புல்லாங்குழல் விற்கும் புல்லாங்குழல்

இசைபற்றி ஒன்றும் தெரியாதிருந்த
பருவகாலமொன்றில்
அடுக்கடுக்காய் ஆறு துளைகளும்
சற்று இடைவெளிவிட்டு பின்
கீழ் கணுவிற்கு ஒன்றரை அங்குலம்
இடைவெளியில் ஏழாவது
துளையும் கொண்டு
கீழ்பக்கக் கணுவை அண்டிய
பருத்த மேல் முனையில்
அழகிய குஞ்சரங்கள் தொங்க
ஊமையாய்க் கிடந்த அவளது
புல்லாங்குழலை வாசித்துப் பார்க்கும்
ஆசை இருந்தது.

ஊர்வலம்போன
ஆசைகளின் மேகங்கள்
ஆனந்தத்தின் மழையாகி
அவளது வாசலில் பொழிந்தபோது
மறுப்புகளின் குடைபிடித்து
அதில் நனையாமல் விலகிக் கொண்டவள் ,...
அடுப்புக்கு விறகாக
ஆக்கினாலும் ஆக்குவேனே தவிர
அடுத்தவர் எச்சில் பட
அனுமதியேன் என
மறைக்கப்பட்டு மறுக்கப்பட்ட
வாசிப்பின் யாசிப்பு
என் மோகனத்தை நிராசை
வாகனத்தில் ஏற்றிக்கொண்டு
திசைதெரியாத தீவொன்றில் விட்டுவிட
முற்றிலுமாய் மறக்கடிக்கப்
பட்டுப்போனது என் ஆசை.

எனக்குப் பின்னர்
யார் யாரோவெல்லாம்
அந்தப் புல்லாங்குழலில்
ஆசை வைத்தபோதும்
கழுவுற மீனில் நழுவுற மீனாய்
எந்தக்காற்றுக்கும் இடங்கொடுக்கா
அந்த புல்லாங்குழல்
பேரிடிகள் விழும் கோர காலமொன்றில்
யாராலோ குறைந்த விலைக்கு
விலைபோனது கேட்டுத்
தீப்பிடித்து எரிந்தது என் காடு.

பள்ளிக்கூட நாடகத்தில்
கிருஷ்ணனர் வேஷம் போட்டிருக்கும்
மகனுக்காக புல்லாங்குழல் ஒன்று
வாங்கப்போன கடையில்
அவளது ஞாபகப் பூக்கள்
ஒருகணம் மலர்ந்து மறைந்தன ..

மறுகணம்
வெள்ளை ஆடை போர்த்தி பொழிவிழந்து
இப்போது ஊமையாய் அங்கே
புல்லாங்குழல் விற்றுக் கொண்டிருந்தது
அந்தப் பழையப் புல்லாங்குழல்.

காலப்புயலின் கடுங்கோபத்தில்
கோலம் சிதைந்த அந்த புல்லாங்குழலை
ஊதும் முனைப்புகளை
ஊதித்தள்ளும்படி
உள்ளுணர்வுக் காற்று
உத்தரவு பிறப்பிக்க
என் மூங்கில் காட்டை நோக்கி
நடக்கிறேன் மௌனத்தில்
முகாரி இசைத்தபடி.


*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (3-Sep-15, 2:29 am)
பார்வை : 316

மேலே