கொய்யா முனிவரின் சாபம்

கண்ணப்பனுக்கு சரியாக கண் தெரியாது. ஒரு முறை வழி தவறி ஒரு காட்டிற்குள் நுழைந்து விட்டான். அங்கு கொஞ்ச தூரம் நடந்து சென்றபோது இன்னொருவன் அவன் கண்ணில் தென்பட்டான். அவனை பார்த்து ' என்னப்பா, நீயும் என்னை மாதிரி இங்கு வந்து மாட்டிக்கொண்டு விட்டாயா ' என்று கேட்டபடி கண்ணப்பன் அருகில் சென்றான். பக்கத்தில் சென்ற போது தான் அது மனிதன் அல்ல ஒரு சிம்பன்சி குரங்கு என்று. ஆஆஆஆ என்று அலறிக் கொண்டு ஓட ஆரம்பித்தவனை இரண்டு கைகளால் தடுத்து நிறுத்தியது சிம்பன்சி.
ஒரு கணம் உறைந்து போன கண்ணப்பன் "ஆஆஆஆ. இந்த மனிதக் குரங்கிடமிருந்து என்னை காப்பாத்துங்க' என்று அலறினான். அப்போது அந்த சிம்பன்சி அவன் காதில் "எனக்கு காது கொஞ்சம் சரியாகக் கேட்காது. என்ன சொன்னாய் நீ?" என்று கேட்டபோது பேயடித்தவன் மாதிரி ஆகிவிட்டான் கண்ணப்பன். ஒரு வழியாக சுதாரித்துக் கொண்டு மனதில் 'அந்த கண்ணப்பனைக் காத்தது போல என்னையும் இந்த காது சரியாக கேட்காத சிம்பஞ்சியிடமிருந்து காப்பாத்து இறைவா' என்று வேண்டினான். அவன் கால்களும் கைகளும் வெடவெட என்று டைப்ரைட்டரை வேகமாக தட்டுவது போல நடுங்கிக் கொண்டிருந்தது.
அந்த சிம்பன்சி கண்ணப்பனிடம் '"என்னப் பாத்து பயம் வேண்டாம். நானும் உன்னைப் போல் ஒரு சாதாரண மனுஷன் தான்” என்றவுடன் கண்ணப்பன் பயம் கலந்த தயக்கத்துடன் "ஏன்யா, அசப்பில் சிம்பன்சி மாதிரியே தான் இருக்கே. ஆனால் மனுஷன் மாதிரியே பேசுறே, அது எப்படி என்று கேட்டான்.
சிம்பன்சி: நான் ஆறு மாசத்துக்கு முன்னாடி இந்த பக்கம் வந்தபோது ஏதோ ஒரு அசரீரி கேட்டது.
கண்ணப்பன்: ஏன்யா எனக்கு கொஞ்சம் கண் பார்வை குறைவு.ஆனால் காதுல பூ சுத்திக்கிற ஆள் இல்லை.அசரீரியாம் கேட்டதாம். யார் நம்புவாங்க?
சிம்பன்சி: இந்த கரடி வேஷத்து மேல் சத்தியமாக சொல்றேன். ஒரு அசரீரி கேட்டது. "கண்ணுச்சாமி, உனக்கு நல்ல கொய்யாப்பழம் சாப்பிட வேண்டுமா? அப்படீன்னு.
கண்ணப்பன்: நீ, ஆமாம், வேணும்னு கேட்டிருப்பே. கொய்யாப்பழம் பறிக்கும் போது கொய்யாமரத்துக்கு சொந்தக்காரரான ஒரு முனிவர் உனக்கு "நீ சிம்பன்சி மாதிரி மாறக் கடவது" ன்னு சாபம் கொடுத்தாரு. நீயும் அந்த கணத்திலேயே சிம்பன்சியா மாறிட்டே. அப்படித்தானே சொல்லுவே?
