கம்யூட்டர்
....
கடற்கரையின் காலடி மணற்துகள்கள்போல குறுகுறுத்தது எனக்கு. கண்ணிற்குள் இருள் திரைபோல இறுக மூடியிருந்தது.
மெல்லமெல்ல கனவின் ஆழத்திற்குள் வழுக்கிச்செல்வதுபோல ஒரு நகர்வை உணரமுடிகிறது என்னால். நான் ஒரு முட்டாள். அவன் என்னை நெருங்கியபோதே உஷாராக இருந்திருக்கவேண்டும். பிசகிவிட்டேன். எனக்கெல்லாம் எப்படி நோபல் பரிசு கொடுத்தார்கள் என்று வியக்கத்தோன்றுகிறது இப்பொழுது.
நிரம்ப பீடிகை போடுகின்றேனோ ?
விளக்குகிறேன் பொறுங்கள். என் பெயர் சங்கராம பாரதி. இந்தியாவில் பிறந்து உலகின் பலதேசங்களிலும் கல்விகற்று அமெரிக்காவில் வசித்துக்கொண்டிருப்பவன். என் துறை தத்துவவியல். மிதமிஞ்சிய ஆய்வுத்திறனாலும் ஞாபகத்திறனாலும் கீழை மேலை தத்துவங்கள் பலவும் துரிதமாகக் கற்று இந்த இளம் வயதிலேயே நோபல் பரிசுவரை வளர்ந்திருக்கிறேன்.
நேற்று அவன் என்னைச் சந்திக்கவந்தபோதுகூட தம்மபதத்தின் மறைந்திருக்கும் ஒரு தத்துவத்தைப் பற்றித்தான் கட்டுரை எழுதிக்கொண்டிருந்தேன்.
அவன் சாதாரணமாகத்தான் இருந்தான். அவன் பேசிய தமிழ் ஆங்கிலம் இரண்டுமே சற்றுக் கொச்சையாகத்தான் இருந்தன. அது எனக்கு வியப்பளித்தாலும் நான் பொருட்படுத்தவில்லை. அவன் தன் பெயரை 'லூ' என்று அறிமுகப்படுத்திக்கொண்டான். அதுகூட அவன் பெயரின் சுருக்கவடிவமாக இருக்குமென்றுதான் நம்பிக்கொண்டேன்.
ஒரு வேண்டுகோளுடன் வந்திருந்தான். அவன் ஊரின் பிரச்சனையை நான் தான் தீர்த்துவைக்கவேண்டும் என்று நிரம்பவும் பணிவுடன் கேட்டுக்கொண்டான். பிரச்சனை இதுதான். அவன் ஊர்மக்களில் பெரும்பாலும் தற்கொலை செய்துகொள்கின்றார்கள் என்றான். அரசின் எந்த கவுன்சிலிங்கிற்கும் கட்டுப்படாமல் மக்களின் தற்கொலை தொடர்ந்துகொண்டே இருப்பதுபற்றி வருத்தம் தெரிவித்தான். நான் குழம்பினேன்.
உண்மையில் இது சற்று சிக்கலான பிரச்சனைதான் என்று உணர்ந்துகொண்டேன். ஆனால் இதுபற்றி எந்தப்பத்திரிக்கையிலும் நான் படித்ததில்லை. அது எந்த ஊர் என்று கேட்டதற்கு அவன் கூறிய பதில்தான் இந்தக்கதையின் தொடக்கம். தான் ஒரு வேற்றுகிரக வாசி என்றும், பூமிக்கு நேர் எதிர்ப்புறமாக தங்கள் கிரகம் அமைந்திருக்கிறதென்றும் அவன் கூறியபோதுதான் எனக்கு முதல் சந்தேகம் தோன்றியது. சரிதான் இவன் ஒரு 'மாதிரி'யான நபர் போல என்றெண்ணிக்கொண்டு, அவசியம் வருகிறேன், தற்போது கொஞ்சம் வேலையிருக்கிறது. அடுத்தவாரம் வாருங்கள் என்றுமட்டும் முடித்துக்கொண்டேன்.
அவன் கண்கள் சலனமற்றிருந்தன.
துளிகூட மகிழ்ச்சியை வெளிப்படுத்தாத அந்தக்கண்களில் தெரிந்தது ஐயமா அசூயையா என்று அனுமானிக்க இயலவில்லை என்னால். மிக்க மகிழ்ச்சி என்றவாறு என்னை நெருங்கியணைத்துக்கொண்டான். நானும் யதார்த்தமாக அதை அனுமதித்தேன். அவ்வளவுதான். அதன்பிறகுதான் இந்த இருளுக்குள் நகர்ந்துகொண்டிருக்கிறேன். என் வலதுதோளில் மெலிதான சுருக். மெல்லமெல்ல மரத்துப்போன என் உடலெங்கும் ரத்தம் பரவியதில் கூசியது.
