உயிர்ப்பு - 1
மல்லாத்திக் கிடத்தப்பட்டிருந்தான் அவன். தென்னங் கிடுகுகளால் வேயப்பட்டு நடுத்தர வசதியுடன் அமைக்கப்பட்ட அவ்வீட்டின் காற்றோட்டமான பக்கத்திண்ணையில்.
அவன் அணிந்திருந்த வெண்ணிற பருத்தி மேற்சட்டை பொத்தான்கள் விடுவிக்கப் பட்டிருந்தது. பாதங்கள் தளர்ந்திருக்க அவற்றை எட்டிய படி காற்றில் அசைந்து கொண்டிருந்தது அவன் அணிந்திருந்த மென்நீல, கரும் பச்சை கட்டங்கள் வரையப்பட்ட சாறன். உள்ளங்கைகள் பக்கவாட்டில் உடலைப் பார்ததபடியே அசைவற்றுக் கிடந்தது. நெற்றிக் கற்றை முடி காற்றில் புரள
பரந்த , விழிகள் மூடிய அவன் முகம் ஜீவனின்றித் தளர்ந்து தோள்ப்பட்டை நோக்கிச் சற்றுக் கவிழ்ந்த மீட்பர் சாயல் கண்டிருந்தது.
சூழ இருபது பேர் இருக்கலாம்… அவ்வீட்டின் முன்புற அகன்று விரிந்த முற்றத்தில் ஆளொரு திக்கில் யோசனையும் தீவிர முகமுமாக உலாத்திக் கொண்டிருந்தனர். ஒரு சிலர் தமக்குள் ஏதோ ஓசையின்றிக் கைகளாலும் கண்களாலும் பேசிக் கொள்வதைக் கலங்கிய விழிகளுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் ஏழே வயதான அச்சிறுமி.
தவிப்பும் துயரும் மண்டிக் கன்றிப் போயிருந்தது அவள் முகம். மல்லாந்து கிடந்த தன் தகப்பன் முகத்தை நொடிக்கொரு தடவை பார்ப்பதும் , மூச்சு ஏறியிறங்கும் அவன் மார்புச் சேர்ட்டை பார்ப்பதுமாக இருந்தாள்.
திடுமென வாசல் ‘கேற்’ திறபடும் ஓசை கேட்க கவனம் சிதறி வந்தவர்களைப் பார்த்துக் கொண்டு நின்றாள்.
இருவரும் உறவுவழிச் சொந்தமான அவள் மாமன்மார் தான்.
“என்ன மருந்து…?
எப்ப… அடிக்கத் தொடங்கினது… போத்தலாவது இருக்கா ….
இருந்தாக் கொண்டா ….!”
என்று அருகிலிருந்தவரிடம் விசாரித்த படி படுக்க வைத்திருந்த இடம் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
அவள் மனம் பிரார்த்தித்துக் கொண்டேயிருந்தது. இவர்களாவது தன் தகப்பனை எழுப்பி விடமாட்டார்களா எனும் ஏக்கத்தோடு.
(தொடரும்)
நர்த்தனி