இருதலைக் கொள்ளி
வெள்ளந்தி நட்போடு நகர்ந்துபோன
உன்னதப் பயணங்கள்
மனைவிக்கு நான் போடும்
மூன்று முடிச்சுக்குள்
முடிந்துவிடுமென்று
சொன்னதை நம்பவில்லை....
இப்போது புரிகிறது..
பெண் தோழிகள்
என்னைப் புறக்கணிக்கும்
புறச்சூழ் நிலை மர்மங்கள்.
அத்தனைக்கும் காரணம்
சமூகப் பார்வைகளின்
சமுதாய ஊனப் பரிணாமங்கள்...
அவற்றை உதாசீனப்படுத்திவிட்டு
என் தோழிகள்
எட்ட நின்று பேசினாலும்
அவர்களின் நெருடல்கள் புரிகிறது.
கோணல் பார்வை கொண்டு
திரி திரித்துப் பற்ற வைத்துக்
குளிர்காயும் கூனல் ஜென்மங்களின்
ஊனப்பார்வைகள்
மிகக்கொடியதென்பது தெரிகிறது.
விழியிலாப் பார்வைச் சமூகம்
நம் நட்பைப்
படுக்கையறை ஸ்பரிசங்கள்
என்று கொச்சைப்படுத்தும் ஈனக்குரல்
அவ்வப்போது
எங்காவது ஒரு மூலையில்
ஊளையிட்டுக்கொண்டிருக்கிறது
அந்த ஒப்பாரி ஊளைச் சமூகத்துக்குத்
தெரிய நியாயமில்லை.
நம் நட்பு என்பது
வரவேற்பறையின் விசாலங்கள் என்று. !
திருமணத்தோடு
தொலைந்து போன
எத்தனையோ
தொலைதூர நட்பு வாசனைகள்
மழை நேரத்து
மண்வாசனை போல் சுகமானது.
மெல்லிய ஈரக்காற்றில் மழைதழுவும்
எங்கள் செம்மண் காட்டு
மண்துகள் வாசனை போல்
இனிமையானது
இந்த நட்புப் பார்வைகளின்
நிஜபிம்பப் பரிபாசைகள்
திரையிடப்பட்ட
சமுதாயப்பார்வைக்குத்
தெரிய நியாயமில்லை
பரந்த நிஜங்களை நட்புச்சிறகு கொண்டு
முடிந்தவரை
இவர்களின் புரையேறிப்போன
கோணல்பார்வைக்கு
உணர்த்திக்கொண்டிருக்கிறேன்.
இருந்தாலும் வெறுத்துபோகிறேன்.
ஒவ்வொரு நாளும் இந்த யுத்தங்கள்...
இந்த நச்சுப் பார்வை
யுத்தங்களின்முன்
நட்பு ஊஞ்சலின்
ஊசல் கோட்பாடுகள்
சமுதாயப்பார்வைக் காலடியில்
மண்டியிடப்போவதில்லை ..
இந்த நகல்பார்வை நாகரிகக் குருசேத்திரத்தில்
நெருடல் வியாக்கியானங்களை
என் தோழிகளின் நட்புத்துளிகளுக்குத்
தாரை வார்த்துவிட்டு
கர்ணனின் நேரிய மனதோடு
அவ்வப்போது நிமிர்ந்து நிற்கிறேன்.
அது முடியாமற்போகும்
முகாந்திரமற்ற நேரங்களில் எல்லாம்
ஆணாக இருந்தாலும்
பெண்மையின் மென்மையோடு
முகம் மூடி அழுகிறேன்.
காரணம் இழப்புகள் ஆண்களுக்கில்லை...
திருமணத்தை நோக்கியிருக்கும்
என் பெண் தோழிகளின்
எதிர்காலத்துக்கு என்பதால்..!