பிறந்த நாள் பரிசு நிமிடக்கதை
காலையில் வேலைக்கு அவசரமாகக் கிளம்பும் பொழுது தான் மேசையின் மீதிருந்த படங்களைப் பார்த்தான். குழந்தைகள் இருவரும் தன் கைகளால் படம் வரைந்து அதனடியில் பிறந்த நாள் வாழ்த்துச் சொல்லி எழுதி இருந்தார்கள்.
அப்பொழுது தான் இன்று அவனுக்குப் பிறந்த நாள் என்ற நினைவே வந்தது. அன்று பிறந்த நாள் என்றதும் சற்று மகிழ்ச்சியும் அதே சமயம் தன் மீது கொஞ்சம் வெறுப்பும் வந்தது.
நாம் பிறந்து என்ன பெரியாக சாதித்து விட்டோம்...? அம்மா அப்பாவை எதிர்த்துக் காதலிச்சவளைக் கல்யாணம் செய்து கொண்டதால் பெற்றவர்களின் பாசத்தை இழந்தாகிவிட்டது. பிறந்த நாள் அன்று அம்மாவின் அன்பு கலந்த பார்வை, அவளின் கைமணக்கும் பச்சணங்கள்... பாசம் எல்லாம் இழந்து இதோ பத்து வருடங்கள் ஆகிவிட்டது.
இனி அவையெல்லாம் திரும்பவும் கிடைக்குமா? ஏக்கம் நெஞ்சை அழுத்த, தன் மணிபர்சை எடுத்துப் பிரித்தான். அதில் இருந்த தன் அப்பா அம்மா படத்தைச் சற்று நேரம் பார்த்து விட்டு ஏக்கப் பெருமூச்சு விட்டு மூடினான்..
தொலைபேசி ஒலித்தது. வேலையிலிருந்து அவனின் காதல் மனைவி. பிறந்த நாள் வாழ்த்துக் கூறி விட்டு அவசரமாக டெலிபோனுக்கு நான்கு ஐந்து முத்தமிட்டு விட்டு வைத்துவிட்டாள்.
குழந்தைகள் அவன் வரும் வேலை அனேகமாகத் தூங்கிவிட்டு இருப்பார்கள்.
மன அழுத்தத்துடன் வேலைக்குக் கிளம்பினான். புது கம்பெனி. அவர்களுக்கு இவனை அவ்வளவாகத் தெரியாது. ஆனால் கணினி மூலம் முகமே அறியாத முகநூல் நண்பர்கள் பலபேர் வாழ்த்துத் தெரிவித்து இருந்தார்கள். இது கொஞ்சம் இறுக்கத்தைத் தளர்த்தியது.
சற்று நேரத்தில் வேலையைத் துவங்கவும் அதில் மூழ்கியதும் உள்மனத்தின் இன்ப துன்பங்கள் மறந்து போனது.
இரவு வீட்டிற்கு வந்ததும், குழந்தைகள் ஓடிவந்து முத்தமிட்டபோது தான் பிறந்த நாள் ஞாபகம் வந்தது. மனைவி செய்த கேக்கை வெட்டி அவர்களுக்குள் கொண்டாடினாலும் மனம் வெறுமையாக இருப்பதைத் தான் உணர்த்தியது.
மனைவி பரிசாக கொடுத்த கைகடிகாரம் அழகாக இருந்தாலும், அதை அவன் பெரியாதாக எடுத்துக் கொள்ளாதது முகத்தில் தெரிந்தது. கோபத்துடன் அவள் எழுந்து போய்விட்டாள்.
ஆனால், சற்று நேரத்தில் குழந்தைகளைப் படுக்க வைத்துவிட்டு அவன் அருகில் வந்தாள். அவன் கவலையுடனே இருந்தான். “என்ன ஒரு மாதிரியா இருக்கிறீர்கள்? உடம்பு சரியில்லையா?“ அன்புடன் விசாரித்தாள்.
“அதெல்லாம் ஒன்றுமில்லை“
“பிறகென்ன...? உங்க ஃபிரெண்ட்ஸ் எல்லோரும் போன் செய்து பிறந்த நாள் வாழ்த்துச் சொன்னார்களா...?“ கேட்டாள்.
உண்மையில் இன்று ஒருவரிடமும் ஒரு போன்கால் கூட வரவில்லை. இது தான் அவனின் கவலைக்குக் காரணமே! இருந்தாலும் தன் ஏமாற்றத்தைக் காட்டாமல், “ம்... சொன்னார்கள்“ என்றான்.
மனம் கனத்துப் போய் இருந்தது. ஒருத்தருக்குக் கூடவா தன் ஞாபகம் வரவில்லை?
“உங்க வீட்டிலிருந்து போன் வந்துச்சா...?“
“ம்... எப்பவும் போல அக்காவும் தம்பியும் பேசினார்கள்“
“உண்மையாவா?“
அவன் பதில் சொல்லாமல் இருக்கவும், “நீங்கள் யாரிடமும் பேசவில்லை என்பது எனக்குத் தெரியும்“ என்றாள் அலட்சியமாக.
“எப்படி...?“ அவன், அவளை யோசனையுடன் கேட்டான்.
“பின்னே... செல்போனை நிறுத்தி வீட்டிலேயே வச்சிட்டு போனால் எப்படி பேசுவார்களாம்...?“ என்று சொன்னவளைக் கண்கள் அகல விரித்துப் பார்த்தான். “இல்லையே... போன் எங்கிட்ட தானே இருந்தது“
“அது என்னுடைய செல் போன். ஒரே மாதிரி வாங்காதீங்கன்னு அப்பவே சொன்னேன். கேட்டீங்களா...? இப்ப பாருங்கள்.
அனேகமா உங்க ஃபிரெண்ட் எல்லாம் உங்களைத் திட்டி தான் பிறந்த நாள் வாழ்த்துச் சொல்லி இருப்பார்கள் என்று நினைக்கிறேன்“ என்று சொல்லியபடி கைப்பேசியை நீட்டினாள்.
அவசரமாக வாங்கிப் பார்த்தான். கிட்டத்தட்ட அனைவருமே வாழ்த்துடன் திட்டையும் சேர்த்தே அனுப்பியிருந்தாலும் அதைப் படிக்கவும், கேட்கவும் அவனுக்கு ஆனந்தமாகவே இருந்தது.
அருணா செல்வம்.