொள்ள உதவும்
பொன்னிறத்தில் ஒரு
சிறு சறுக்கு மரம்.
சிலிர்த்து எழும் மாயை போல்
சிவ்வெனச் சிறகேதுமின்றி
மேலே ஏற்றி விட்டு
பக்குவமாய் தரை இறக்கத்
தெரியாத ஒரு
தானியங்கி இயந்திரம்.
ஒரு கணம் மட்டுமே
நீடிக்கும் வேசியின்
பொய் கலந்த நாணமாய்
இந்தக் கோலத்திலா
கிடந்தோமென
வெட்கப்பட வைத்தும்
பழக்க தோஷத்தில்
நிமிராத நாய் வால்.
கவிதையே இல்லாத
கவிஞர்களும் ஆட்டம் போட
வாகான கரும்புக் களம்.
நடிப்பு என்ன விலை
என்போரும் நன்றாய்
நடிக்கும் நவரச உலகம்.
அது அறவே வேண்டாம் என
உதட்டளவில் ஊடகங்களோடு
பொய்யுரைப்போர்
'ஊக்க மது கைவிடேல்'
என்று அதன் பொல்லாத
தாக்கத்தில் பிதற்றுவோர்
இங்கு எராளம்
மதுக்கடை வரிசையில்
சனத்தொகை தாராளம்.