இயலாமையால் வரும் வார்த்தை

ஒரு சமயம் அறிஞர் அண்ணா தன் நண்பர்களுடன் காரில் திருச்சியிலிருந்து ஈரோட்டுக்குச் சென்று கொண்டிருந்தார்.

வழியில் ஓர் ஊரில் நடந்த மாற்றுக் கட்சி பொதுக்கூட்டம் ஒன்றில், ஒரு பேச்சாளர் அறிஞர் அண்ணாவை மிகவும் தரக்குறைவாக ஏசிக்கொண்டிருந்தார்.

அதைக் காரில் சென்று கொண்டிருந்த அறிஞர் அண்ணாவும் அவரது நண்பர்களும் கேட்டனர்.

அதைக் கண்டும் காணாதது போல் இருந்த அண்ணாவைப் பார்த்து ஒரு நண்பர், “அவர் ஏன் உங்களைப் பற்றி மிகவும் தரக்குறைவாகப் பேசுகிறார்? நீங்கள் யாரையும் எதுவும் சொல்வதில்லையே!“ என்று கேட்டார்.

அதைக் கேட்டும் அறிஞர் அண்ணா எதுவும் பேசாமல் புன்முறுவல் பூத்தார். நண்பர் பேசாமல் இருந்துவிட்டார்.

சற்று நேரத்தில் எதிரில் ஒரு மாட்டு வண்டி வந்தது.

கார் சென்று கொண்டிருந்த வேகத்தைப் பார்த்த வண்டிக்காரன், “டேய்! மெல்லப் போங்கடா!“ என்று கூறியபடி சென்றான்.

அப்பொழுது அறிஞர் அண்ணா தன் நண்பர்களைப் பார்த்து, “பார்த்தீர்களா... நாம் ஒன்றுமே செய்யவில்லை. ஆனாலும் நம்மைத் திட்டுகிறான். காரணம்.... நம் ஓட்டத்திற்கு அவனால் ஈடுகொடுக்க முடியவில்லை. அந்த இயலாமையினால் அவன் திட்டுகிறான். அந்த அரசியல்வாதியும் இதே ரகம்தான்“ என்று பதிலளித்தார்.

இந்த விளக்கமான பதிலைக் கேட்டதும் நண்பரின் மனம் சமாதானமடைந்தது.



(படித்ததில் பிடித்தது)

அருணா செல்வம்.

எழுதியவர் : (படித்தது) (26-Aug-15, 3:06 pm)
பார்வை : 191

மேலே