முப்பத்தி இரண்டு ரூபாய்

"அப்பா எந்திரிங்கப்பா....எல்லாரு பாக்கறாங்க! தயவுசெஞ்சு எந்திரிங்க" என்று கண்ணீரோடு கதறுகிறாள் கண்மணி. ரோட்டோரம் குடிபோதையில் மயங்கிக்கிடக்கும் மாரிமுத்துவை ஊரே வேடிக்கை பார்க்கின்றது.

"இன்னிக்காவது இந்த மனுச குடிக்காம வந்துட்டான்னா, அந்த மாரியாத்தா கண்ணத் தொறந்துட்டான்னு அர்த்தம்!" என்று தனக்குத்தானே பேசிக்கொண்டிருந்தாள் மாரிமுத்துவின் மனைவி.

மாரிமுத்து கரும்பாலை வேலைக்குச் செல்பவன்.அடசலுக்கு அறுபது ரூபாயென, தினமும் ஐந்து அடசல் ஓட்டுவார்கள்.ஆளுக்கு முன்னூறு ரூபாய் தினமும் கிடைக்கும்.அதில், தினமும் இருநூறு ரூபாயை முதலாளியிடம் வாங்கிக்கொண்டு இரவு ஒன்பதுமணி பஸ்சிற்கு புறப்பட்டு விடுவான் பிராந்தி கடைக்கு. திரும்பவும் அதே பஸ் ஏறி வீட்டுக்கு வந்திடுவான்.இன்றைக்கும் அதேபோலத்தான் குடித்துவிட்டு நிலைதடுமாறி ரோட்டில் விழுந்து கிடக்கிறான்.

"குடித்துவிட்டு ரோட்டில் விழுந்து கிடக்கும்போதெல்லாம் மாரிமுத்துவுக்கு மானம் போனதில்லை.நிர்வாணமாய்க் காட்சியளிக்கும் அந்த வானமே வெட்கப்படும் அளவிற்கு, இன்று அரையும்குறையுமாக கிடக்கிறான்.இப்பொழுதுதான் அவனுடைய மானம் காற்றில் பறந்துகொண்டிருப்பதாய் சங்கட்டப்படுகின்றன சர்க்கரைப்பழ மரத்தில் அமர்ந்திருக்கும் ஆந்தைகள்."


கிழிந்திருக்கும் வேட்டியை சரியாகக் கட்டிவிட முயற்சிக்கிறாள் கண்மணி.ஆனால்,மாரிமுத்துவோ 'செத்த பொணம் மாதிரி' அசையாமல் கிடக்கிறான்.யாருமே உதவ முன்வரவில்லை.வேடிக்கை பார்ப்பதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.

என்னசெய்வது என்று யோசித்த கணத்தில் அவளுக்கு ஒரு யோசனை தோன்றியது! ராமாயாள் வீட்டிற்கு வேகமாக நடக்கிறாள். "பாட்டி....பாட்டி....இந்தக் கொடத்துத் தண்ணிய எடுத்துக்கிறனுங்க" என்று மரியாதையோடு கேட்டாள்.

"இதபாரு பாப்பா,உங்கப்பன் கூத்துக்கு நான்தா கெடச்சனா? உங்கப்பங்காரனுக்கு வேலப்பொழப்பே இல்லயா? தெனத்திக்கு இதே கததா? தண்ணியுமில்ல ஒண்ணுமில்ல.அவவளுக்கு குடிக்கவே தண்ணி இல்லயாமா! குடிகாரப்பயலக் குளிப்பாட்ட தண்ணி கேக்குதா?" என ஒவ்வொரு கேள்வியிலும் கொள்ளிக்கட்டை எடுத்து வீசினாள் ராமாயாள்.

குடத்திலிருந்து கையைஎடுத்துவிட்டு கண்களில் கண்ணீரோடு திரும்பி ஒரு எட்டுஎடுத்து வைக்கையில்,"வந்துட்டா எங்கப்பனுக்கு நானிருக்கனு" என்று மீண்டும் கேவலமாய்ப் பேசினாள் ராமாயாள்.இதைக்கேட்டவுடன் மாலை மாலையாகக் கண்ணீரைக் கொட்டினாள் கண்மணி.கீழே கொட்டும் கண்ணீர் கொதிக்கிறது என்பதற்குச் சாட்சியாய்...கண்மணி தொட்ட அந்த சிவப்புக்குடம் மட்டுமே அங்கிருந்து.

எப்படியோ ஒருவழியாக மாரிமுத்து தள்ளாடிக்கொண்டு எழுந்து நின்றான்.ஆனால் வேட்டி?

கீழே கிடந்த வேட்டியை எடுத்து கண்மணி கட்டிவிட்டாள்.பின்புறமாக கிழிந்திருந்தால்,அவனது அந்தரங்கம் தெரிந்தது.கழுத்திலிருந்த துப்பட்டாவை எடுத்து,அவனுடைய இடுப்பைச்சுற்றி கட்டிவிடுகிறாள் கண்மணி.