கண்ணுச்சாமி: நீங்க சொல்லுறது ஓரளவுக்கு உண்மைதான். ஆனால் நான் கொய்யாப்பழத்தை பறிக்கவில்லை. கொய்யா பழத்தை பார்த்தபடியே எப்படி பறிக்கலாம் என்று நடந்துகொண்டே யோசித்துக்கொண்டிருந்தேன். அப்போது தெரியாமல் அந்த மரத்தின் கீழே உறங்கிக்கொண்டிருந்த ஒரு முனிவரின் மேலே கால்தவறி விழுந்துவிட்டேன். அவர் குய்யோ முய்யோ என்று அலறி அடித்துக்கொண்டு எழுந்தார். நான் அவரிடம் "ரொம்ப சாரி, தெரியாமல் உங்கள் மேல் விழுந்துவிட்டேன். அதற்கு பதிலா இந்த மரத்தின் கொய்யாப்பழங்களை உங்களுக்கு பறித்து தாரேன்" என்றேன்.
கண்ணப்பன்: எவ்வளவு கொய்யாப்பழங்கள் பறித்தே? எவ்வளவு அவருக்கு கொடுத்தே, எவ்வளவு நீ துண்ணே?
கண்ணுச்சாமி: நீங்க வேற. அந்த முனிவர் "இந்த கொய்யா தோட்டமே என்னுடையதுதான். நீ என்ன எனக்கு பறிச்சு தரது? என்று கேட்டுவிட்டு அவரிடமிருந்த ஒரு கொய்யாக்காயை கொடுத்து "இந்தா, இதை கடித்து சாப்பிடு" என்றார்.
கண்ணுச்சாமி: கொய்யாத்தோட்டம் வச்சிருக்கிறவன் எப்படிப்பா முனிவனாக இருப்பான்?
கண்ணுச்சாமி: விஷயத்தை கேளுங்க. நானும் ஒரு கொய்யாக்காயை எடுத்து ஆசையாக கடித்து சாப்பிட்டேன். நான் கொய்யாவை கடிக்கும்போதெல்லாம் அவர் " ஐயா, சிம்பன்சி மாதிரியே இருக்கிறாய், சிம்பன்சி மாதிரியே கடித்து சாப்பிடுகிறாய்" என்று சிரித்துக்கொண்டே சொன்னார். அப்போதான் தெரிஞ்சது நான் சிம்பன்சி குரங்காக மாறிவிட்டேன் என்று.
கண்ணுச்சாமி: பாவிப்பய அந்த முனிவன் மனுஷன். தெரியாம அவர்மேல் விழுந்ததுக்கு இப்படி ஒரு சாபமா? அந்த முனிவன் என்ன தவம் செஞ்சிக்கிட்டிருந்தானா?
கண்ணுச்சாமி: நானும் இதையேதான் அவரிடம் கேட்டேன். அவர் அதுக்கு ரொம்ப கோபமாக "நான் தவம் செய்யும்போது நீ என் மேல விழுந்திருந்தால் கூட நான் பொறுத்துக்கொண்டிருப்பேன். ஆனால் இருபது இனிப்பான கொய்யாப்பழங்களை சாப்பிட்டுவிட்டு நன்றாக உறங்கிக்கொண்டிருக்கும்போது நீ என் மேல் விழுந்தது மன்னிக்க முடியாத குற்றம்" என்றார்.
கண்ணப்பன்: அதெல்லாம் சரி. இப்போ நீ மறுபடி மனுஷனாக மாறணும்னா என்ன பண்ணனும்?
கண்ணுச்சாமி: நானும் இந்த சந்தேகத்தை அந்த பொய்யா முனிவன், தவறு கொய்யா முனிவரிடம் கேட்டேன். அதற்கு அவர் சொன்னார் "இன்னும் ஆறுமாசம் நீ இந்த காட்டிலேயே அங்கும் இங்கும் திரிந்துகொண்டிருப்பாய். அதன் பிறகு ஒரு கண்பார்வை குறைந்த ஒரு டுபாகூர் பேர்வழி உன்னை சந்திப்பான். அவரை உன் தோளில் வைத்துக்கொண்டு பத்து கிலோமீட்டர் ஓடினால் மீண்டும் மனிதனாகி விடுவாய்" என்று அறிவுரை கூறினார். அதுமட்டும் அல்ல. எனக்கு ஞாபக சக்தியும் மிகவும் குறைந்துபோய்விட்டது.
கண்ணப்பன்: ஏன்யா, நான் என்ன டுபாகூர் பேர்வழி மாதிரி இருக்கேனா? போய் வேறு ஆளை பார்த்துக்கோ.
