விழியதிகாரம் - மீள்பதிவு -சந்தோஷ்

விழியழகே..!
உன் கழுத்தில் நான்
தாலி கட்டும்போது நீ
விழியில் வழியவிடும்
வெட்க கண்ணீரை
சிறு புன்னகையோடு
நான் ரசித்திட வேண்டும்

இதுவரை..
உன் விழிகளுக்கு
பார்வை முத்தம் பதித்த
என் காந்த விழிகளுக்கு
நன்றி கடனாய்
உன் செம்மோக இதழ்களால்
ஓர் ஆழமுத்தம் பதித்து
உன் காதல் ஆளுமையை
என்னிடம் நீ காட்டிட வேண்டும்.

என் கையெழுத்து வசீகரத்தினை
உன் விழியில் ரசித்துவாசித்திட
என்றோ நீ
மன்றாடி கேட்ட வேண்டுகோளினை
கொண்டாடி நிறைவேற்றிடும்
அத்தருணத்தில்
உன் விழிகளின்
புருவங்கள் வியப்புக்குறியிடும்
அழகுநடனத்தை நான் ரசித்திட..

நமக்கான கவிதையிரவில்
வெண்ணிலவு ஒளியை
சீதனமாய் வரம்வாங்கி
நீயெனக்கு கொடுத்திட வேண்டும்.


ஊன் என்பதை கடந்து
உயிர் வென்றாடும் வேகத்தோடு
நிரப்பபடாத காதல் பக்கங்களில்
நமக்கான உயிர்க்கவிதையை
தீர்க்க முடியா காதலோடு
தீர்த்துவிடும் ஆவலோடு
நான் எழுதிட வேண்டும்.


நம் காதல்கலையில்
உருவாகும்
புதுக்கவிதை கருவை
நீ சுமந்தாலும்
உன் சுமையின் பாரம்
நான் தாங்கிட..


இந்த
மருத்துவ விஞ்ஞானத்தை
அதிகாரத்துடன் நான்
ஆணையிட்டு வேண்டிக்கொள்வேனடி.!.

ஆம் .. விழியதிகார நாயகியே.,...!

கரு சுமக்கும் சுமையினால்
உன் விழியில் வழியும்
கண்ணீருக்கு
என்னால் எந்த
காதல் பரிகாரம்
செய்திட முடியும்...??.

ஏனெனில்...
நான் சராசரியான
காதலன் அல்ல...!

காதலுக்கான
மாற்று சொல்லற்று
விக்கி சிக்கித்தவிக்கும்
உன் விழிகளின் ரசிகன்...!
----------------------------------------------------


-இரா.சந்தோஷ் குமார்.



(மீள்பதிவு)

எழுதியவர் : இரா.சந்தோஷ் குமார் (26-Aug-15, 12:12 pm)
பார்வை : 96

மேலே