கண்மணிக்கு தூக்கம் தள்ளுகிறது.மாரிமுத்துவிற்கு போதை மயக்கம் தள்ளுகிறது.எப்படியோ ஒருவழியாக வீட்டிற்கு அழைத்துச் சென்றுவிட்டாள்.கடவைத்திறந்து கால்வைக்கும்போது "வ்வே...வ்வே..."மாரிமுத்து நடுவீட்டில் வாந்தி எடுத்துவிடுகிறான்.தினமும் நடப்பதுதானே என்று கண்மணி ஒரு துண்டினை எடுத்து சுத்தம் செய்கிறாள்.பிறகு,இருவருமே இரவு உணவு சாப்பிடாமல் படுக்கின்றனர்.

கண்மணி புரண்டு புரண்டு படுக்கிறாள் தூக்கம் வரவில்லை.கூரையின் இடுக்கு வழியாகத் தெரியும் குட்டி நட்சத்திரத்தைப் பார்த்துக்கொண்டே தூங்கிவிடுகிறாள்.

எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டு உறங்கியதுபோல் உறங்காமல் படுத்திருக்கிறாள் மாரிமுத்துவின் மனைவி.விடிய விடிய ஒவ்வொரு நொடிக்கும் ஒருசொட்டுக் கண்ணீர் சொட்டுகிறது அவளது கண்ணில்.

பொழுது விடிந்தது.புல்வெளிகளில் பூத்துக்கிடந்த பனித்துளிகளில் சூரியக்கதிர்கள் பாய்ந்து கொண்டிருந்தன.சரியாக காலை ஆறுமணி.

மாரிமுத்து மெதுமெதுவாய் எழுந்து முகம்கழுவ தண்ணீர்த் தொட்டிக்குச் செல்கிறான்.படித்துக்கொண்டிருந்த கண்மணி எழுந்துவந்து "அப்பா...அப்பா...இன்னிக்கோட கடைசிநாள் முடியுதுங்க.காசு கட்டியே ஆகணுங்க" என்று நூலகக் கட்டணம் இருபத்தி ஐந்தை கேட்கிறாள்.

தன்னுடைய சட்டைப்பையை தடவிப்பார்க்கிறான் மாரிமுத்து.இருந்த பத்துரூபாயை எடுத்துக்கொடுத்துவிட்டு "மீதிக்காச உங்க அம்மாகாரிகிட்ட வாங்கிக்க" என்று மடைமாற்றி விட்டான்.

"உங்களுக்கே தெரியுமுங்கப்பா, அம்மாளுக்கு காலுமுறிஞ்சு கட்டுப்போட்டு சரியானதுக்கப்பறமும்,வலி இருக்கறதால வேலைக்குப் போறதிலனு...அப்றம் எப்பிடிங்கப்பா அம்மாகிட்ட காசிருக்குங்க சொல்லுங்க?" என்று தனது ஞாயமான கேள்வியை கேட்டாள் கண்மணி.

"சரி கண்ணு,ம்ம்ம்...பள்ளிக்கோடம் களம்பிப் போகும்போது ஆலமேட்டுக்கு வா! வாங்கித்தர" என்று சொல்லிவிட்டு தூக்குச்சட்டியை தூக்கிக்கொண்டு வேலைக்குப் போகிறான் மாரிமுத்து".

வீட்டுச் சூழ்நிலையைப் புரிந்து நடந்துகொள்பவள் கண்மணி."சரிங்கப்பா" என்று தலையாட்டிக்கொண்டு வருத்தத்துடன் படிக்கச் செல்கிறாள்.

" கண்மணி...கண்மணி...சோறு அடுப்புல வெச்சிருக்க ஒல கொதிக்குதானு பாரு.தண்ணி பத்தலனா ஒருடம்ளர் ஊத்துடி" என்ற குரல்மட்டும் பொடக்காலிக்குள்ளிருந்து கண்மணியின் காதை வந்தடைகிறது.

வேகமாக ஓடிச் சென்று அடுப்பைப் பார்க்கிறாள் கண்மணி.அடுப்பு எரியவில்லை.அணைந்திருந்தது."கண்மணியின் வயிறு எரிகிறது!. சாப்பாடு கொதிக்கவில்லை. அவள் நெஞ்சு கொதிக்கிறது!"

மீண்டும் அடுப்பைப் பற்றவைக்கிறாள்.கண்மணியின் அம்மா வந்துவிடுகிறாள்.பிறகு,குளிக்கச் செல்கிறாள் கண்மணி.குளித்துவிட்டு வருவதற்குள் சாப்பாடு ஆறட்டுமே என்பதற்காக கண்மணியின் அம்மா வட்டலில் சாப்பாட்டைப் போட்டுவைக்கிறாள்.