கண்ணுச்சாமி: ஐயா ப்ளீஸ் ப்ளீஸ் ஐயா. பார்த்தா அந்த கண்ணப்ப நாயனார் போல இருக்கீங்க. என் தோள்மேல ஏறி உக்காந்துக்கோங்க. அப்படியே இந்த காடு முழுவதையும் சுத்தி காட்டுறேன். பத்து கிலோ மீட்டர் ஓடியபிறகு நான் பழையபடி மனிதனாக மாறிவிடுவேன். அப்போ எனக்கு பழைய ஞாபகம் வந்துடும். அப்புறம் நான் உங்களை உங்க வீட்டில் ஜாக்கிரதையாக கொண்டு உட்டுடறேன்.
கண்ணப்பன் (சிறிது யோசனை செய்துவிட்டு, ' சரி பாவம் ஒரு மனுஷனை காப்பாத்தின புண்ணியம் எனக்கு கிடைக்கும் ' என்று நினைத்துக்கொண்டு): சரி அப்படியே. கீழே கொஞ்சம் குனிஞ்சிக்கோ. மரத்துமேலே மலைமேலே எங்கேயும் என்னை இடிக்காமே, சிங்கம் பூனை சிறுத்தைக்கு என்னை உணவாக்காம ஜாக்கிரதையாக கூட்டிபோவேன்னு சத்தியம் பண்ணு. "
கண்ணுச்சாமி: இந்தாங்க என் சத்தியம். இதோ குனிஞ்சிட்டேன். ஏறி தோள்ல உக்காருங்க
கண்ணப்பன் அவ்வாறே அவன் தோளில் ஏறி அமர்ந்தான். சிம்பன்சி கண்ணுச்சாமி ஓட ஆரம்பித்தான். சில இடங்களில் கண்ணப்பன் மரத்தின் உயரத்திலிருந்து பப்பாளி பழங்களை அசால்டாக பறித்தான். அதை சிம்பன்சியிடம் கொடுத்து தோலை உரித்து தின்னச்சொல்லி, பழத்தை தனக்கு தரச்சொல்லி சாப்பிட்டான்.
எட்டு கிலோமீட்டர் ஓடியவுடன் ஒரு பெரிய கொய்யா மரம் வந்தது.
"இதோ பாரு அருமையான கொய்யா பழங்கள். கொஞ்சம் நில்லு. நான் கொஞ்சம் பறித்து சாப்பிடுகிறேன்" என்று கண்ணப்பன் சொன்னதுதான் தாமதம். கண்ணுச்சாமி சிம்பன்சி இன்னும் வேகமாக ஓடத்தொடங்கியது. ஆனால் ஒரே ஒரு கொய்யாப்பழம் மாத்திரம் கண்ணப்பன் கையில் சிக்கிக்கொண்டது. சிம்பன்சிக்கு தெரியாமல் அவன் அதை நன்கு ருசி பார்த்து தின்றான். அவன் தின்று முடிக்கவும் பத்து கிலோமீட்டர் நிறைவு பெற்றது என்று ஒரு அசரீரி வரவும் சரியாக இருந்தது
கண்ணுச்சாமி சிம்பன்சி நின்றான். கண்ணப்பன் அதன் தோளிலிருந்து மெல்ல சிரித்துக்கொண்டே இறங்கினான். அந்தோ, பரிதாபமே, அவன் கீழே இறங்கிய அடுத்த வினாடியே அவனும் ஒரு சிம்பன்சி குரங்காக மாறிவிட்டான். இரு சிம்பன்சிகளும் அதிர்ச்சியடைந்த அந்த நேரத்தில் கொய்யா முனிவர் தோன்றினார்.
"கண்ணுச்சாமி, நான் உனக்குத்தான் முதன்முதல் சாபம் கொடுத்தேன். அதனால் பரிகாரத்தை சரியாக சொல்லவில்லை. அதை சரிசெய்ய இப்போது நீ புதுசாக உருவான இந்த கண்ணப்பன் சிம்பன்சி தோளில் ஏறிக்கொள். அது உன்னை ஐந்து கிலோமீட்டர் தூரம் தூக்கிக்கொண்டு நான் சொல்லும் பாதையில் ஓடியதும், இருவரும் மீண்டும் மனிதர்களாகி விடுவீர்கள்" என்று சொல்லிவிட்டு அவரிடம் இருந்த ஒரு கொய்யாக்காயை கடித்துக்கொண்டே மாயமாக மறைந்துவிட்டார்.

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (7-May-24, 4:26 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 177

மேலே