வாழ்ந்து பார்க்கலாம் வா தோழா

வா வா வா தோழா
வாழ்ந்து பார்க்கலாம் வா தோழா
வானம் தொடலாம் வா தோழா
வையம் வெல்லலாம் வா தோழா

வானம் முழுதும் உன் பெயரெழுத
வையம் முழுதும் உன் புகழெழுத
வா வா வா தோழா

வாழ்க்கை என்பது சோலைதான்
காய்கள் கசக்கும் கனிகள் இனிக்கும்
கண்ணீர் குடிக்கும் கவலைகள் எல்லாம்
கனிகளாக நாளை இனிக்கும்

முளைக்காத விதைகள் மண்ணிற்கு பாரமாகும்
முளைத்திட்ட மரமோ மண்ணிற்கு வரங்களாகும்
உழைக்காத கைகள் உடம்பிற்கு பாரமாகும்
உழைக்கின்ற கரமோ உழகிற்கே வரங்களாகும்

தன்னம்பிக்கை படை கொண்டு
தடைகளை நீ வென்று வா
தலைவனாக வா தோழா
தரணி போற்ற வா தோழா

காணாத கிரகம் கண்டு
கழனிகள் செய்வோம் வா தோழா
காற்றோடு கைகள் கோர்த்து
புதுக்கவிதை செய்வோம் வா தோழா

சரித்திர மண்ணில் உன் பெயர் முளைக்க
அன்பை நீயும் விதைத்து வா
அறிவை நீயும் விதைத்து வா
அன்பு என்ற ஒன்றுதான்
அகிலம் வாழ செய்யும்
அறிவு என்ற ஒன்றுதான்
அனைத்தும் வெல்ல செய்யும்

கால்களில் வேகம் கூட்டி
கடலிலும் நடந்து வா
கண்களில் வெளிச்சம் கூட்டி வா
கைகளில் வலிமைக் கூட்டி வா
கனவுகள் கனியச் செய்ய வா வா தோழா

ஆயுதம் புதைத்து வா தோழா
அறிவை திறந்து வா
அச்சம் துறந்து வா தோழா
அடிமை உடைத்து வா
அன்பை விதைத்து வா தோழா
அன்பை விதைத்து வா

மேற்கில் விழுந்த சூரியனும்
கிழக்கினில் காலை எழும்
விட்டெறிந்த விதைகள் எல்லாம்
விருட்சமாக நாளை எழும்
விழுந்தால் விழு விதைப் போல்
எழுந்தால் எழு விருட்சம் போல்

அறிவினை விரிவு செய்து வா தோழா
அண்டமும் உனதாகும் வா தோழா
வா வா வா தோழா
வாழ்ந்து பார்க்கலாம் வா தோழா

எழுதியவர் : மணி அமரன் (23-Aug-15, 2:42 pm)
பார்வை : 609

மேலே