புதையல்

என்றோ எவனோ தோண்டிப் புதைத்த
புதையலின் செய்தி செவிவழி கேட்டு
வறுமையின் நிமித்தம் கிளம்பினன் தேடி
நரம்புகள் புடைத்த பாலையின் மறவன்
செல்லும் வழியில் பகலவன் மறைய
கருங்கடல் இறங்கி அலைகளை வருடி
கரைவரி துள்ளும் கயல்களைக் கடந்து
ஒற்றைப் பாதை சிறுமலை யேறி
இருகரை மோதும் செங்கய மிறங்கி
சிறு வெள்ளாம்பல் மதுவொடு மூழ்கி
கருங்களி துஞ்சும் முதலை அன்ன
வெஞ்சுரம் சிறிதொடு தொடரும் பயணம்
பாதை வழியே மேடொரு பள்ளம்
மீண்டும் தோன்றும் இருமா மேரு
வருங்களை யோடு பசியுந் தூண்ட
திணை மாமதுவொடு குழைந்தாச் சுன்னம்
பிசைந்துண் டுறங்கினன் அம்மலை தன்னில்
நெடுநிரை தாண்ட வழியொரு பாலை
நடுநிலை கண்டனன் காணல்க் குட்டை
அதுவழி மேலே சாந்தொடு வாழை
வேர்வழி செல்ல ஈற்றிலே முல்லை
முல்லையின் வாயில் இருதாழ் மூட
ஐந்திரு வாழும் உடன்குறி பேரும்
அவர்களை வென்று தடையினைத் தகர்க்க
பார்த்தனின் வித்யையில் பாதியைக் காட்டினன்
தன்கரம் கொண்டு வாயிற் கதவை
உரலோ டுலக்கை இடிப்பது போல
கானகம் எங்கும் அவ்வொலி கேட்க
பாலையின் மைந்தன் தகர்த்தனன் கதவை
அதுவழி சென்று முடிவில் நிற்க
மறவன் கண்ணில் வெண்ணீ ரூற்று
அந்தோ இதுவரை தேடித் திரிந்த
அருமைத் திரவியம் அடைந்தனன் அன்று..

எழுதியவர் : ரா. அருண்தர்ஷன் (30-Aug-15, 8:33 am)
Tanglish : puthayal
பார்வை : 176

மேலே