என் தோள்களில் எவரின் கரமோ பட்டதில் என் உடல் விர்ரென்று அதிர்ந்தது. எங்கோ கிணற்றிற்குள்ளிருந்து கேட்பது என்பார்களே, அவ்விதமாகக் குரல்கள் கேட்டன. கண்களை திறக்க மிகவும் பிரயாசை தேவைப்படது.
என் கால்களையொட்டி அவன் நின்றிருந்தான். 'லூ'. சட்டென்று அவனை எட்டியுதைக்கும் விருப்பத்தை கட்டுப்படுத்திக்கொண்டேன். புன்னகைத்தபோது அவன் அத்தனை அழகாக இருந்தான். "வெல்கம் டூ கம்யூட்டா" என்று என் பக்கவாட்டில் ஒரு குரல்கேட்டது. மெல்ல தலைதிருப்பிப்பார்த்தேன்.
சுருள்முடிகள் அடர்ந்து தூயவென்மையில் நீள் அங்கி அணிந்து ஒருவர் கருணைபொங்க என்னையே பார்த்துக்கொண்டிருந்தார். நான் மெல்ல சிரமத்துடன் எழுந்து அமர்ந்துகொண்டேன்.
"தங்களுக்கு குடிப்பதற்கு ஏதேனும் வேண்டுமா"? என்றார். நான் லூவை குழப்பமாகப் பார்த்தேன். இவர் எங்கள் கிரகத்தின் தலைவர் லெனின் என்று அறிமுகப்படுத்தினான். அனுமதியின்றி அழைத்துவந்ததற்கு வருத்தம் தெரிவித்தான்.
கொஞ்சநேரத்தில் எனக்கு சற்று தெம்பு வந்ததும் அங்கிருந்து வெளியேறினோம். மருத்துவமனை வாசலுக்கு வந்தபோது மிதவை தயாராக இருந்தது. லூ விடைபெற்றுக்கொள்ள நானும் லெனினும் மட்டும் பயணித்தோம். எனக்கு ஆச்சரியங்கள் விலகி அடுத்து என்ன செய்யலாமென்று யோசிக்கத்துவங்கியபடி லெனினிடம் கேட்டேன்.
"உண்மையிலேயே இது வேற்று கிரகமா ? இது எங்கிருக்கிறது"?
" ஆமாம் தோழர். சூரியனின் சுற்றுவட்டப்பாதையில் பூமிக்கு நேர் எதிர்ப்புறம் இந்தக்கிரகம் அமைந்திருக்கிறது. இந்த கிரகத்திற்கு மூன்று நிலவுகளுண்டு. சூரியன் பூமியினுடைய அதே சூரியன் தான்"
"பூமி தவிர்த்து வேறெங்கும் மனிதர்கள் வாழத்தகுந்ததாக இல்லையென்றல்லவா நான் படித்திருக்கிறேன்"
லெனின் தன் பார்வையை எங்கோ வைத்தபடி கூறினார்.
"சோவியத் யூனியன் உடைந்தபின்பான ஒரு காலகட்டத்தில், கம்யூனிஸ சித்தாந்தத்தில் நம்பிக்கை வைத்திருந்த ஒரு குழுவினரின் அயராத உழைப்பால் கண்டுபிடிக்கப்பட்டதுதான் இந்த கிரகம்.
அவர்கள் இதற்கு வைத்த பெயர்தான் கம்யூட்டா. தொடக்கத்தில் இங்கு வந்துசேர்ந்த எங்கள் முந்தைய தலைமுறையினர் மிக அழகான வாழ்வியல் முறைமைகளை தொகுத்து அளித்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள். சமீப ஆண்டுகளாக கம்யூட்டாவில் சில பிரச்சனைகள்.
அதைத்தீர்க்கத்தான் தங்களை அழைத்து வந்திருக்கிறோம்"
"ம்... லூ கூறினான். இங்குள்ள மக்கள் அதிகளவில் தற்கொலை செய்துகொள்வதாக"....
" ஆம் தோழர்" என்றபோது அவர் கண்கள் சற்றுக்கலங்கின.
"ஆனால் இதில் நான் என்ன உதவமுடியும் என்று நினைக்கிறீர்கள்"?
" ஒரே காரணம்தான் தோழர். நீங்கள் தத்துவவியலில் நோபல் வாங்கியிருக்கிறீர்கள். எங்களது தற்போதைய பிரச்சனை தத்துவார்த்தமானது என்று உறுதியாக நம்புகின்றோம். எங்களுக்கு உதவுங்கள் தோழர்" என்றபடி எதிர்பாராதவிதமாக என் கைகளை எடுத்து தனது கைகளுக்குள் வைத்துக்கொண்டார்.
