சொல் அன்பே நிச்சயம் வருவாயா

வரவை எண்ணி எண்ணி மரணத்தின் விளிம்பில் ...

திங்களும் கழிந்தது திருவிழா முடிந்தது
நாள்களும் கழிந்தது நல்லநாளும் முடிந்தது
ஆனியும் கழிந்தது ஆவணி முடிந்தது
சித்திரையும் தையும் சிறப்பாக முடிந்தது ....

நான்பார்த்த குழவியெல்லாம் குமரியாக ஆனது
நாள்பார்த்து மணமுடித்து நாலுபிள்ளை பெற்றது ..
நித்தம் நித்தம் என்காதலன் நீ வருவாயென
நான்மட்டும் அப்படியே நானாக நிற்கிறேன் ..

காத்திருந்த கருவிழியும் வெளுமையாகி போனது
காதோரம் லோலாக்கு கதைசொல்ல மறந்தது
கண்ணாடி வளவியின்று சத்தமின்றி குலுங்குது
கொத்துமுத்து கொலுசும்கூட ஓசையின்றி ஒலிக்குது

நீ சொன்னதேதி முடிந்தது நல்ல ,நல்ல
சொப்பனமும் கலைந்தது -சதையும்
சிதைவில்லை குருதியும் கொட்டவில்லை
மனமட்டும் ரணமாகி வலிமறந்து நிற்குது ..

உன்வரவை எண்ணி எண்ணி மரணத்தின்
விளிம்பில் விழியோரம் சொட்டும் நீரும்
விழாமல் காத்திருக்கு! சொல் அன்பே
ஏந்திக்கொள்ள நிச்சயம் வருவாயா -இல்லை
அத்துளி நிலத்தில் வீழ்ந்து மாளுமா ?

எழுதியவர் : ப்ரியாராம் (28-Aug-15, 12:56 pm)
பார்வை : 173

மேலே