குளித்துவிட்டு வந்த கண்மணி தலைவாரிவிட்டு,அவசர அவசரமாக நான்கே நான்கு கையெடுத்து வாயில் போட்டுக்கொண்டு, "போதும்! போதும்! இதுக்குமேல சாப்டமுடியாதுமா,பள்ளிக்கோடத்துக்கு நேரமாச்சு"எனச் சொல்லிவிட்டு புத்தகமூட்டையை தூக்கியவாறு அம்மாவுடைய கன்னத்தில் முத்தமிட்டுச் செல்கிறாள்."பாத்துச் சூதானமா போயிட்டு வாடி கண்ணு"என்று சொல்லியவாறு,மனதிற்குள் "இந்தப் புள்ள ராத்திரியும் சாப்டல,இப்பவும் நாலுவா சாப்டுட்டு பள்ளிக்கோடத்துக்கு நேரமாச்சுனு போறாளே" என்று வெசனப்பட்டுக் கொள்கிறாள் கண்மணியின் அம்மா.

தேசியகீதம் பாடும்போது கண்மணிக்குள் ஒரு படபடப்பு....தேசியகீதம் முடிந்து மௌனம் அனுசரிக்கப்பட்டது.எல்லோரும் தலைகுனிந்து பிராத்தனை செய்கின்றனர்.கண்மணியால் முடியவில்லை.உடம்பெல்லாம் சற்று வியர்த்துவிடுகிறது.வயிறு வலி தாங்கமுடியவில்லை அவளால்.வயிற்றைப் பிடித்துக்கொண்டாள்."அம்மா..!" என்று கத்துகிறாள்.அது அவளுக்கு நடந்துவிட்டது.ஆமாம்! மௌனத்தில் மலர்ந்துவிட்டது பதினாறு வயதுப் பருவமலர்.

எல்லோரும் மௌனம் முடிந்து வரிசையாக வகுப்பறைக்குச் சென்றனர்.கண்மணியின் தோழிகள் அவளை ஒரு திண்ணையில் அமரவைத்தனர்.இந்த அரசுப் பள்ளியிலும் கழிவறைவசதி முழுமையாக இல்லை.பெண்ணாக பிறந்தது எவ்வளவு கொடுமையானது என்பதை கசிந்து விழுந்த இரத்தச்சொட்டு அவளுக்கு உணர்த்தியது.

கண்மணியின் தோழிகள் வேகமாகச் சென்று விஷயத்தை வகுப்பாசிரியர் லலிதாமதியிடம் தெரிவித்தனர்.பிறகு,அவர் கண்மணியின் அம்மாவுக்கு அலைபேசி வாயிலாக தகவல் தெரிவித்தார்.அப்பொழுதே,அவளுடைய அம்மா பள்ளிக்கு வந்து கண்மணியை வீட்டிற்கு அழைத்துச் சென்றாள்.

நடக்கவேண்டிய எல்லாச் சடங்குகளும் செய்து கண்மணியை குடிசைக்குள் தள்ளினர்.அக்கம்பக்கமெல்லாம் "இந்த மாரிமுத்துக்கு சொல்லி அனுப்பியாச்சா" என்று கண்மணியின் அம்மாவிடம் கேட்டனர். "இந்தமனுச இன்னிக்கும் குடுச்சுட்டுத்தா வருவாம்போல"என்று கவலைப்பட்டுச் சொன்னாள் மாரிமுத்துவின் மனைவி.

மாலை ஆறுமணிக்கு மேலானது.சாப்பாடு செய்ய அடுப்பறைக்குச் சென்றுவிட்டாள் கண்மணியின் அம்மா.மணி ஏழானது....எட்டானது....மாரிமுத்து வரவில்லை.

கண்மணியும் அவளுடைய அம்மாவும் சாப்பிட்டுவிட்டு தூங்கச் சென்றனர்.பழைய சேலையை படுக்க விரித்துபோட்டு,வெளியே படுத்திருந்தாள் கண்மணி.பூத்துக்கிடந்த வானத்தைப் பார்த்துக்கொண்டு, "பள்ளிக்கோடம் போட்டுப்போக ஒருசெட்டுத்துணி கேட்டு ஒருமாசமாச்சு..,கால்கொலுசு வாங்கித்தாங்கனு கேட்டத காதுலையே வாங்கிக்கல..,காலைல பாஞ்சுரூவா கடனா வாங்கித் தரங்கராரு..,இனி எப்டி மாசமாசம் முப்பத்திரண்டு ரூவா கேட்ப?" என மனதிற்குள் புலம்பிக்கொண்டு கால்களைப் பிசுபிசுப்பிலும்... கண்களைக் கதகதப்பிலும் தவிக்கவைத்துவிட்டு பூத்துக்கிடந்த வானத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள் கண்மணி.




கண்களில் கதகதப்புடன்...
வெ.திருமூர்த்தி

எழுதியவர் : திருமூர்த்தி (2-Sep-15, 8:46 pm)
பார்வை : 434

மேலே