மிதவையிம் கண்ணாடித்தடுப்புகளுக்கு வெளியே அங்கங்கே வயல்வெளிகளில் ரோபோக்கள் உழுதுகொண்டிருந்தன.
மிதவை ஒரு கட்டிடத்தின் வாசலில் நிற்க, நாங்கள் இறங்கிக்கொண்டோம். விசுக்கெனும் ஒலியுடன் மிதவை நகர்ந்துசென்றது. நான் நடக்க எத்தனிக்க, லெனின் என் கைகளைப்பிடித்து நிறுத்தினார்.
காலுக்குக்கீழே தரை நகரத்துவங்கியது. நான் மெலிதாகத் தடுமாற அவர் கைகளுக்குள் என் கைகள் இறுகின. கட்டிடத்தின் நுழைவாயிலின் அருகே சென்று நின்றோம். சுவற்றிலிருந்த பித்தான்களை லெனின் அழுத்த உள்ளிருந்து வ்ரூம்... என்ற சப்தத்துடன் கதவைத்திறந்தது லிப்ட். உள்ளிருந்து வந்த இரண்டு ரோபாக்கள் என்னை ஒளிவெள்ளத்தால் பரிசோதித்தன.
"இது புதியவர்களுக்கான வழக்கமான பரிசோதனை தோழர். சிரமங்களுக்கு மன்னிக்கவும்" என்றார்.
"ரோபோக்களை வைத்து விவசாயம் செய்யுமளவிற்கு தொழில்நுட்பரீதியாக வளர்ந்திருப்பது ஆச்சரியமூட்டுகிறது"
லெனின் ஒரு சிரிப்பை மட்டும் பதிலாக உதிர்த்தார்.
லிப்ட் நின்று வெளிவந்ததும் தரை எங்களை அந்த ஹாலுக்குள் இழுத்துச்சென்றது.ஹாலுக்குள் இன்னும் சிலர் அமர்ந்திருந்தார்கள். நாங்கள் நுழைந்ததும் எழுந்துநின்று வரவேற்றார்கள். அவர்களை அமரச்சொல்லிவிட்டு என்னை எல்லோருக்கும் அறிமுகம் செய்துவைத்தார். நான் குத்துமதிப்பாக தலையாட்டிவைத்தேன். பிறகு என்னை அருகில் அமரவைத்துவிட்டு திரையில் ஒரு ஒளிப்படத்தை ஓடவிட்டார்கள். அதில் ஒரு இளைஞனும் முதியவரும் பேசிக்கொண்டிருந்தார்கள்.
"சொல் எதற்காக தற்கொலைக்கு முயற்சித்தாய்"?
" மன்னியுங்கள். என்னால் என்னவென்று கூற இயலவில்லை. சட்டென்று இந்த வாழ்வு போதுமென்று தோன்றுகிறது "
"ஏன்"?
" தெரியவில்லை டாக்டர். ஆனால் அப்படித்தான் அடிக்கடி தோன்றுகிறது "
"ரேஷனில் உனக்கான அனைத்தும் சரியாக கிடைக்கின்றதல்லவா"?
" ஆங்... அதில் எவ்விதக்குறைவும் இல்லை"
"நீ மிகநல்ல ஓவியனாயிற்றே. ஏதேனும் வரைய முயலலாமே"?
" முயற்சித்தேன் டாக்டர். தினசரி முப்பது ஓவியங்கள் வரைந்துதள்ளுகின்றேன். இருந்தும் இறப்பதற்கான என் உந்துதல் குறையவில்லை.
மரணம் தவிர்த்து வேறெதுவும் எனக்கு விடுதலை தராதென்று உள்ளிருந்து ஒரு குரல் ஒலித்துக்கொண்டேயிருக்கிறது"
"அது உன் ஆழ்மனதின் ஹாலூஸினேஷனாக இருக்கலாம்"
"உங்களுக்குப்புரியவில்லை டாக்டர். ஒவ்வொரு நொடியும் நான் துடித்துக்கொண்டிருக்கிறேன். தயவுசெய்து என்னை விடுதலை செய்யுங்கள்" என்று வெடித்து அழத்துவங்கினான்.
திரையை இருளாக்கிவிட்டு லெனின் பேசத்துவங்கினார்.
"நீங்கள் பார்த்தது கடந்த மூன்று ஆண்டுகளில் பதிவுசெய்யப்பட்ட பலநூறு காட்சிகளில் ஒன்று"
நான் கேட்டேன்.. " அந்த இளைஞன் இப்போது இருக்கிறானா"?
"இல்லை. அந்த கவுன்ஸிலிங் நிகழ்ந்த இரவே தற்கொலைசெய்துகொண்டான்"
(தொடரும்)
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
