கடவுள்கள் கையாலாகாதவர்கள்
கண்டவர் விண்டனர்
விண்டவர் கண்டனர் என மாறாத வரைக்கும்
உங்கள் கடவுளர்கள் கையாலாகாதவர்கள் தான் .
அத்தனை ஆயுதங்களும் அலங்காரமாய்
தாங்கி நிற்கும் ஆண்டவர்கள்
அரங்கிற்கு வரமாட்டார்கள் என்றால் ....
உங்கள் கடவுளர்கள் கையாலாகாதவர்கள் தான் .
அவனுக்கான ஆடையை அடுத்தவன் தான்
அணிவிக்க வேண்டுமென்றால் ....
அவனுக்கான உணவை அடுத்தவன் தான்
படைக்க வேண்டும் என்றால் ....
உங்கள் கடவுளர்கள் கையாலாகாதவர்கள் தான் .
மேற்குத் தொழுகினும்
கிழக்கு வணங்கினும்
காணக் கிடைக்காதவன்தான் கடவுளென்றால்
உங்கள் கடவுளர்கள் கையாலாகாதவர்கள் தான் .
உண்மை உரைப்பவன் உயிரெடுக்க
உங்கள் கையில் ஆயுதங்கள் தான் இருக்கின்றன
உடன் அவன் வரமாட்டான் என்றால்
உங்கள் கடவுளர்கள் கையாலாகாதவர்கள் தான் ......
இதோ இதை எதிர்த்துப் பேசவும்
அவன் வரப் போவதில்லை என்பதால்
உங்கள் கடவுளர்கள் கையாலாகாதவர்கள் தான் .