உயிர்ப்பு - 2

உயிர்ப்பு - 2
………………….

விரைந்து வந்த மாமன்மார் முகத்தை உற்று நோக்கியபடி எதிர்பார்ப்போடு அவள் கண்கள் நிலைத்திருந்தன.

வந்தவர்கள் பாதிப்புற்றுக் கிடந்தவன் நிலை விட்டு விசாரிப்பதில் கவனம் செலுத்தியவாறு இருந்தனர். இது சற்றுத் திணுக்குற வைத்தது அவளை.

அதிகாலையில் எழுந்து இன்முகத்தோடு தன் அன்றாடங்களில் முனைப்புடன் இயங்கும் தந்தை முகம் நினைவில் வர கண்களில் நீர் திரண்டு கன்னம் வழி வழிந்தோடியது.

இப்படி நிர்க்கதியாகப் படுக்க வைத்து விட்டு அவர்கள் அப்படி எதைத் தீவிரமாகப் பேசிக் கொள்கிறார்கள் எனச் சற்று நம்பிக்கை தளரத் தொடங்கினாள்.

அன்று காலை ஆனந்தமாகப் பாடசாலை செல்லத் தயாராகிக் கொண்டிருந்த போது நான்கு பேர் கை தாங்கி வந்த தகப்பனைக் கண்டதும் அவள் உள்ளமும் உடலும் பதறத் தொடங்கியது.

. “அம்மா….!”

என அலறியபடி வீட்டிற்குள் ஓடி தாயைத் தேடிக் கொண்டிருந்தவள். சற்று உணர்வு வரப்பெற்றவளாய் தன் தாய் வீட்டில் இல்லை என்பதை உணர்ந்து கொண்டாள்.

அதிகாலையில் எழுந்து அயலூர் கோவில் நேர்த்திக் கடனுக்குத் தன் தோழியுடன் தாய் சென்றதை உணர்ந்த கணம், திக்கற்று செய்வதறியாது அவர்கள் செயலில் கவனஞ் செலுத்தி அருகே நின்றாள்.

காற்றோட்டமான திண்ணையில் கிடத்தி விட்டு அசைவற்றிருந்த அவன் ஆடைகளை அவசர அவசரமாக தளர்த்திப் பின்னகர்ந்தவர்கள்…

“தங்கச்சி அம்மா எங்க…. ?”என

“கோயிலுக்குப் போயிற்றா…. “ என்றாள் குரல் தழுதழுக்க...

“வரச் சுணங்குமோ…. ?” என இழுக்க….

“மலைக்குப் போயிற்றா…. வர மத்தியானம் ஆகும்…” என்றவள் பேச்சு தேய்ந்து போயிற்று.

அவர்கள் பின்னால் ஓடி வந்தவர்கள் அநேகர் முற்றம் நிறைக்க முகத்தில் கேள்விக் குறியோடு நின்றிருந்தனர்.

அடுத்து என்ன செய்வதென அவர்களுக்குள் பேசிக் கொண்டிருந்தார்கள். அவள் செய்வதறியாது திகைத்து நின்றாள்.

அவளுக்குத் தெரிந்ததெல்லாம் அதிகாலை சிரித்த முகத்துடன் வயலுக்குச் செல்லத் தயாரான தந்தை தன் தலை தடவி விடை பெற்றது தான்.

பெரியவர்களிடம் உரையாடத் தயங்கும் வயதும் சுபாவமும் கொண்ட அவள் மனது என்ன நடந்தது என அறிய அவர்களை ஆழ்ந்து கவனிக்கத் தொடங்கியது.

இருவர் பேச்சில் நடந்ததை ஓரளவு ஊகிக்கக் கூடியதாக இருந்தது.

வயலில் களைகொல்லி மருந்து அடித்துக் கொண்டிருந்தவர் திடீரென மூச்சயர்ந்து விழுந்த போது இங்கு தூக்கி வரப்பட்டிருக்கின்றார் என்று…

பெயரறியாக் களைகொல்லி மருந்தின் வகையும்… அதன் தீவிரம் பற்றியும் அவர்கள் பேசப் பேச அவளுக்கு தலை சுற்றத் தொடங்கியது.

“என் அப்பா இனி எழுந்திருப்பாரா மாட்டாரா…?”

கண்ணுக்குத் தெரியாக் கடவுளையெல்லாம் வேண்டிக் கொண்டே விம்மிக் கொண்டிருந்தது அவள் மனது.

முன்னொரு தடவை அம்மா தன் தகப்பனைக் கடிந்து கொண்டது அவள் ஞாபகத்தில் விரிந்தது.

“மருந்தடிக்கும் போது வாய், மூக்கு மறைக்க இறுகத் துணியால் மூடிக் கட்டக் கூடாதா?”என….

(தொடரும்…)

நர்த்தனி

எழுதியவர் : நர்த்தனி (8-May-24, 4:35 am)
சேர்த்தது : Narthani 9
பார்வை : 18

மேலே